Thursday, November 27, 2008

97. குணா - பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க!

மும்பை இன்னுயிர்கள் அனைத்தும் அமைதி பெற வேண்டிக் கொண்டு, அம்மன் பாட்டு-97 தொடர்வோம்! இந்த இடுகையை நேற்றே இட எண்ணியிருந்தது! ஆனால் மும்பையில் நடைபெற்ற பித்து பிடித்த ஆட்டத்தின் முன், குணா படத்தில் வரும் பித்து ஒன்றுமே இல்லை என்றாகி, இடாமல் இருந்து விட்டேன்! இறந்தவர்கள் மனக்கேதம் தீரும் மோட்ச தீபத்தை மற்ற பதிவுகளில் ஏற்றிவிட்டு, இடுகையை அப்படியே விட்டு விட்டேன்!

என் வங்கியின் சிறு பகுதி ஒன்று மும்பையில் உள்ளது. அதில் ஒருவரை மட்டும் தொடர்பு கொள்ளவே முடியாமல் போக, பலரும் பதபதைப்புக்கு உள்ளாகி விட்டோம்! கடைசியில் Fort Station-இல் இருந்து தப்பித்து, ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தவரைத் தொடர்பு கொண்ட பின் தான் நிம்மதியானோம்!
உம்...உலகில் தான் எத்தனை எத்தனை பித்து! பித்தினால் ஆடும் ஆட்டங்கள்! பித்தலாட்டங்கள்!

வெறியில் ஊறிய பித்து, நச்சு ஆகிறது!
அன்பில் ஊறிய பித்து, முத்து ஆகிறது!


பித்தா பிறைசூடி இறைவா பெம்மானே! - பித்தா என்று பாடலைத் துவங்கினார் சுந்தர மூர்த்தி நாயனார்! ஏன்? இறைவன் பித்தனா? எதற்கு அப்படிப் பாடணும்? சொல்லுங்க பார்ப்போம்!
அம்மன் பாட்டு இன்னும் சில நாட்களில் 100ஐத் தொடும் நல்வேளையில், சில நல்ல பாடல்கள் உங்களிடையே உலா வரப் போகின்றன! இன்று குணா படத்தில் இருந்து ஒரு அற்புதமான "பித்துப்" பாடல்!

இசைஞானி இளையராஜாவின் அருமையான பின்னணி இசையில், பாவனி என்னும் காணக்கிடைக்காத ராகத்தில், யேசுதாஸ் பாடுகிறார்!
அம்பாளின் அலங்கார வர்ணனையாக, அபிராமி அந்தாதி பாடல்கள், திரை இசையுடன் இணைகிறது!
*** பாடலின் துவக்கத்தில் வரும் காட்சிகளையும் கொடுத்துள்ளேன்! தன்னைச் சிவன் என்று கருதிக் கொள்ளும் "பித்தன்" குணா! அபிராமி என்ற அம்பாளின் உருவத்தை எப்படித் தன் நெஞ்சில் இறக்கிக் கொள்கிறான் என்பதற்கு, அந்த ஜனகராஜ்-கமல் வசனக் காட்சி மிகவும் முக்கியம்! பாடலின் முடிவில் சிவதாண்டவக் காட்சியும் வரும்! இந்த வீடியோவில் இல்லை! யாரிடமேனும் இருந்தால் சொல்லுங்கள்!

*** பாடலின் ராகம் = பாவனி
ஏங்கி ஏங்கித் தேடும் மூடில் பாடும் ராகம்! பல இசைக் கலைஞர்கள் கூட இந்த ராகத்தை அதிகம் பாடியது கிடையாது! இதில் ஏதாச்சும் கீர்த்தனை இருக்கா-ன்னு கூடத் தெரியாது! அதை இளையராஜா வெளிக் கொணர்ந்துள்ளார். அதுவும் சரணம், சரணம் என்று வரும் கட்டத்தில், ராகம் அப்படியே ஜிவ்வுனு உடம்புக்குள் ஏறும்!

எம்.எஸ்.வி, ரஹ்மான் என்று மற்ற சிறந்த இசையமைப்பாளர்கள் கூட, அழகான ராகங்களைத் தந்துள்ளார்கள்! ஆனால் இது போன்ற Mystic Search செய்து, ராகங்களுக்கு சினிமாவில் Vintage Look கொடுத்த பெருமை இளையராஜாவையே சேரும்! (இப்படிச் சொல்வதால் இதையும் சொல்லி விடுகிறேன்: "பதிவர் ஜிரா-என்னை மன்னிக்கவும்" :))

ராஜாவின் ராசியோ என்னமோ, அவர் தரும் வின்டேஜ் ராகங்கள், பாடலின் காட்சியமைப்பிலும் ஒன்றி விடுவதால், ஆழமாகப் பதிந்து விடுகிறது! (எம்.எஸ்.வி தந்த பாலமுரளியின் மஹதி ராகத்துக்கு, பாடல் காட்சிகள் எல்லாம் அப்படி அமையவில்லை என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்)

*** தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற பாட்டின் ராகம், கிட்டத்தட்ட இதற்கு க்ளோசாக வருகிறது! தியாகராஜ கீர்த்தனை - இந்த ராகமும் சற்று க்ளோஸ் தான்! (கொத்ஸ், ஜீவா - சரி தானே?)
தியாகராஜர் கூடவா பாவனியில் ஒன்றும் எழுதவில்லை? ஹூம்! ஆச்சரியம் தான்!


நாயகி நான்முகி நாராயணி கை-நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆய கியாதி உடையாள் சரணம்
(அரண் நமக்கே)
சரணம் சரணம் சரணம்!
சரணம் சரணம் சரணம்!!

பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊன் உருக, உயிர் உருக, தேன் தரும் தடாகமே!
மதி வருக, வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே!

(பார்த்தவிழி)

இடங்கொண்டு விம்மி, இணை கொண்டு இறுகி, இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
படம்கொண்ட அல்குல் பனி மொழி, வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே!

(பார்த்தவிழி)இப்போ பொருளுக்கு வருவோம்!
நாயகி நான்முகி நாராயணி = உலகத் தலைவி, நான்முகச் சக்தியின் ரூபமே, நாரணச் சக்தியின் ரூபமே!

கை-நளின பஞ்ச சாயகி = உன் நளினமான கைகளில், ஐந்து மலர் அம்புகள்! (விரல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த என்ற திருப்புகழை நினைவு கூருங்கள்)
கரும்பு வில்லுடன் மொத்தம் ஐந்து மலர்க் கணைகள்! தாமரைக் கணை, மாம்பழ மலர்க் கணை, அசோக மலர்க் கணை, முல்லைக் கணை, நீலோற்பல மலர்க் கணை!

சாம்பவி சங்கரி சாமளை = சிவச்சக்தியே (சாம்பு), இன்பம் தரும் சங்கரி, கரும்பச்சைக் கருப்பி (சியாமளை)

சாதி நச்சு வாயகி = கொடும் விஷத்தை வாயில் கொண்ட பாம்பை அணிந்தவளே!

மாலினி வாராகி சூலினி மாதங்கி = மாலைகள் சூடும் மாலினி, உலகம் காக்கும் நாரண-வராகச் சக்தீ, சூலம் ஏந்திய சூலினி, மதங்க முனிவரின் மகளான மாதங்கி!

என்று ஆய கியாதி உடையாள் சரணம் (அரண் நமக்கே) = இப்படி பல புகழ் உடையவளே, சரணம் உன் சரணத்துக்கே!
ஆய கியாதி = பல புகழ்!
ஆயகி்+ஆதி உடையாள் என்றும் சிலர் பிரிக்கப் பார்த்துள்ளேன்! இத்தனையும் உடையவளே, (அகிலத்துக்கு) ஆதியாய் இருப்பவளே, அகிலாண்டேஸ்வரி என்றும் பொருள் கொள்ளலாம்!

****

(தமிழே பிடிக்காத நண்பர்கள் கூட, எனக்கு ட்ரீட் வாங்கிக் கொடுத்து, உக்கார வச்சி, பொறுமையா, சொல்லு கேஆரெஸ், சொல்லு கேஆரெஸ்-ன்னு பொருள் கேட்டது இந்தப் பாட்டுக்கு மட்டுமே :)))

இடங்கொண்டு விம்மி, இணை கொண்டு இறுகி = ஒரே இடத்தில் இருந்து, நினைத்தவுடன் வந்த விம்மிதத்தால் விம்ம, உன்னித்து எழ, அதற்கு இணையாக ஒன்றோடு இன்னொன்றும் இறுக்கமாகி...

இளகி, முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு = மனத்தால் இளகி உருக, முத்து வடங்கள் வந்து மேலாடும் மலைகள், அந்தத் திருக் கொங்கைகளால் (திரு மார்பகங்களால்)

இறைவர் வலிய நெஞ்சை = ஈசனின் தியான-மோன வலிய நெஞ்சத்தையும்

நடங்கொண்ட கொள்கை, நலம் கொண்ட நாயகி = அசைத்துப் பார்க்க வல்லவளே!
அப்படி அசைவில்லாத "அசை"வனையும் சைவனாக்கும் கொள்கை நலம் கொண்ட தாயே

நல் அரவின் படம்கொண்ட அல்குல் = நல்ல பாம்பு ஒன்று படமெடுத்தாற் போல் உள்ள அல்குலை (பிட்டம்) உடையவளே!

பனி மொழி = பனி போன்று குளிர் மொழி கொண்டவளே!

வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே! = வேத ஓசையினைக் காற் சிலம்பில் எழுப்புபவளே!

(இந்தப் பாடல், அண்மையில் மகவைப் பெற்றெடுத்த ஒரு அன்னை, பாலூட்டும் போது, அவளுக்கு என்னென்ன உடல் மாறுதல்கள் நிகழும் என்பதாகவும் ஒரு விளக்கம் இருக்கு! அன்னை சிவஞானப் பாலை அன்பருக்கு ஊட்டும் போது உண்டான காட்சி! முத்து வடங்கொண்ட கொங்கை மலை என்பதில் இருந்து நீங்களே யூகித்துச் சொல்லுங்கள்! தேவைப்பட்டால், பிறகு சொல்கிறேன்!)


மதி வருக,
வழி நெடுக
ஒளி நிறைக
வாழ்விலே!

காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க - அம்மன் பாட்டு-100 ஐ நோக்கி...

38 comments:

 1. //பாடலின் ராகம் = பாவனி//

  இந்தப்பாட்டை அடிக்கடி கேட்டிருக்கேன். ரசிச்சிருக்கேன் என்ன ராகம்னு தெரியாமலே.

  ReplyDelete
 2. யேசுதாஸோட குரல் இந்தப்பாட்டுக்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

  ReplyDelete
 3. அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலுக்கும் ஆழ்ந்த அர்த்தம் உண்டுஅதுபோல இந்த இடங்கொண்டு விம்மி என்பதில் சிவனின் இடப்பக்கம் அன்னை இருப்பதை முதல்வரியில் சொல்வதையும் நான் புரிந்துகொண்டேன்! ஒன்றாய் அரும்பிப்பலவாய் விரியும் அர்த்தங்கள் கொண்ட அற்புதப்பாடல் இது! அளித்ததற்கு நன்றி.
  மலைமகள்(ஷைல-ஜா!)

  ReplyDelete
 4. தியாகய்யர் பாவனி ராகத்தில் ஒரு கீர்த்தனை அமைத்துள்ளார்.

  ReplyDelete
 5. //கானா பிரபா said...
  KALAKKAL//

  நன்றி காபி அண்ணாச்சி!
  இளையராஜா சண்டைக்கு உதவிக்கு வாங்க! இப்போ ராகவன் ஊர்ல இல்ல! வந்தாப் பொறவு சொல்றேன்! :)

  ReplyDelete
 6. // சின்ன அம்மிணி said...
  //பாடலின் ராகம் = பாவனி//

  இந்தப்பாட்டை அடிக்கடி கேட்டிருக்கேன். ரசிச்சிருக்கேன் என்ன ராகம்னு தெரியாமலே.//

  யக்கா
  பாவினி ராகம் பாவ்னா மாதிரி இல்லை? :)

  ReplyDelete
 7. //சின்ன அம்மிணி said...
  யேசுதாஸோட குரல் இந்தப்பாட்டுக்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.//

  ஆமாக்கா!
  ஆனா அந்தக் கோரஸ் இருக்குல்ல! அதுவும் பாட்டை ஏத்திக் கொடுக்கும்!

  ReplyDelete
 8. // Anonymous said...
  தியாகய்யர் பாவனி ராகத்தில் ஒரு கீர்த்தனை அமைத்துள்ளார்//

  ஆகா!
  இப்படிச் சொன்ன எப்படி? என்னை கீர்த்தனை-ன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்!

  ReplyDelete
 9. November 27, 2008 11:35 PM
  kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  யக்கா
  பாவினி ராகம் பாவ்னா மாதிரி இல்லை? :)

  November 27, 2008 11:35 PM >>>>
  தம்பி! அட்டாணா ராகம் அடிக்கவர்ரமாதிரி இல்ல?:):) சரியான பாவ்னாதாஸ்ப்பா கே ஆர் எஸ்!!

  ReplyDelete
 10. அபிராமி அந்தாதியின் பெரிய சிறப்பே அபிராம பட்டர் அபிராமியைப் பார்த்த விதம்தான்.

  எப்படி சுந்தரர் இறைவனேத் தோழனாகப் பார்த்தாரோ,எல்லாக் காரியங்களுக்கும்-அதாவது,பரவையிடம் தூது போகச் சொல்லி ஏவும் அளவுக்கு-தோழமை கொண்டாரோ அது போல,அபிராமி அம்மையைத் தோழமை,அன்பு,காதல்,அடிமை,ஆண்டாள் என்ற எல்லாமுமாகப் பார்த்தவர் அபிராம பட்டர்.

  அந்த அன்பு பொங்கிப் பிரவகிக்கும் பாடலில் இது ஒன்று.

  இதற்குப் பொருள் சொல்ல,பார்க்க நாம் விசனப் பட வேண்டியதில்லை,அபிராம பட்டரின் தோழமை உணர்வை நாமும் அபிராமியிடம் காண முடிந்தால் !!!!

  ReplyDelete
 11. வெகு அருமையான பாடல்.

  மயிலை கற்பகத்தைக் காணும் போது சில சமயங்களில்,வெகுசில சமயங்களில்,இந்த வித மனநிலைக்கு அருகில் செல்வதாக நானும் உணர்ந்திருக்கிறேன் !

  ReplyDelete
 12. // Anonymous said...
  தியாகய்யர் பாவனி ராகத்தில் ஒரு கீர்த்தனை அமைத்துள்ளார்//

  ஆகா!
  இப்படிச் சொன்ன எப்படி? என்னை கீர்த்தனை-ன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்!

  //

  இதோ சார்..

  ”லேமி தெல்ப பெத்த லெவரோ ஸ்ரீ ராமா” - தியாகராஜர். அதிகம் கச்சேரிகளில் பாடப்படாத பாவனி ராகத்தில் அமைந்த பாடல்.

  ReplyDelete
 13. கேஆர்எஸ்,

  ஆண் கடவுளுக்கான நாயகி பாவம் போலவே, பெண் கடவுளை வழிபடும் ஆண் பக்தர்களுக்கு நாயகன் பாவம் அனுமதிக்கப்படுகிறதா ? தவறு எதுவும் உள்ளதா ?

  அதாவது பெண் கடவுளை தனது மனைவியாக நினைத்துருகும் ஆண் பக்தர்களை சமயம் போற்றுகிறதா ? ஊக்குவிக்கிறதா ?

  கேள்வியைக் கேட்க எனக்கு சற்று ஐயுறுவாகத்தான் இருந்தது, பக்தியில் எல்லாம் சகஜம் தானே ? இல்லாவிட்டில் வீட்டுக்கு வரும் மகாலெஷ்மி என்று மருமகளைச் சொல்லுவார்களா ?

  ReplyDelete
 14. //ஷைலஜா said...
  இந்த இடங்கொண்டு விம்மி என்பதில் சிவனின் இடப்பக்கம் அன்னை இருப்பதை முதல்வரியில் சொல்வதையும் நான் புரிந்து கொண்டேன்!//

  ஆமாம்-க்கா! வாம பாகத்தில் (இடப் பக்கத்தில்) அன்னை இருப்பதால், இடம் மட்டும் விம்முகிறது போலும்!

  //ஒன்றாய் அரும்பிப்பலவாய் விரியும் அர்த்தங்கள் கொண்ட அற்புதப்பாடல் இது!//

  ஆமாம்! இள நங்கைக்கும் இதைச் சொல்லலாம்! அண்மையில் தாயான ஒரு பெண்ணுக்கும் சொல்லலாம்! தாயான பெண்ணுக்கு யாராச்சும் பின்னூட்டத்தில் சொல்லுவாங்க-ன்னு மீ தி வெயிட்டிங்!

  //மலைமகள்(ஷைல-ஜா!)//

  இது திருப்பதி மலையா? இமய மலையா? :)

  ஷைல-ஜா=சைலத்தின்(மலையின்) மகள்-இமவான் மகள் பார்வதி
  சிந்து-ஜா=சிந்துவின்(கடலின்)மகள்-சமுத்திர ராஜன் பாற்கடலோன் மகள்-லட்சுமி

  ReplyDelete
 15. // ஷைலஜா said...
  தம்பி! அட்டாணா ராகம் அடிக்கவர்ரமாதிரி இல்ல?:):)//

  இல்லையே!
  அட்டாணா-ன்னு சொல்லுறது எட்டாணா, எட்டணா-ன்னு காசு மாதிரி தான் கேட்குது! :)

  //சரியான பாவ்னாதாஸ்ப்பா கே ஆர் எஸ்!!//

  ஆகா! அது ரிஷான்! நாட் மீ!
  பாவனாக்கு தாசன் = ரிஷான்
  பாவனாக்கு தோழன் = கேஆரெஸ்
  :))

  உண்மையை ஒத்துக்கோங்க-க்கா!
  பாவினி=பாவனா
  ரைமிங்கா இருக்கா இல்லையா?

  ReplyDelete
 16. //அறிவன்#11802717200764379909 said...
  அபிராமி அந்தாதியின் பெரிய சிறப்பே அபிராம பட்டர் அபிராமியைப் பார்த்த விதம்தான்.//

  உண்மை தான் அறிவன்!
  அபிராமி-பட்டரின் நட்பு பல பாடல்களில் தொனிக்கும்!

  //எப்படி சுந்தரர் இறைவனேத் தோழனாகப் பார்த்தாரோ,எல்லாக் காரியங்களுக்கும்-அதாவது,பரவையிடம் தூது போகச் சொல்லி ஏவும் அளவுக்கு-தோழமை கொண்டாரோ அது போல,அபிராமி அம்மையைத் தோழமை,அன்பு,காதல்,அடிமை,ஆண்டாள் என்ற எல்லாமுமாகப் பார்த்தவர் அபிராம பட்டர்//

  அப்படிப் பார்பவர்களைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதும் ஒரு கேள்வி! கோவியின் கேள்வியைப் பாருங்கள்!

  //இதற்குப் பொருள் சொல்ல,பார்க்க நாம் விசனப் பட வேண்டியதில்லை//

  அதான் புட்டு புட்டு வச்சிருக்கேனே பொருளை! :)
  இந்தப் பாட்டுக்கு நூறு முறையாச்சும் பொருள் சொல்லி இருப்பேன் நண்பர்/நண்பி கூட்டத்துக்கு! :)

  ReplyDelete
 17. // அறிவன்#11802717200764379909 said...
  மயிலை கற்பகத்தைக் காணும் போது சில சமயங்களில்,வெகுசில சமயங்களில்,இந்த வித மனநிலைக்கு அருகில் செல்வதாக நானும் உணர்ந்திருக்கிறேன் !
  //

  ஹும்! அருமை!
  மயிலையில் அலங்காரங்கள் அதிகமின்றி இருக்கும் உச்சி காலத்தில், ஒரு மாலை கூட இல்லாமல் இருப்பாள் கற்பகம்! அதனால் கடவுள் லுக்கே ரொம்ப இருக்காது!

  அப்போது குமிழ் சிரிப்பும், கால்களும் நன்றாகத் தெரியும்! விட்டால் கருவறைக்குள் இருந்து ஓடி வந்து விடுவாள் போல் இருக்கும்! பல முறை இப்படித் தான் எனக்குத் தோனும்! நானும் கற்பகமும் மயிலாப்பூர் பீச்சுக்குப் போகப் போறோம்-னு சொல்லி வீட்டுல மொத்து வாங்கி இருக்கேன்! :)

  ReplyDelete
 18. //nandan said...
  இதோ சார்..
  லேமி தெல்ப பெத்த லெவரோ ஸ்ரீ ராமா” - தியாகராஜர். அதிகம் கச்சேரிகளில் பாடப்படாத பாவனி ராகத்தில் அமைந்த பாடல்//

  வாவ்! சூப்பர்! மிக மிக நன்றி! முழுப் பாட்டையும் தேடிப் பார்க்கிறேன்! பண்டு ரீதி கொலுவு ஈயவய்ய ராமா-அப்படிங்கறா மாதிரியே இருக்குல்ல?

  சார் எல்லாம் வேணாம்! கேஆரெஸ் ன்னே கூப்பிடுங்க நந்தன்! இசை இன்பம் வலைப்பூவில் இது போன்ற ராகங்களையும்-சினிமாவில் ராகங்களையும் அறிமுகப்படுத்துவோம்! ஒரு எட்டு பாருங்கள்! உங்களுக்குப் பிடிக்கும்-ன்னு நினைக்கிறேன்!
  http://isaiinbam.blogspot.com

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. //கோவி.கண்ணன் said...
  கேஆர்எஸ்,
  ஆண் கடவுளுக்கான நாயகி பாவம் போலவே, பெண் கடவுளை வழிபடும் ஆண் பக்தர்களுக்கு நாயகன் பாவம் அனுமதிக்கப்படுகிறதா ? தவறு எதுவும் உள்ளதா ?//

  ஹா ஹா ஹா!
  எந்த நோக்கில் கேக்கறீங்க-ன்னு தெரியலையே! :)
  ஆனா நண்பன் ராகவனும் நானும் இது பற்றி ரொம்ப நேரம் சுவாரசியமா (சுவையார்மாகப்) பேசியுள்ளோம்! சென்சார்! :)

  //கேள்வியைக் கேட்க எனக்கு சற்று ஐயுறுவாகத்தான் இருந்தது, பக்தியில் எல்லாம் சகஜம் தானே ?//

  இதுக்கு எதுக்கு இம்புட்டு சங்கோஜப் படறீங்க? வேற சிலர் கிட்ட கேட்டீங்க-ன்னாலும் பொங்கிருவாங்க! நான் தான் வன் தொண்டனாச்சே! அப்படியெல்லாம் பொங்க மாட்டேன்! :)

  //இல்லாவிட்டில் வீட்டுக்கு வரும் மகாலெஷ்மி என்று மருமகளைச் சொல்லுவார்களா ?//

  வீட்டுக்கு வரும் பெண்ணை மகாலட்சுமி என்பது போல், மாப்பிள்ளையை விஷ்ணு ரூபேன என்றும் சொல்லுவார்கள்!

  உறவுகள் என்பது அன்றிலிருந்து இன்று வரை சற்றே குழப்பமான சுகங்கள் தான்!
  பார்வைகள் படிந்து விட்டால் பிரச்சனை இல்லை! இல்லீன்னா எப்படியும் உலகம் பிரச்சனை பண்ணும்!

  கடவுளைப் பிள்ளையாய், நண்பனாய், நல்லாசிரியனாய், மந்திரியாய், அதே சமயம் சேவகனாய் கண்டவர்களும் உண்டு!

  இப்போ முருகனையோ, கண்ணனையோ, நான் சேவகனாய்க் காணும் போது, சேவகன் செய்யும் சில கீழான வேலைகளைக் கடவுள் செய்யுறா மாதிரி எழுதினா நம்ம ஆன்மீக மக்கள் கோவப்படுவாங்களா? மாட்டாங்களா? சொல்லுங்க பார்ப்போம்! :)

  அதான் சொன்னேன் பார்வை படிதல்-ன்னு!

  ReplyDelete
 21. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //
  அட்டாணா-ன்னு சொல்லுறது எட்டாணா, எட்டணா-ன்னு காசு மாதிரி தான் கேட்குது! :///)>>>>

  :):) யெப்பா!!! நல்லா எஸ்கேப் ஆகுங்க!

  ////>>>/சரியான பாவ்னாதாஸ்ப்பா கே ஆர் எஸ்!!//

  ஆகா! அது ரிஷான்! நாட் மீ!
  பாவனாக்கு தாசன் = ரிஷான்
  பாவனாக்கு தோழன் = கேஆரெஸ்////
  :))>>>>>>

  ஆக 2 பாய்ஸும் சரி இல்லை போங்க!!!

  ReplyDelete
 22. //இதுக்கு எதுக்கு இம்புட்டு சங்கோஜப் படறீங்க? வேற சிலர் கிட்ட கேட்டீங்க-ன்னாலும் பொங்கிருவாங்க! நான் தான் வன் தொண்டனாச்சே! அப்படியெல்லாம் பொங்க மாட்டேன்! :)//

  காரைக்கால் அம்மையார் நிலை குறித்து தான். கணவன் அவரை நாயகன் பாவத்தில் பார்த்திருந்தால் ஒன்றாக வாழ்ந்திருக்கலாம்.

  ஒரு ஆண் ஆண் கடவுளை வழிபட நாயகிபாவம் (கிட்ட தட்ட தன்னை அறிவிக்கப்படாத திருநங்கையாக்கிக் கொண்டு) புனிதம் (உச்ச ஸ்திதி) என்று சொல்லுவோர்க்கு(ம்), ஒரு ஆண் பெண் கடவுளை தன் துணையாக நினைத்துப் பக்தி செலுத்த என்ன தடை என்று கேட்க நினைத்தேன். வேறொன்றும் இல்லை.

  திருமணம் ஆகாத பெண் என்றால் கோபியராக இருக்கலாம், அதன் பிறகு அவளுக்கு திருமணம் ஆகிவிட்டால் கணவன் தான் கிருஷ்ணன், அதன் பிறகு மன அளவில் கூட தன்னை ஒரு கோபியராக நினைக்க முடியாமல் தானே சமூகம் பெண்ணின் இறை உணர்வை மாற்றி வைத்திருக்கிறது.

  *****

  உருவமற்ற அல்லது ஒளியான இறைவன் என்றால் எந்த Baவத்துக்கும் பாவமில்லை / பாதகமில்லை. சரிதானே ?

  :)

  ReplyDelete
 23. >>அப்படிப் பார்பவர்களைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதும் ஒரு கேள்வி! கோவியின் கேள்வியைப் பாருங்கள்!
  >>

  சமூகம் என்பது ஒரு கலவை..பல மனநிலைகளில் இருக்கும் மக்களும் இருப்பார்கள்.

  சிலர் இரண்டாம் வகுப்ப மாணவனின் மனநிலையில் இருப்பார்கள்,சிலர் பத்தாம் வகுப்பு மாணவனிம் மனநிலையில் இருப்பார்கள்,சிலர் பட்டப்படிப்பு மனநிலையில் இருப்பவர்கள்.

  இரண்டாம் வகுப்புக் காரனுக்கு பட்டப் படிப்பாளனின் மனநிலை சித்திக்காது;ஆனால் பட்டப் படிப்பாளன் இரண்டாம் வகுப்புக்காரனாகவும் சிந்திக்க முடியும்;பட்டப்படிப்பாளனாகவும் சிந்திக்க முடியும்..

  இதுபார் கன்னத்து முத்தமொன்று என்ற பாரதியையும்,திருப்பவள செவ்வாய்தான் தித்தித்திருக்குமோவென ஐயுறவடைந்த ஆண்டாளையும்,இடம்கொண்டு விம்மி,இணைகொண்டு இறுகி'க் கண்ட பட்டரை விடவுமா நாம் இதை உணர்ந்து விடப் போகிறோம்????

  எனவே....

  இவை(இவற்றை,இவர்களை)யும் கடந்து போகும்" மனநிலைதான் நமக்கு வேண்டுவது!

  :)

  >>நானும் கற்பகமும் மயிலாப்பூர் பீச்சுக்குப் போகப் போறோம்-னு சொல்லி வீட்டுல மொத்து வாங்கி இருக்கேன்! :)>>

  ஆகா,இதுல போட்டிக்கு ஆள் வேற இருக்கா???

  ReplyDelete
 24. கோவி கேட்டதைப் பற்றி, இங்கே மற்ற நண்பர்களும் அன்பர்களும் அவரவர் நினைப்புகளைச் சொல்லுங்களேன்!

  @கோவி அண்ணா
  நாயகன்-நாயகி பாவம் என்பது என்ன? எதுக்கு அது வந்தது என்ற முழு புரிதல் இல்லீன்னா அனர்த்தங்கள் தான் விளையும்!

  அதனால் இங்கே அந்த பாவத்தை அறியும் முன்னர், "நோக்கம்" மிக மிக முக்கியம்! எந்த "நோக்கத்துக்கு" சில ஆண் பக்தர்கள், தங்களைப் பெண்ணாகப் பாவித்துக் கொண்டார்கள்? அதை முதலில் தெரிஞ்சிக்கிட்டாத் தான், இது விளங்கும்!

  பெண்கள் நாயகி பாவத்தில் பாடினால் பிரச்சனையில்லை! - ஆண்டாள் முதன்மையானவள்! இன்னும் சிலர்!
  கடவுளைக் காதலனாய், பெண்கள் பாடும் போது நெருடலாய் அதிகம் தெரியாது (ஆனால் பாடின பிறகும், கடவுள் தான் காதலன் என்று நடந்து கொண்டால் "லூசு" பட்டம் ஈசியா வாங்கிறலாம் :)

  ஆண்கள் நாயகி பாவத்தில் பாடினாலும், உலகம் முதலில் ஏற்றுக் கொள்ளாமல், பின்னர் ஏற்றுக் கொண்டது! இப்போது இலக்கிய வகையாகவே ஆகி விட்டது! ஆனால் நிஜத்தில் இப்படி நடந்துக்கிட்டா, லூசு பட்டத்தோடு, இன்னொரு பட்டமும் சேர்ந்து கொள்ளூம்! :)

  இறைவனைத் தலைமைக் குணத்தினனாக வைத்ததால், அவனை எப்பமே தலைவனாகவும், தங்களைத் தலைவியாகவும் பாவித்தார்கள்!

  பொதுவாக, ஆண் அன்பை வெளிக்காட்டிக் கொள்ளாதவன்! பெண், அன்புக்கு உருகுபவள்! இறைவன் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதவன்! அடியார்களோ உருகுபவர்கள்! அதனால் அவன்=நாயகன்! அடியவர்=(ஆணோ/பெண்ணோ) நாயகி!

  இது தான் நாயகன்-நாயகி பாவத்தின் அடிப்படை! (இன்னும் ஆழமான உளவியல் பாயிண்ட் எல்லாம் இருக்கு!)
  *************************

  இப்போ, வேற பரிமாணம்:
  //பெண் கடவுளை தனது மனைவியாக நினைத்துருகும் ஆண் பக்தர்களை சமயம் போற்றுகிறதா?//

  இது வரை இப்படி நினைத்த பக்தர்கள் மிக மிக சொற்பம்!
  ஏன்? யோசித்துப் பாருங்கள்!

  இங்கே பக்தனின் தேவை(நோக்கம்) என்ன? = உருகுதல்!

  இவன் தலைவனாக இருந்தால், ஒரு பெண் கடவுளிடம் எப்படி இவன் உருகுவான்? ஆண் தான் பொதுவாக சமூக அமைப்பின் படி, அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவன் ஆயிற்றே! ஆகையால் இந்த "உருகுதல்" உணர்ச்சியைத் தராத நிலை, பெரும்பாலும் பக்தர்களுக்குத் தேவைப்படவில்லை!

  ஆணின் உருக்கம் தோன்றும் சில நேரங்களில், பெண் தெய்வங்கள் தாயாகத் தான் ஆகின! தாரமாக ஆக வில்லை! ஏன்?
  தாயிடம் தானே குழந்தை உருகும்! அதனால் பெண் தெய்வங்கள், பக்தர்களுக்கு(ஆணோ/பெண்ணோ) தாய் ஆயின!

  இங்கே பக்தனின் (ஆணோ/பெண்ணோ) தேவை = உருக்கம்! அதற்கேற்றவாறு இறைவன்/இறைவியுடன் உறவும் அமைந்தது!
  **********************

  ReplyDelete
 25. இப்போ இன்னொரு பார்வைக்கு வருவோம்!
  ஆண் பக்தர்கள் இறைவனை நாயகனாகப் பார்த்தது போல்,
  * பெண் பக்தர்கள் இறைவனை நாயகியாகப் பார்த்துள்ளார்களா?
  * பெண் பக்தர்கள் இறைவியை நாயகனாகப் பார்த்துள்ளார்களா?
  :)

  இப்படிப் பரிமாணங்கள் வளர்ந்து கொண்டே போகும்!
  ஒரு பேச்சுக்குச் சொல்லுறேன்...
  * நான் இறைவனைச் சேவகனாய் பாக்குறேன் வைங்க! டேய் மடையா!என்னடா இது, இன்னும் வேலை ஆகலை? என்பது போல் எழுதலாம்! சிலர் கோவப்படுவாங்க! சிலர் பொயட்டிக் லைசன்ஸ்-ன்னு விட்டுருவாங்க!

  * ஆனா இறைவியை நான் சேவகியாய்ப் பார்க்க முடியுமா? என்னடீ இது? இன்னுமா வேலை ஆகலை? என்பது போல் எழுத முடியுமா? ஆன்மீக மக்கள் பொங்குவாங்களா?

  இதெல்லாம் கேள்விகள் தான்! அகக் கேள்விகள்! அக வேள்விகள்!
  நோக்கம் தவறாத வரையில் எம்பெருமான்/எம்பெருமாட்டியுடன் எந்த வகையான உறவும் சாத்தியமே!
  ஹரி ஓம்!

  ReplyDelete
 26. அடியவர்களின் சில மன நிலைகள்:
  1. ஷ்ரவணம் = கேட்டல்
  2. கீர்த்தனம் விஷ்ணோர் = பாடல்
  3. ஸ்மரணம் = நினைத்தல்
  4. பாத சேவனம் = அடி தொழுதல்
  5. அர்ச்சனம் = போற்றுதல்
  6. வந்தனம் = வணங்குதல்
  7. தாஸ்யம் = பணி செய்தல்
  8. சைக்யம் = தோழமை
  9. ஆத்ம நிவேதனம் = உள்ளத்தைக் கொடுத்தல்

  இந்த மன நிலைகளுக்கு ஏற்றவாறு இறைவன்/இறைவியுடனான உறவு மனப்பான்மை நிகழும்!
  அதைச் சமூகம் எப்படி வேண்டுமானாலும் பார்த்து வம்பாக்கும்/அரசியலாக்கும்!

  ஆனால் நல்லடியார்கள் சமூகத்துக்குப் பயப்படுவதில்லையே!
  அவர்கள் இறைவனுக்கே பயப்படாதவர்கள்! "பய-பக்தி"யில், பயத்தை வெட்டி, பக்தியில் ஒட்டிக் கொள்பவர்கள்!


  //"அடியார்கள்" வாழ, அரங்கநகர் வாழ
  சடகோபன் தண் தமிழ் நூல் வாழ//
  - என்று அதனால் தான் "அடியார்களை" முதலில் வைத்து, இறைவனைப் பின்னே வைத்தார்கள்!

  ReplyDelete
 27. //ஷைலஜா said...
  ஆக 2 பாய்ஸும் சரி இல்லை போங்க!!!//

  :)
  பாய்ஸ்-ன்னா சரி இல்லாம தானேக்கா இருக்கணும்? :)
  இருங்க ரிஷான் கிட்ட போட்டுக் கொடுக்கறேன்! :)

  ReplyDelete
 28. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் இந்தப் படத்தைத் தொலைக்காட்சியில் இட்டார்கள். இந்தப் பாடலை மட்டும் பார்த்தோம். அருமையான பாடல்; அருமையான காட்சியமைப்பு.

  ReplyDelete
 29. //இந்தப் பாடல், அண்மையில் மகவைப் பெற்றெடுத்த ஒரு அன்னை, பாலூட்டும் போது, அவளுக்கு என்னென்ன உடல் மாறுதல்கள் நிகழும் என்பதாகவும் ஒரு விளக்கம் இருக்கு! //

  ஊன் உருக, உயிர் உருக, தேன் தரும் தடாகமே!

  ReplyDelete
 30. //கோவி.கண்ணன் said...
  காரைக்கால் அம்மையார் நிலை குறித்து தான். கணவன் அவரை நாயகன் பாவத்தில் பார்த்திருந்தால் ஒன்றாக வாழ்ந்திருக்கலாம்//

  காரைக்கால் அம்மையார் போஸ்ட்டுக்கு இம்புட்டு ஃபீலிங்க்ஸா? :)

  //ஒரு ஆண் ஆண் கடவுளை வழிபட நாயகிபாவம் (கிட்ட தட்ட தன்னை அறிவிக்கப்படாத திருநங்கையாக்கிக் கொண்டு)//

  :)
  Dont be in the business of judging people!
  நாயகி பாவத்தில் பாடும் ஆண்கள் திருநங்கையாய் இருந்தாலும், அதில் ஒன்றும் தவறில்லையே! In fact I appreciate that! சமயம் அவர்களுக்கு வடிகாலாய் இருந்திருக்கு என்றால் அது மகிழ்ச்சியே!

  நாயகி பாவத்தில் பாடும் ஆண்களில் மென்மையானவரும் உண்டு! கடுமையான வீரர்களும் உண்டு! (திருமங்கையாழ்வார்)

  //பெண் கடவுளை தன் துணையாக நினைத்துப் பக்தி செலுத்த என்ன தடை என்று கேட்க நினைத்தேன். வேறொன்றும் இல்லை//

  இதுக்குப் பதில் சொல்லியாச்சுண்ணே!

  //உருவமற்ற அல்லது ஒளியான இறைவன் என்றால் எந்த Baவத்துக்கும் பாவமில்லை / பாதகமில்லை. சரிதானே ?//

  ஆணல்லன்! பெண்ணல்லன்! அல்லால் அலியும் அல்லன்!

  உருவமற்ற இறைவனை அவன் என்பீர்களா? அது என்பீர்களா? :)
  வடிவிலா இறைவன் மலர்மிசை ஏகி"னான்" மாணடி சேர்ந்தார்
  நிலமிசை நீடு வாழ்வார்! :)

  ReplyDelete
 31. //அறிவன்#11802717200764379909 said...
  இரண்டாம் வகுப்புக் காரனுக்கு பட்டப் படிப்பாளனின் மனநிலை சித்திக்காது;ஆனால் பட்டப் படிப்பாளன் இரண்டாம் வகுப்புக்காரனாகவும் சிந்திக்க முடியும்;பட்டப்படிப்பாளனாகவும் சிந்திக்க முடியும்//

  சரியாச் சொன்னீங்க அறிவன்!
  அதனால் தான் பட்டப் படிப்பாளனுக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கு! இரண்டாம் வகுப்புக் காரனுக்கும் அவன் லெவலில் ஆன்மீகத்தை அறிமுகப்படுத்த! :)

  //இதுபார் கன்னத்து முத்தமொன்று என்ற பாரதியையும்,திருப்பவள செவ்வாய்தான் தித்தித்திருக்குமோவென ஐயுறவடைந்த ஆண்டாளையும்//

  ஷைலஜா அக்காவின் இந்த ஆண்டாளின் French Kiss பதிவைப் படிங்க! :)
  http://shylajan.blogspot.com/2008/11/french-kiss.html

  //இவை(இவற்றை,இவர்களை)யும் கடந்து போகும்" மனநிலைதான் நமக்கு வேண்டுவது!//

  ஆமாம் இரண்டாம் வகுப்பைக் கடந்து போதலே சரி!
  ஆனால் இரண்டாம் வகுப்பை ஒதுக்கிப் போதலும், ஒறுத்துப் போதலும் தவறு! :)

  //ஆகா,இதுல போட்டிக்கு ஆள் வேற இருக்கா???//

  ஹா ஹா ஹா!
  என் வழி தனி வழி! :)

  ReplyDelete
 32. //குமரன் (Kumaran) said...
  அருமையான காட்சியமைப்பு//

  ஆமாம் குமரன்! பாடலின் வெற்றிக்குக் காட்சியமைப்பும் ஒரு காரணம்!
  நான் ஜனகராஜ் காட்டும் காட்சியையும், அசைந்து அசைந்து செல்லும் வரிசையையும், லட்டை வாங்கும் போது அந்த பரவசக் காட்சியையும் ப்ல முறை பார்ப்பேன்! :)

  ReplyDelete
 33. //குமரன் (Kumaran) said...
  //இந்தப் பாடல், அண்மையில் மகவைப் பெற்றெடுத்த ஒரு அன்னை, பாலூட்டும் போது, அவளுக்கு என்னென்ன உடல் மாறுதல்கள் நிகழும் என்பதாகவும் ஒரு விளக்கம் இருக்கு! //

  ஊன் உருக, உயிர் உருக, தேன் தரும் தடாகமே!//

  சூப்பர்!
  ஆனா இன்னும் மேல் விளக்கம் ப்ளீஸ்! :)

  ReplyDelete
 34. அருமையான பாடல் பதிவுக்கு நன்றி கண்ணா.

  மும்பையில் இறந்தோருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் என்னுடைய பிரார்த்தனைகளும்...

  பார்த்தவிழி பார்த்தபடி
  காத்திருக்கோம் அம்மா,
  கருணை செய்வாய்.

  ReplyDelete
 35. //கவிநயா said...
  பார்த்தவிழி பார்த்தபடி
  காத்திருக்கோம் அம்மா,
  கருணை செய்வாய்//

  ஆமாம்-க்கா!
  பார்த்த விழி பார்த்த படியே விழித் தாமரையும் அல்லியும் பூத்திடுமே!
  ஏன்னா அவளே சூர்ய-சந்திர கலைகளைத் தாங்கியவளாயிற்றே!
  :)

  ReplyDelete