Monday, September 27, 2021

அன்னை மீனாட்சி உமையே - 2

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

முடியினில் பிறைமதி துலங்கிட வதனத்தில்

முழுமதி ஒளி வீசிட

 

உச்சியில் ஓர் திலகம் ஒளிர்ந்திட அதனொளியில்

கதிரவன் கண் கூசிட

 

கார் மேகம் போலவே அலைகின்ற கருங்கூந்தல்

காதோரம் கதை பேசிட

 

மானொத்த கருவிழிகள் நாணத்திலே சிவந்து

கறைக்கண்டன் முகம் நோக்கிட

 

மீனாடும் விழியாளே தேனாடும் மொழியாளே

மலையரசன் பிரிய மகளே

 

அழகான மதுரையை வளமாக ஆள்கின்ற

அன்னை மீனாட்சி உமையே

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்--கவிநயாWednesday, September 22, 2021

அன்னை மீனாட்சி உமையே - 1


(1)

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

சுந்தரி நிரந்தரி சந்திர ஜடாதரி

சங்கரி சௌந்தரியே

 

அந்தரி அனந்தரி அகிலாண்ட நாயகி

ஆதி நீ ஜோதி நீயே

 

பார் போற்றும் தேவியே பூலோகம் மீதிலே

நான் போற்றும் அன்னை நீயே

 

கார் மேகம் போலவே கருணையைப் பொழிகின்ற

கன்னியே கனிவின் வடிவே

 

மீன் போன்ற விழியாலே மேதினியைக் காக்கின்ற

மங்கையே மாதரசியே

 

அழகான மதுரையை வளமாக ஆள்கின்ற

அன்னை மீனாட்சி உமையே

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

 

--கவிநயா


Wednesday, September 15, 2021

உன்னருளால்

 

அம்மா உன்னருளாலே உலகம் இயங்குது, அந்த

உலகத்திலே வாழுமென்றன் உள்ளம் கலங்குது

பந்தம் என்றும் பாசம் என்றும் பற்றித் தயங்குது

உன்னைச் சொந்தம் கொண்டதாலே கொஞ்சம் தெளியுது

 

அம்மா உன் நாமந்தானே நாவில் உலவுது

அதைச் சொல்லச் சொல்லக் கண்களிலே நீரும் பெருகுது

திருமுகத்தை நினைக்கையிலே உள்ளம் குளிருது

அந்தக் குளிர்ச்சியிலே மேனியெங்கும் புளகம் அரும்புது

 

திருவடிகள் பணிந்தவர்க்குத் துன்பங்கள் இல்லை

உன் எழில் வடிவம் காண்பதுவே இன்பத்தின் எல்லை

துயரமற்ற வாழ்க்கை யென்று இங்கெதும் இல்லை

தாயுன்றன் துணையிருந்தால் தொல்லைகள் இல்லை

 

 --கவிநயா


Friday, September 10, 2021

ஆனையான அன்னை

 ஆனையான அன்னை

----------------------

அடியாரிடர் களைய,

       அன்பர் துன்பம் தொலைய

பிடியாய் உருவெடுத்த

      உமையன்னை,

 களிறான அரன் துணையில்

      கரிமுகனைப் பயந்தளித்த

திருநாளாம் சதுர்த்தியைக்

 கொண்டாடுவோம்


கஜாசுரனை வென்று 

       எலியாக்கி ஏறி வந்த

கலியுகக்கடவுளாம் கணபதியை

அன்னை நமக்களித்த 

நன் நாளாம் சதுர்த்தியில்

சிவசக்தி சுதனின் துதி பாடுவோம்.


(சம்பந்தரின் வலி வலப்பதிகம்->


பிடியதன் உருஉமை கொளமிகு கரியது த்

வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்

கடிகண பதிவர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே.)

Tuesday, September 7, 2021

உனக்கிது அரிதா?


எல்லாச் செயலும் உன்னருளாலே

என்றறிந்தாலும் தாயேஎன்

உள்ளம் ஏனோ சஞ்சலமாகுது

துன்பம் வந்தாலே தானே

 

கனிவைப் பொழியும் உன் பார்வையிலே

நனையத் தானே தாயே

நாளும் பொழுதும் அலைபோல் அலைந்தும்

நாடுகின்றேன் உனை நானே

 

நாயேனின் பிழை எதுவானாலும்

நீதான் பொறுத்திட வேணும்

சேயென என்னை அன்பால் அணைத்து

நீதான் காத்திட வேணும்

 

வேதம் போற்றும் தாயே உனக்கென்

வேதனை தீர்த்திடல் பெரிதோ?

நாதன் கண்டத்தில் விடத்தை நிறுத்திய

உனக்கெந்தச் செயலும் அரிதோ?

 

 

--கவிநயா