Monday, March 29, 2021

உன்னை நம்பி...

 

உன்னை நம்பி இந்த

உலகினில் வாழ்கின்றேன்

கண்மணியே தாயே

கருத்தினில் வருவாயே

(உன்னை)

 

நீயே கதியென்று

உன்னைத் தேடி ஓடி வந்தேன்

தாயே நீ காப்பாய்

என்று உன்னை நாடி வந்தேன்

(உன்னை)

 

பனித்த சடை ஈசன்

பக்கத்தில் இருப்பவளே

கருத்த விடம் நிறுத்தி

கணவனைக் காத்தவளே

 

சீறி வரும் சிம்மத்தில்

ஏறி வரும் தேவியளே

கூறி வரும் உன்மகளை

மாரில் அணை மலைமகளே

(உன்னை)



--கவிநயா


Monday, March 22, 2021

பிழை செய்தாலும் பிள்ளையன்றோ?

 

என்ன பிழை செய்தாலும்

உன்றன் பிள்ளை நானன்றோ

அன்னை என ஆன பின்னே

பொறுப்பதுன் கடனன்றோ

(என்ன)

 

ஆதி முதல் ஆனவளே

அண்ட மெல்லாம் பூத்தவளே

சோதி வடிவானவளே

சொக்கர் அருகி ருப்பவளே

(என்ன)

 

கண்டவர்கள் சொன்னார்கள்

கருணை உன் வடிவமென்று

அன்பு கொண்டு அழைத்து விட்டால்

ஓடி அருள் புரிவை யென்று

 

அன்பு இல்லா என் மனமும்

உன்றனுக்குச் சம்மதமோ

அன்பை என்று தருவாயோ

என்றென் மனம் அமர்வாயோ

(என்ன)

 

--கவிநயா



Monday, March 15, 2021

தத்தித்தோம்

 

தத்தித்தோம் தகதித்தோம் என்று ஆடவா

தந்தனத்தோம் தாளஞ் சொல்லிப் பாட்டுப் பாடவா

(தத்தித்)

 

சிந்தித்தே உன்றன் நாமம் என்றும் ஓதவா

வந்தித்தே உன்றன் பாதம் சென்னி சூடவா

(தத்தித்)

 

செந்தமிழில் உன் புகழைப் பாட வேணுமே

நொந்தமனங் குளிர உன்னை நாட வேணுமே

சொந்தமெல்லாம் நீயென்று உணர வேணுமே

சிந்தையெல்லாம் நீ மட்டும் நிறைய வேணுமே

(தத்தித்)



--கவிநயா


Monday, March 8, 2021

ஆட்கொண்டருள்வாய்

 

ஆட்கொண்டருள்வாய் அம்பிகையே

பூக்கொண் டுனையே பூசித்தேன் உமையே

(ஆட்கொண்டருள்வாய்)

 

நாளும் உன் நாமம் நாவினில் தேனாக

வாழும் வாழ்வெல்லாம் உன்திருப் பணியாக

(ஆட்கொண்டருள்வாய்)

 

நாடும் துன்பங்கள் நொடியினில் தூசாக

தேடும் பொருள் யாவும் தேவியுன் பதமாக

பாடும் பண்ணெல்லாம் உன் திருப்புகழாக

வாடும் என்னிதயம் நீ தங்கும் வீடாக

(ஆட்கொண்டருள்வாய்)



--கவிநயா


Monday, March 1, 2021

என் தங்கம்!

 

தங்கமே வைரமே

தத்தி வரும் அன்னமே

காணாமல் வாடுகின்றேன் சுவர்ணமே, உன்னைக்

கண்டு விட்டால் இங்கு வரும் சுவர்க்கமே

(தங்கமே)

 

ஓடி வரும் ஆற்றைப் போல

ஓடுகின்ற இந்த வாழ்வு

உன்னை நோக்கி ஓட வேண்டும் சுவர்ணமே, உன்னைக்

கண்டு விட்டால் இங்கு வரும் சுவர்க்கமே

(தங்கமே)

 

தாளாத துயர் கூட

தக்ஷணத்தில் ஓடி விடும்

கேளாத இன்ப மெல்லாம்

தேடி வந்து கூடி விடும்

உன்னை மட்டும் கண்டு கொண்டால் சுவர்ணமே, உன்னைக்

கண்டு விட்டால் இங்கு வரும் சுவர்க்கமே

(தங்கமே)


--கவிநயா