Monday, April 26, 2021

அடைக்கலம் நீயே

 

அடைக்கலம் நீயே அம்பிகையே

அருட்புனலே உன்றன் திருப்பதமே கதியே

(அடைக்கலம்)

 

கடை விழிப் பார்வை உடன் வர வேண்டும்

விழித் துணையே என்றன் வழித் துணையே

(அடைக்கலம்)

 

வினைச் சுமை தீர கடை நிலை சேர

கருத்தினில் வந்து நிலைப்பாயே, உன்றன்

அருட்கரம் தந்து காப்பாயே

 

மாயை என்னும் திரை மயக்கம் தரும் வேளை

தாயே என் மயக்கம் தீர்ப்பாயே

மாயே மடி யேந்தி காப்பாயே

(அடைக்கலம்)


--கவிநயா


Tuesday, April 20, 2021

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி

ஒரு மாறுதலுக்காக இன்றைக்கு சொந்தப் பாடலுக்கு பதில், எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பாடல்... 

அம்மன் பாட்டிற்குத் தொடர்ந்து வருகை தரும் அனைவருக்கும் நன்றிகளும், வணக்கங்களும்.

    

ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி

ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி

நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி

(ஸ்ரீ சக்ர) 

பலவிதமா யுன்னைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடுமன்பர் பதமலர் சூடவும்

உலக முழுதும்என தகமுறக் காணவும்
ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி

(ஸ்ரீ சக்ர) 

உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டிவைத்தாய்

நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி

(ஸ்ரீ சக்ர) 

துன்பப் புடத்திலிட்டு தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்தமுன் மாயம்நீக்கிப் பிறந்த பயனைத்தந்தாய்

அன்பைப் புகட்டியுந்தன் ஆடலைக் காணச்செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி

(ஸ்ரீ சக்ர) 




Monday, April 12, 2021

வேண்டும்

 

அன்பு மிக நிறைந்த மனம் வேண்டும்

அன்னையுன் திருவடி நிழல் வேண்டும்

சின்ன இதழில் குறு நகை வேண்டும்

உன்றன் அருட்பார்வை யென்றன் திசை வேண்டும்

(அன்பு)

 

சுவாசத்துடன் உன்நினைவே ஓட வேண்டும்

நெஞ்சத்தின் துடிப்பு உன்னைப் பாட வேண்டும்

எந்த நிலையிலும் உன்னை நாட வேண்டும்

உன்றன் அருளையே என்றும் தேட வேண்டும்

(அன்பு)

 

வந்தவினை வருவினை போக வேண்டும்

வெந்த மனம் உன் நினைவில் ஆற வேண்டும்

நெஞ்சம் உன்றன் கஞ்சப் பதம் தாங்க வேண்டும்

கொஞ்சு தமிழ் கொண்டு உன்னைப் போற்ற வேண்டும்

(அன்பு)



--கவிநயா


Monday, April 5, 2021

பதமன்றி கதியில்லை

 

உன்னிரு காலில் உடல்விழ வேண்டும்

உள்ளத்தில் நீயே நிலைபெற வேண்டும்

உருகி உருகி உன்னைத் தொழுதிட வேண்டும்

அருகில் அருகில் வந்து அருளிட வேண்டும்

(உன்னிரு)

 

எத்தனை கோடி கருவினில் இருந்தேன்

எத்தனை பிறவியுன் நினைவின்றித் திரிந்தேன்

இப்பிறவியில் உன்றன் நினைவினை அடைந்தேன்

பொற்பதமன்றி கதியில்லை உணர்ந்தேன்

(உன்னிரு)

 

பற்றெல்லாம் விட்டு விட்டு உன்னைப் பற்ற வேண்டும்

தொட்டதும் தொடர்வதும் உன்நினை வாக வேண்டும்

விட்டதும் விடுவதும் இருவினை யாக வேண்டும்

நற்றமிழால் உன்னை அனுதினம் பாட வேண்டும்

(உன்னிரு)



--கவிநயா