Wednesday, April 25, 2007

கருமாரி அம்மன் பாடல்3


(தொடர்ச்சி...)

அன்புக்கே நானடிமை ஆக வேண்டும்,
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்,
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்,
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்,
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்,
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்,
என் பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்,
என்னோடு நீயென்றும் வாழ வேண்டும் (கற்பூர நாயகியே)

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை,
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை,
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை,
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை,
செம்பவள வாயழகி உன்யெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை,
அம்பளவு விழியாளே உன்னை என்றும்!
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை (கற்பூர நாயகியே)

காற்றாகி கனலாகி கடலாகினாய்,
கருவாகி உயிராகி உடலாகினாய்,
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்,
நிலமாகி பயிராகி உணவாகினாய்,
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்,
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்,
போற்றாத நாளில்லை தாயே உன்னை,
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை. (கற்பூர நாயகியே)


முற்றும்)

Tuesday, April 24, 2007

கருமாரி அம்மன் பாடல்2


கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்,
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்,
பண்ணமைக்கும் நா உன்னயே பாட வேண்டும்,
பக்தியோடு கை உனையே கூட வேண்டும்,
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்,
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்,
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா,
மக்களுடைய குறைகளையும் தீருமம்மா ( கற்பூர நாயகியே)

நெற்றியிலே குங்குமமே நிறைய வேண்டும்,
நெஞ்சில் உன் திருநாமம் வழிய வேண்டும்,
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்,
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்,
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்,
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்,
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லாமா?
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா? ( கற்பூர நாயகியே)

அன்னைக்கு உபகாரம் செய்வதுண்டோ?
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ?
கண்ணுக்கு இமையின்றி காவலுண்டோ?
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ?
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ?
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ?
எண்ணைக்கும் விளக்குக்கும் பேதமுண்டோ?
என்றைக்கும் நான் உந்தன் பிள்ளையன்றோ? ( கற்பூர நாயகியே)

(தொடரும்)

Monday, April 23, 2007

கருமாரி அம்மன் பாடல்1


எனக்கு பிடித்த இந்த கருமாரி அம்மன் பாடலிலுள்ள ஒன்பது பத்தியில் மூன்று மூன்றாக மூன்று நாட்கள் எழுதவிருக்கிறேன்.

நன்றி


கற்பூர நாயகியே ! கனகவல்லி,
காளி மகமாயி கருமாரியம்மா,
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா,
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா,
விற்கோல வேதவல்லி விசாலாட்சி,
விழிகோல மாமதுரை மீனாட்சி,
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே,
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே (கற்பூர நாயகியே)

புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி,
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி,
நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி,
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி,
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி,
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி,
உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி,
உன்னடிமைச் சிறியேனை நீ ஆதரி (கற்பூர நாயகியே)

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவிடத்தில் முறையிடுவேன் தாயே ! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற,
அன்னியரை கெஞ்சிடுதல் முறையோ அம்மா,
கண்ணீரை துடைத்து விட ஓடிவாம்மா,
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா,
சின்னவளின் குரல் கேட்டு முகம் திருப்பு,
சிரித்தபடி என்னை தினம் வழியனுப்பு (கற்பூர நாயகியே)

Sunday, April 22, 2007

ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!

இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என்று இதைச் சொல்லலாமா?

தாய் மூகாம்பிகை திரைப்படத்தில், கவிஞர் வாலி எழுதிய அருமையான பாடல்!
அதை இசைஞானி தன் "கரகர"ப்ரியா குரலில், உள்ளம் உருகப் பாடுகிறார் :-)

கல்யாணியைப் பற்றி கல்யாணி ராகத்தில்.
இளையராஜாவுடன், சுரேந்தர் மற்றும் தீபன் சக்ரவர்த்தி உடன் பாடுகிறார்கள்!

சரி, இந்தப் பாடலை ஏன் நாம், இன்று கேட்க வேண்டும்?
இன்று சங்கர ஜெயந்தி!

இந்து மதம் தழைக்க வந்த இரு பெரும் பேராசிரியர்கள் - ஜகத் குருக்கள் - ஆச்சாரியர்கள் ஸ்ரீ ராமானுசர், ஆதி சங்கரர்
- இருவரின் அவதார நாளும் இன்று தான்! சித்திரைத் திருவாதிரை நன்னாள்! (Apr 22, 2007)

இப்படி, பிறந்த நாளே ஒன்றாகி, சைவமும் வைணவமும் ஒன்றாகத் தழைப்பது எவ்வளவு இனிய காட்சி!


ஆதிசங்கரர் எழுதிய செளந்தர்ய லஹரி தோத்திரத்தின் முதல் சுலோகத்துடன் பாடல் துவங்குகிறது!

(சிவ, சக்த்யா யுக்தெள,
யதி பவதி, சக்த ப்ரபவிதும்,
ந சேத் ஏவம், தேவோ ந கலு
குசலஹ ஸ்பந்திதும் அபி!

அதஸ் த்வாம், ஆராத்யாம்,
ஹரி, ஹர, விரிஞ்ச, ஆதி பிர் அபி,
பிரணந்தும், ஸ்தோதும் வா,
கதம் அக்ருத புண்யப் ப்ரபவதீ?)

ஜனனி ஜனனி - ஜகம் நீ அகம் நீ
ஜகத்-காரணி நீ பரி-பூரணி நீ


ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே


ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி  

ஜனனி  ஜனனி ...

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங் கழலே மலை மாமகளே


அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
ஜனனி ஜனனி 

ஜனனி ஜனனி...

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்(து) ஏத்துவதும் மணி நேத்திரங்கள்


சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..

ஒவ்வொரு கச்சேரியிலும், ராஜா
ஜனனி ஜனனி என்று பாடித் தான் துவக்குகிறார்!
இதோ, அவர் கச்சேரி ஒன்றிலிருந்து!
அப்பாவும், மகனும் சேர்ந்து பாடுகிறார்கள்.
அன்னை மீனாட்சியின் சித்திரைத் திருவிழா துவங்கி விட்டதல்லவா?
இந்தத் தருணத்தில், ஜகத்குரு ஆதி சங்கரர் அவர்களை நினைந்து வணங்கி, அவர் போற்றிய அன்னையின் பாதம் பணிவோம்!
ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!!

Tuesday, April 17, 2007

மதுரை மீனாட்சி


கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே,
சுந்தரேசர் மகிழும்... மயிலே
கதம்ப...வனக்குயிலே
மாதவர் போற்றும் எழிலே
பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே


கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்
அந்த அழகிய மாநகர் மதுரையிலே......மதுரையிலே
மதுரையிலே......மதுரையிலே

வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்
வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்
வானவர் பூமாரி பொழிந்திடவே
சிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்
மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)

தேனமர் சோலையாம் கதம்பவனம்
அங்கு வானளாவும் தங்க கோபுரம் எங்கும் காணும்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)


இந்த பாடலை கேட்டு மகிழ இங்கே சொடுக்கவும்


குறிப்பு: இந்த பாடலை பதிய விரும்பிய ஹேமபிரியா விற்கும், அதை பதிய வாயப்பளித்த திரு குமரன் அவர்களுக்கும் நன்றி.