Monday, September 10, 2018

தொழுதேன் உன் பாதம்


தொழுதேன் உன் பாதம் தொழுதேன் அம்மா
அழுதேன் உனைத் தேடி அழுதேன் அம்மா
(தொழுதேன்)

சித்தத்தில் நீ இருந்தால் சுகமாகும், நீ
சித்தம் வைத்தால் அனைத்தும் நலமாகும்
(தொழுதேன்)

வாழ்வினில் பழுதில்லை, நீ தந்தது, எந்தன்
மனதில் பழுதுண்டு நான் கொண்டது
உன்னிடத்தில் அன்பு, நீ தந்தது, உந்தன்
அளவில்லா அருளை நான் என்னென்பது?
(தொழுதேன்)


--கவிநயா


Monday, September 3, 2018

சின்மய ரூபிணி



(மஹிஷாசுர மர்த்தினி விருத்தம்)

சின்மய ரூபிணி ஸ்ரீசக்ர வாசினி சிம்மத்தில் வருபவளே
தண்மலர் போலெந்தன் உள்ளத்தில் குளிர்ந்து துன்பத்தைத் தணிப்பவளே
விண்ணவர் போற்றிட வேதனை தீர்த்திட உதித்திட்ட தேவியளே
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்திடு துர்க்கையளே

கருவிழி யிரண்டும் கடலெனக் கருணை பொழிந்திட அருள்பவளே
கருநிறக் கண்டன் சிவனுடன் இணைந்தே காத்திட வருபவளே
ஹரஹர வென்றே அடிதொழும் அன்பர்க்கு ஆதரவளிப்பவளே
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்திடு துர்க்கையளே

ஆனை முகனுடன் அறுமுகன் தன்னையும் தந்திட்ட தாயவளே
ஊனும் உருகிடும் அன்பு நிலை தனைத் தந்திடு தூயவளே
தேனிசை மொழியால் நாயகன் உள்ளத்தைக் கவர்ந்திட்ட தேவியளே
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்திடு துர்க்கையளே

கல்கல்கல்லெனக் காற்சிலம் பொலித்திடத் திருநடம் புரிபவளே
செல்செல்செல்லெனத் துன்பத்தை விரட்டி இன்பத்தைத் தருபவளே
ஓம்ஓம்ஓமென ஓதிடும் அன்பர்க்கு அபயம் அளிப்பவளே
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்திடு துர்க்கையளே

அம்மா என்றுனை அழைத்தால் போதும் அக்கணம் வந்திடுவாய்
சும்மா உன் பெயர் சொன்னால் கூட சுகமதைத் தந்திடுவாய்
ஒரு முறை உன்னை நினைத்தாலும் அதைப் பெரிதென் றேற்றிடுவாய்
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்தெமக் கருளிடுவாய்



--கவிநயா


Monday, August 27, 2018

அழகி!



உன் நினைவே நெய்யாக
உன் நாமம் திரியாக
முக மதியே சுடராக
விளக்கேற்றினேன், அம்மா
என் மனமாம் கோவிலிலே
ஒளியேற்றினேன்

கதிரவனைக் கண்டாலுன்
கண்ணொளியே தோணுதடி
நிலவொளியின் தண்மையிலுன்
கருணை முகம் காணுதடி

தென்றல் காற்றின் தழுவல் போல
உன்பார்வை என்னைத் தழுவுதடி
அலைகள் பேசும் ரகசியமாய்
மேகக் கூந்தல் அலையுதடி

சலசலக்கும் நதியைப் போல
கால் கொலுசு குலுங்குதடி
களிச் சிரிப்பைப் போல வளையல்
கலகலத்துப் தோற்குதடி

அம்மா உன் அழகைச் சொல்ல
சிறு பெண்ணால் ஆகிடுமோ?
வைத்த விழி வாங்காமல்
பார்த்தாலும் (ஆவல்) தீர்ந்திடுமோ?


--கவிநயா

Monday, August 20, 2018

என் நிலவு


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

என் மன வானில் ஒரு நிலவு
தினம் தினம் தோணுதந்த முழு நிலவு
(என்)

நிலவு உலவுகையில் ஒளி பெருகும், அந்த
நிலவின் ஒளியினில் களி பெருகும்
(என்)

நினைவினில் அவள் முகம் நிலவாகும்
ஒரு நொடி மறந்தாலும் இருள் சூழும்
ஒரு தரம் பெயர் சொன்னால் சுகமாகும், அவள்
மதிமுகம் என் நெஞ்சின் துடிப்பாகும்
(என்)


--கவிநயா

Monday, August 13, 2018

உலகமெல்லாம்...


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

உலகமெல்லாம் உன்னுருவே
உள்ளமெல்லாம் உன் நினைவே
(உலகமெல்லாம்)

நிலமாய் நீராய் நெருப்பாய் காற்றாய்
வெளியாய் விரிவது உன்னுருவே
நினைவாய் நிஜமாய் ஒளியாய் வழியாய்
உள்ளே ஒளிர்வது உன்னுணர்வே
(உலகமெல்லாம்)

ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை
அனைத்தும் ஆக்கிய துன்னருளே
சேயாய் அந்த உயிர்களை யெல்லாம்
தாயாய் அணைப்பது உன்னருளே

உன்னை நினைத்தல் உன்னருளே
உன்னைப் புகழ்தல் உன்னருளே
உன்னைப் பணிதல் உன்னருளே
உந்தன் கருணை உன்னருளே
(உலகமெல்லாம்)


--கவிநயா