Tuesday, March 22, 2022

பரம சுகம்

பரம சுகம் உன்றன் பாதம், அதைப்

பற்றிக் கொண்டால் ஏது சோகம், சோகம்?

(பரம)

 

வருவதும் போவதும் போகட்டும் போகட்டும்

இருப்பதும் நிலைப்பதும் உன் நினைவாகட்டும்

(பரம)

 

உன் பதமே நினைத்து உன் பெயரே ஜெபித்து

உன் நினைவில் திளைத்து உன் புகழில் களித்து

தினந்தினம் உனைப்பாடி, திருவடிதனை நாடி

அடைந்திடுவேன் தேடி, அன்புடன் பண்பாடி

(பரம)

 

--கவிநயா


 

Monday, March 14, 2022

மயிலிறகாய் வா


மயிலிறகாய் வருடிவிட வா அம்மா, என்

மனக் கவலை தீரும் உன்னால் தானம்மா

(மயிலிறகாய்)

 

ததியைப் போல உழலும் பிள்ளை பாரம்மா, இந்த

நதி கடலைச் சேர்வதென்றோ கூறம்மா

(மயிலிறகாய்)

 

பாதம் பற்றிக் கொண்டேன், என்

பற்றை நீக்க வருவாய்

கதறிக் கண்ணீர் வடித்தேன், என்

 பிறவி தீர்க்க வருவாய்

 

வேதவல்லி நீயே, என்

வேதம் உன்றன் பேரே

போற்றுவது உனையே, நிதம்

பாடுவதுன் புகழே

(மயிலிறகாய்)

 

--கவிநயா


Monday, March 7, 2022

நீயே உறவு


உறவென்று உன்னைக் கொண்டேன் தாயே

விரைவாக என்னைக் காண வாயேன்

(உறவென்று)

 

உனைக் காண ஏங்கும் பிள்ளை

உனை எண்ணிப் பாடும் கிள்ளை

 

முகம் காட்டத் தாமதமேனோ தாயே, என்றன்

அகம் காண மறுப்பதேனோ நீயே

(உறவென்று)

 

விதியாலே மயங்குகின்றேன்

தள்ளாடித் தயங்குகின்றேன்

 

துணையாக உன்னைக் கொண்டேன் தாயே

கரம் தந்து காக்க வேணும் நீயே

(உறவென்று)

 

--கவிநயா