Monday, March 25, 2013

பாற்கடல் பிறந்தவள்!


பங்குனி உத்திரத்தன்று (இன்று) அம்மாவின் (மகாலக்ஷ்மி) பிறந்த நாளாம்! Happy Birthday to our dearest amma!



சுப்பு தாத்தா மிகவும் அருமையாகப் பாடியிருக்கிறார்... நீங்களும் கேட்டு திருமகளின் அருள் பெறுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



பாற்கடல் கடைகையில் பதுமத்தில் வந்தாய்
பக்தியைக் கடைகையில் இதயத்தின் நின்றாய்
விடமது பரப்பிய இருளினைக் கொன்றாய்
அருள்விழி மாதவன் மனதினை வென்றாய்!

அழகெல்லாம் திரண்டு உன் னுருவாக...
அருளெல்லாம் திரண்டு உன் விழியாக...
கனிவெல்லாம் திரண்டு உன் மொழியாக...
கருணைக் கடலே உன் மனமாக...

நிதிக்கெல்லாம் அதிபதி ஆனாய் நீயே
பக்தரின் பெருநிதி ஆன என் தாயே
விதியினை விரட்டி உன்னிடம் வந்தேன்
அன்பெல்லாம் திரட்டி உன்னிடம் தந்தேன்!

கடைவிழிப் பார்வை கடையன்மேல் வேண்டும்
விடையில்லா வாழ்விற்கு விடைதர வேண்டும்
மதிமுகம் கண்டெனை மறந்திடல் வேண்டும்
திருமகளே உன் அருள்தர வேண்டும்!


--கவிநயா

Friday, March 22, 2013

அரைநொடி போதும்!



அரைநொடி போதும்!
(subbusir sings:
http://www.youtube.com/watch?v=x4kVi3DGo84&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=2 )

அழகியே !அங்கயற்கண்களால் எனை நீ
          அரைநொடி நோக்கினால் போதுமே!
மழைமுகில் கண்ட மயில்போல் என்மனம்
         ஆனந்தக் கூத்தாடுமே!
*1) சிறுமி வடிவில்வந்து அரசன் அணிந்திருந்த
                     வெண்முத்துமாலைதனைக் கழற்றி
       அருமைப் பிள்ளைத்தமிழ் ஆக்கிய குமரனுக்குப்
                    பரிசளித்தப் பாண்டி இளவரசி!
அழகியே !அங்கயற்கண்களால் எனை நீ
         அரைநொடி நோக்கினால் போதுமே!
மழைமுகில் கண்ட மயில்போல் என்மனம்
        ஆனந்தக் கூத்தாடுமே!
*2) வேந்தனின் ஐயத்திற்காளான 'ஐயா' தன்
                 திருஷ்டியைத் தீயிட்டுத் த்யாகம் செய்ய '
     "ஆனந்த ஸாகரம் " பாடுகையில் அவர்க்குப்
              பார்வையளித்த அருட்கடலே!
அழகியே !அங்கயற்கண்களால் எனை நீ
              அரைநொடி நோக்கினால் போதுமே!
மழைமுகில் கண்ட மயில்போல் என்மனம்
              ஆனந்தக் கூத்தாடுமே!
*3) பக்தியில் மூழ்கி "பாசமோசனி ..."எனப்
                   பாடித்தன்னை மறந்திருந்த
       முத்துப்பாடகர்க்கு முக்தியளித்த
               உத்தமியே!மீனலோசனி!
அழகியே !அங்கயற்கண்களால் எனை நீ
           அரைநொடி நோக்கினால் போதுமே!
மழைமுகில் கண்ட மயில்போல் என்மனம்
         ஆனந்தக் கூத்தாடுமே!
------------------------------------------------------------------------------------------------------

*1) அர்ச்சகரின் மகள்வடிவில் வந்த மீனாக்ஷி ,பிள்ளைத்தமிழ் பாடக்கேட்டு குமரகுருபரருக்கு திருமலைநாயகரின்
முத்துமாலையைப் பரிசளித்த கதை .

*2) 'ஐயாதீக்ஷிதர்'என்றழைக்கப்பட்ட நீலகண்ட தீட்சிதரிடம்
அரண்மனைச்சிற்பி ராணியின் சிலையின் வலது
முழங்காலுக்குமேல் சில்லு தெறித்து விட்டதாகச்சொல்லி
வருந்த ,அங்கு ஒருமச்சம் இருப்பதை திவ்யத்ருஷ்டியால்
அறிந்த ஐயா "தவறில்லை "என்று கூற,சிலையைக்கண்ட
மன்னர் விஷயம் அறிந்ததும் ,ஐயா மீது சந்தேகங்கொண்டு
கைது செய்து அழைத்துவர ஆளனுப்ப,மீனாக்ஷி பூஜையில்
ஆழ்ந்திருந்த ஐயா திவ்யத்ருஷ்டியால் நடந்ததைஅறிந்து
தீபாராதனைக்கற்பூரத்தால்கண்களைச்சுட்டுக்கொண்டு
பார்வை இழந்தார்.அவரது தூய்மையை உணர்ந்த
மன்னன் வருந்தி மன்னிப்பு கேட்க ,ஐயா ஆனந்த சாகர ஸ்தவம்
என்ற துதிபாடுகையில் பார்வை மீண்டதாகப்படித்தேன் !

*3) முத்துசாமி தீட்சிதர் மீனாட்சியின் முன் அமர்ந்து
"மீனலோசனி !பாசமோசனி !.."என்று பாடியவண்ணம்
பக்தியில் தன்னைமறந்து அமர்ந்திருக்கையில் அவள்
பதத்தில் இணைந்துவிட்டதாகப்படித்தேன்

நன்றி:அமரர் ர .கணபதியின் "தெய்வத்தின் குரல்"







Monday, March 18, 2013

பிள்ளை மனம் புரியலையோ?


சுப்பு தாத்தா மோஹனத்தில் உருகியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள். மிக்க நன்றி தாத்தா!




அன்பாலே அழைக்கும் குரல் கேட்கலையோ
அழகு தேவதைக்கு இரங்கி வர மன மில்லையோ?
உன்பாலே உருகும் உள்ளம் தெரியலையோ
என்றன் அன்னைக் கிந்தப் பிள்ளை மனம் புரியலையோ?

நினையாமல் ஒரு நொடியும் கழிவதில்லை
உன்னை வணங்காமல் ஒரு பொழுதும் விடிவதில்லை
உன்மேல் அன்பைப் பொழிவதற்கே பிறப்பெடுத்தேன்
அந்த அன்பை உனக்குச் சொல்வதற்கே கவி வடித்தேன்

அலை ஓயும் முன்னே நீ வர வேணும்
தலை மேலே தளிர்ப் பாதம் பட வேணும்
சிலை தாங்கும் கரத்தாளே வர வேணும்
விலை யில்லாப் பேரன்பைத் தர வேணும்!

--கவிநயா

Monday, March 11, 2013

கோடிக் கோடிக் கண் வேண்டும்!



சுப்பு தாத்தா ரேவதி ராகத்தில் பாடி அசத்தியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



அழகு மலர்ப் பாதம் காணக் கோடிக் கோடிக் கண்வேண்டும்
குழைந் ததனைத் தமிழில் பாடக் கோடிக் கோடிப் பண் வேண்டும்
அரு மறைகள் ஓதும் நல்ல மாத வர்களும் கொண்டாடும்
திருப் பதங்கள் பணிந்து விட்டால் தீ வினைகளும் திண்டாடும்!

விண் ணவரைக் காக்க வென்று விரைந் திரங்கி வந்தவளே
கண் ணெழிலால் கணப் பொழுதில் காமே சனையும் வென்றவளே
பண்டா சுரனை வதைத் திடவே பதின்மளா யுதித்தவளே
கண்டோ ரெல்லாம் வியந் திடவே சிதக் னியில் பூத்தவளே!

பிரம்மா, விஷ்ணு, ருத்ரனோடு ஈசன் சதா சிவனென்ற
பஞ்ச பிரம்மாக் களையும் தமது மஞ்சமாகக் கொண்டவளே
பஞ்ச பிரம்ம வடிவாகி ஐந் தொழிலும் செய்பவளே
அஞ்ஞான மெனும் பஞ்சம் நீக்கித் தஞ்சம் தரும் தூயவளே!

அலை மகளும் கலை மகளும் சாம ரங்கள் வீசிடவே
முனிவர் களும் தேவர் களும் பாதம் பணிந்து போற்றிடவே
கரத்தி லுள்ள கரும்பைப் போலக் கனிந்த மனம் கொண்டவளே
சிரத்தி லுன்றன் பாதம் வைத்து அருள வேண்டும் தேவியளே!!

--கவிநயா

படத்துக்கு நன்றி: ஷைலன்

Monday, March 4, 2013

மேகம் சொன்ன சேதி...




சுப்பு தாத்தா ஷண்முகப்ரியா ராகத்தில் இனிமையாகப் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!

 
ஓடி வந்த மேகம் ஒன்று சேதி சொன்னது
ஓடம் இந்த வாழ்வில் உன்றன் நாமம் என்றது
பாடம் இதனைக் கற்றுக் கொண்டால் போதும் என்றது
தேடும் யாவும் நம்மை வந்து நாடும் என்றது

நீரைச் சுமந்து அலையும் என்னைப் பாரேன் என்றது
சுமையை இறக்க மழையைப் பொழிந்தால் போதும் என்றது
கவலை களைச் சுமந்து வாழ்வ தேனோ என்றது
அன்பைப் பொழிந்து வாழ்ந்து விட்டால் போதும் என்றது

காடும் மேடும் யாவும் ஒன்றுதானே என்றது
வாழ்வும் தாழ்வும் எல்லாம் ஒன்றுதானே என்றது
அன்னை யுன்றன் பாதத் தூளி போதும் என்றது
உண்மை உணர்ந்த பின்னே அமைதி சூழும் என்றது!


--கவிநயா

Friday, March 1, 2013

அம்மா எனும் அதிசயம் !


அம்மா எனும் அதிசயம் !
(subbusir sings:
http://www.youtube.com/watch?v=RFi3rCpPQ60&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1 )


அம்மா...அம்மா ...அம்மா ...இந்த
மூவெழுத்தே திவ்ய ரகசியமோ?-மனித
மூளைக்கு எட்டாத அதிசயமோ?

"ஆயிரம் நாமங்கள்"ஜெபித்ததில்லை-அன்பாய்
"அம்மா!"என்றுதான் உனை அழைத்தேன்-இந்த
மூவெழுத்தை நான் மொழிகையிலே-என் நா
தேவாமிருதமாய் தித்திப்பதென்ன?

அம்மா...அம்மா ...அம்மா ...இந்த
மூவெழுத்தே திவ்ய ரகசியமோ?-மனித
மூளைக்கு எட்டாத அதிசயமோ?

செங்கிருத "எழிலலை"த்துதிபாடி -சிவ
சங்கரி!நானுனைத் தொழுததில்லை-பொங்கும் 
அன்பிலே ''அம்மா!"எனும்போது -செவியில்
இன்பத்தேனாறு பாய்வதென்ன ?

அம்மா...அம்மா ...அம்மா ...இந்த
மூவெழுத்தே திவ்ய ரகசியமோ?-மனித
மூளைக்கு எட்டாத அதிசயமோ?

தேனிறை வண்ண மண மலர் தூவி -பஞ்ச
பாணி! நானுனைப்  பணிந்ததில்லை -அபி
ராமித்தாயுனை நினைத்ததுமே -நெஞ்சில்
பாமலர் உனக்காகப் பூத்ததென்ன ?

அம்மா...அம்மா ...அம்மா ...இந்த
மூவெழுத்தே திவ்ய ரகசியமோ?-மனித
மூளைக்கு எட்டாத அதிசயமோ?