Monday, November 28, 2016

என் மனத் தேரினில்...



கீதாம்மாவின் குழையும் குரலில், ரஞ்சனி ராகத்தில். மிக்க நன்றி அம்மா! 

என் மனத் தேரினில் உன் நாமம்

ஊர்வலம் போகுது எந்நாளும்

(என் மனத் தேரினில்)



சிந்தையிலே தித்திக்கின்ற தேனூறும்

எந்தையுடன் உந்தனையே எண்ணுந் தோறும்

(என் மனத் தேரினில்)



கருவிழிக் கடலினில் கருணை பொங்கும், அதில்

இருவினைகளும் எமை நெருங்க அஞ்சும்

சுகம் எது எது என அலையும் நெஞ்சம்

அலைந்த பின் உன்னிடத்தில் அடையும் தஞ்சம்

(என் மனத் தேரினில்)


--கவிநயா 

Monday, November 21, 2016

அம்மா என்றுனை அழைக்க....




சிவரஞ்சனி ராகத்தில் கீதாம்மாவின் குழையும் குரலில் 

அம்மா என்றுனை அழைக்க

அன்பால் என் நா மணக்க

வருவாயே மனம் இனிக்க

அருள்வாயே உளம் களிக்க

(அம்மா)



அகிலங்கள் யாவையுமே

ஆக்கிய என் அருமைத் தாயே

புவனங்கள் யாவிலுமே

பூத்திருக்கும் பூவை நீயே

(அம்மா)



பிறவியிது உனதருளாலே

இன்ப துன்பம் உனதருளாலே

உன் நினைவு உனதருளாலே
உனைப் பாடுவதும் உனதருளாலே

(அம்மா)


--கவிநயா 


Monday, November 14, 2016

நாளும் உன்னை நினைக்க வேண்டும்



கீதாம்மாவின் இனிய குரலில், இசையில் 

நாளும் உன்னை நினைக்க வேண்டும்

நாயகியே துதிக்க வேண்டும்

காணும் பொருள் யாவினிலும்

கனிமுகமே காண வேண்டும்

(நாளும்)



சோதனைகள் வந்தாலும்

சோகத்திற்கு வேலையில்லை

வேதனைகள் தீர்த்திட என்

தாயென் னருகில் இருக்கையிலே

(நாளும்)



சஞ்சலங்கள் கொண்ட போதும்

செவ்வடிகள் பற்றிக் கொண்டால்

அஞ்சலென்று சொல்லிடுவாய்

அன்புடனே காத்திடுவாய்



பஞ்சு மலர்ப் பாதங்களை

பக்தியுடன் பற்றிக் கொண்டால்

அஞ்சலென்று சொல்லிடுவாய்

அரவணைத்துக் காத்திடுவாய்

(நாளும்)


--கவிநயா 

Monday, November 7, 2016

மனமெல்லாம்...



கீதாமாவின் மனதை உருக்கும் குரலில், இசையில்

மனமெல்லாம் உன்னை

மணக்க வைத்தாய்

தினம் என் நாவை உன்னைத்

துதிக்க வைத்தாய்

(மனமெல்லாம்)



விஞ்சும் நிலவெழில் வதனம்

மன வானில் தவழும்

கொஞ்சும் வண்ணத் தமிழதனை

எண்ணி எண்ணிப் புகழும்

(மனமெல்லாம்)



அன்னை உந்தன் நாமம்

எந்தன் நெஞ்சில் ஊறும்

அன்புச் சுனையில் தோயும்

அமுதெனவே பாயும்

(மனமெல்லாம்)



எந்தன் நெஞ்சம் என்றும்

உன் நினைவில் ஒன்றும்

ஆவின் இளங் கன்றாய்

உந்தன் மடியில் துஞ்சும்

(மனமெல்லாம்)


--கவிநயா