Monday, November 30, 2009

சூரியனே, என் கிழக்கில் உதிக்கப் போறதெப்போ?

வடிவான ஒன் அழக மனசில் வடிச்சு வச்சேன் - நீ
பரிவா ஒரு வார்த்த பேசக் காத்துக்கிட்டு கெடக்கேன்

சூரியன் நீ எங் கெழக்கில் உதிக்கப் போறதெப்போ - எஞ்
சூரியனப் பாத்தெம் மனசு மலரப் போறதெப்போ?

காரிகையே ஒங் கருண கெடைக்கப் போறதெப்போ - நா
பகலிரவு பாராம பொலம்புறனே தப்போ?

பேரிகையா மொழங்கினாலும் கேக்கலையோ ஒனக்கு - நா
படற பாட்டப் பாத்தும் தீரலையோ பிணக்கு?

காடு பாக்கப் போகும் முன்னே வீடு பாக்க வேணும் - ஒன்
வீட்டுக்குள்ள என்னையும் நீ சேத்துக்கிட வேணும்

ஆயிரந்தான் அறிவிலியா இருந்தபோதும் நானும் - ஒம்
பிள்ளைகளில் ஒருத்திதானே நெனச்சுப் பாரு நீயும்


--கவிநயா

Monday, November 23, 2009

நெஞ்சம் இனித்திடும்...

Get this widget | Track details | eSnips Social DNA


இந்தப் பாடல் "மாதா ஸ்ரீ புவநேச்வரீ மனமகிழ் மாலை" என்ற இசைத்தட்டிலிருந்து...
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்
பாடல் & இசை: மாஸ்டர் ஸ்ரீதர்

நெஞ்சம் இனித்திடும் நினைவும் இனித்திடும்
நிர்மல வேணி உன்னை நினைக்கையிலே
நேரம் இனித்திடும் நாளும் இனித்திடும்
நித்யகல் யாணி உன்னை துதிக்கையிலே

(நெஞ்சம்)

பசியும் பறந்திடும் ருசியும் மறந்திடும்
பார்வதி தேவி உன்னை பார்க்கையிலே
பக்தி பிறந்திடும் சக்தி கிடைத்திடும்
பாலாம் பிகை உன்னைப் பணிகையிலே

(நெஞ்சம்)

வளமை பெருகிடும் வறுமை ஒழிந்திடும்
வரலக்ஷ்மி தேவி உந்தன் வருகையிலே
வாழ்வு மலர்ந்திடும் வாழ்க்கை மகிழ்ந்திடும்
வைஷ்ணவி தேவி உந்தன் கருணையிலே

(நெஞ்சம்)

கவலை விலகிடும் கலைகள் தெரிந்திடும்
சரஸ்வதி தேவி உந்தன் சரணத்திலே
ஞானம் நிலைத்திடும் ஞாலம் புகழ்ந்திடும்
புவனேஸ் வரி உந்தன் பாதத்திலே

(நெஞ்சம்)



அன்புடன்
கவிநயா

Monday, November 16, 2009

அண்டியவர்க்கவள் அன்னை!




அண்டியவர்க் கவள் அன்னை!
அல்லாதவர்க் கவள் சண்டி!
உன்னுபவர்க் கவள் அருள்வாள்!
உன்னா திருப்பினும் வருந்தாள்!

துண்டாய் அசுரரைத் துணிப்பாள்!
வெண்டா மரையிலும் இருப்பாள்!
கண்டா மணியெனச் சிரிப்பாள்!
செண்டாய் மலர்ந்துள் ளிருப்பாள்!

கண்ணாய் மணியெனக் காப்பாள்!
கரம்பிடித்தே கரை சேர்ப்பாள்!
விண்ணே வீழ்ந்திடும் போழ்தும்
பெண்ணே துணைநமக் கருள்வாள்!

எந்தன் அன்னை அவளே!
எதுவரினும் இனித் துவளேன்!
புதுமலர்ப் பாதம் பணிந்தே
மதுவன்பினில் முழுகிக் களிப்பேன்!

--கவிநயா

Monday, November 9, 2009

யாரிந்தப் பெண்?

வணக்கம். நலந்தானே?

ஒரு மாறுதலுக்காக ஆங்கிலத்தில் படிச்ச ஒரு பாடலைத் தழுவி இந்த பாட்டை எழுதினேன். "The Gospel of Sri Ramakrishna" புத்தகத்தில் பல அருமையான பாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கு. அவற்றுக்குமே மூலம் பெங்காலியா இருக்கும்னு நினைக்கிறேன். அதில் ஒரு பாடல்தான் இது. "Who is this Woman yonder who lights the field of battle?", என்று தொடங்கும்.




யாரிந்தப் பெண்?
இருள் சூழ்ந்த போர்க் களத்தில்
கதிரவன்போல் திரிகின்றாள்!

கருமேக நிறம் விஞ்சும்
பளபளக்கும் கருமேனி

கண்கூசச் செய்கின்ற
மின்னல்போல் பல்வரிசை

அலைகின்ற வேகத்தில்
கலைகின்ற கருங்கூந்தலுடன்

ஆங்காரச் சிரிப்புடனே
அசுரர்களை வதைக்கின்றாள்!

அச்சமூட்டும் போர்நடுவே
அயராமல் இருக்கின்றாள்!

முத்துமுத்தாய் வியர்வையவள்
புருவங்கள் மேல்துளிர்க்க

கொத்துமலர் இவள் கூந்தலென
தேனீக்கள் மொய்த்திருக்க

முழுமதியும் இவள் அழகைக்
கண்டுநாணி ஒளிந்துகொள்ள

அதிசயங்களுக் கெல்லாம் அதிசயமாய்
திகழ்கின்ற இந்தத் தேவதை யாரோ?

கண்டவர் மயங்குகின்ற
இந்த அதிரூப சுந்தரி யாரோ?

சிவன்கூட பிணம்போல
அவள் காலடியில் கிடக்கின்றானே!

பிடியதனின் கம்பீரத்துடன்
போர்க்களத்தில் திரிகின்ற இவள்...

யாரென்று நான் கண்டு கொண்டேன்!
இவள்தான் காளி!
அண்டங்களனைத்தையும் ஈன்ற என் அன்னை!!


--கவிநயா


Thursday, October 15, 2009

அன்னையே போற்றி !

அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்!





('செந்தமிழ் நாடெனும் போதினிலே' மெட்டு)

என்அன்னை என்னுயிர்த் தாயேஉன்னைநான்
எண்ணி அனுதினம் வணங்குகின்றேன்
நீயேஎன் கதிஎன வந்து விட்டேன் - நான்
உன்னை நம்பி என்னைத் தந்து விட்டேன்

பளிங்கினால் மண்டபம் கட்டி வைத்தேன் - அதில்
பற்பல சிற்பங்கள் செதுக்கி வைத்தேன்
சுற்றுச் சுவரெல்லாம் உந்தன் பெருமைகள்
பேசும் ஓவியங்கள் வரைந்து வைத்தேன்

என்அன்னை நீ வந்து வீற்றிருக்க - ஒரு
தங்கச் சிம்மாசனம் அமைத்து வைத்தேன்
ரத்தினக் கற்களை இழைத்து வைத்தேன் - அதில்
அழகுப் பதுமைகளை நிறுத்தி வைத்தேன்

என்அன்னை நீகொஞ்சம் இளைப்பாற வேண்டி
உனக்கென அழகான ஊஞ்சல் செய்தேன்
பஞ்சு மெத்தை அதில் விரித்து வைத்தேன் - அதைப்
பட்டுப் பூக்களாலே அலங்கரித்தேன்

முத்துச் சரங்களால் கைப்பிடியாம் - இனிக்கும்
முத் தமிழாலே இசைப் பாட்டாம்
இதமாக ஆட்டிட மங்கையராம் - எந்தன்
அன்னை புகழ்பாடக் கூடுவராம்

அமிர்தத்தை ஒத்த அன்னை உனக்கு
பஞ்சா மிர்தத்தால் அபிஷேகம்
பால்போலத் தூய்மையாய் அன்பு செய்ய வேண்டி
பாலாலே குடங்குடமாய் அபிஷேகம்

தாயாகத் தன்மையாய் அன்பு செய்யும் உனக்கு
தண்மை யான தயிரில் அபிஷேகம்
தேவி உன்னுடைய இனிமை சொல்ல உனக்கு
இனிக்கும் தேனாலே அபிஷேகம்

பாவங்கள் யாவையும் போக்கிக் கரையேற்றிட
பலவித பழச்சாறால் அபிஷேகம்
மனச் சுத்தம் தந்திட வேண்டிக் கொண்டு...
சுத்த மஞ்சள் நீரால் அபிஷேகம்

என்அன்னை என்னுள்ளே மணம்பரப்பிடவே
மணக்கும் சந்தனத்தால் அபிஷேகம்
பிறவிப் பயனதை அடைந்திட வேண்டி
பன்னீரால் அன்னைக்கு அபிஷேகம்

சிவப்புச் சேலை கட்டி தேவி நீயும்
மிகச் சிங்காரமாகவே வீற்றிருக்க
செவ்வந்திப் பூக்களால் செய்த மாலை - உந்தன்
செம்மேனி யதனை அலங்கரிக்க

வைரங்கள் பதித்த கிரீடம் அது - உந்தன்
சென்னியைக் கர்வமாய் மகுடம் செய்ய
பிறைச் சந்திரனும் கூட வந்து அதன்
பக்கத்திலே நின்று அழகு செய்ய

கார்மேகம் தனைத்தந்த கருங்கூந்தல் - அது
அகிற்புகை மணத்திலே சுகித்திருக்க
பலவண்ண நறுமண மலர்கள் பலவும்
அன்னையின் பின்னலை அணிசெய்ய

செக்கச் சிவந்த சிந்தூரத் திலகம்
உன்னெழில் நெற்றியில் ஒளிர்ந்திருக்க
வில்லாக வளைந்த புருவங்கள் இரண்டும்
குனிந்து உன் பாதங்கள் பார்த்திருக்க

அஞ்சனம் எழுதிய அகன்ற விழிகள் - பொன்
வண்டுகள் போலவே சுற்றிவர
ஒற்றை மூக்குத்தி ஜொலிஜொலிக்க - சின்ன
நாசியைப் புல்லாக்கு அலங்கரிக்க

காதணிகள் காற்றில் அசைந்திருக்க - இரண்டு
கன்னமும் ரோஜாவாய்ச் சிவந்திருக்க
சிமிழ் போன்ற இதழ் சற்றே விரிந்திருக்க - அதில்
சின்னதாய்ச் சிரிப்பொன்று மலர்ந்திருக்க

சங்குக் கழுத்திலே தங்கத்தாலே செய்த
தகதகத்து மின்னும் அட்டிகையாம்
முத்து மணி கோர்த்த ஆரங்களாம் - நவ
ரத்தினங்கள் சேர்த்த மாலைகளாம்

தந்தத்தை மிஞ்சும் மென் கைகளிலே
சந்தம் பாடி வளைகள் கலகலக்க
விரல்நகங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு
விரல்களில் மோதிரங்கள் பளபளக்க

கற்கள் பதித்திட்ட ஒட்டியாணம் - உந்தன்
சின்ன இடையினைத் தழுவி நிற்க
வெண்பஞ்சுப் பாதத்தில் கொஞ்சிக் கொஞ்சி - வெள்ளிச்
சலங்கையும் மெட்டியும் கிணுகிணுக்க

என்அன்னை உன்னெழில் தோற்றந்தன்னை - என்ன
வென்று சொல்லி நானும் போற்றிடுவேன்
உன்மேல் நீங்கா அன்பு வேண்டுமென்றே - நாள்
தோறும் உன்னை நான் வேண்டுகின்றேன்!


--கவிநயா

பி.கு: ஒரு சில நாட்களுக்கு பதிவிட இயலாது. அதனால் வெள்ளிக் கிழமைக்கு, அதுவும் பெரீய்ய பாடலாகவே இட்டாச்!