Tuesday, February 17, 2009

லலிதா நவரத்தினமாலை 5

5. மாணிக்கம்:

காணக் கிடையாக் கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


தாய், தந்தை, நண்பர், சுற்றம், பிள்ளைகள், வைத்த நிதி என்று பலவற்றை நேரே காணும் கதியாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றையே நிலையாக எண்ணிக் கொண்டு பொழுதனைத்தையும் அவற்றைப் பேணுவதற்கே செலவழிக்கிறோம். ஓரிரு நாட்கள் மகிழ்ச்சி தரும் சிற்றின்பங்களாம் குடி, கூத்து போன்றவற்றை நோக்கும் போது வாழ்க்கை முழுவதும் அவையும் நாமும் இருக்கும் வரையில் மகிழ்ச்சி தரக்கூடிய இவற்றைப் பேணுவதில் தவறில்லை. ஆனால் இவையும் இவ்வுலக வாழ்க்கையைத் தாண்டி வருவதில்லை. என்றும் நிலையான பேறு என்னும் போது இவற்றையெல்லாம் தாண்டிய ஒன்று ஒவ்வொரு பிறவியிலும் நமக்குத் துணையாக வரும் ஒன்றையே குறிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒன்று எது? எங்கும் தேடியும் காணக் கிடைக்காத கதி எது? விலை மதிக்க முடியாத அந்த பொக்கிஷம் எது? ஈரேழு உலகங்களுக்கும் அன்னையாக நிற்கும் அவளே நமக்கும் எக்காலத்திலும் நிலையான பேறாகவும் காணக்கிடையாக் கதியாகவும் நிற்கிறாள். காணக் கிடையாக் கதியானவளே.

என்றும் நிலையான கதியாக இருக்கும் அன்னையின் பெருமைகளையும் அவளது உண்மை உருவையும் நினைத்துப் பார்த்து அறிந்து கொள்ளுவது மிகவும் கடினம். அனைத்து உலகங்களையும் பெற்று வளர்த்துக் காத்து அருளும் அவளே அன்னைக்கே உரிய குணத்துடன் நமக்கு மிகவும் நெருங்கியவளாக நம் இதயத்தில் என்றும் நிலைத்து வசிக்கிறாள். எவ்வளவு பெரியவள் அவள் என்பதை அவளது நீர்மையைக் காணும் போது நினைக்க முடிவதில்லை. எவ்வளவு எளியவள் அவள் என்பதை அவளது பெருமையைக் காணும் போது நினைக்க முடிவதில்லை. இப்படி அணுவிற்கு அணுவாகவும் அப்பாலுக்கு அப்பாலாகவும் நிற்கும் அன்னை எண்ணி முடியாத ஒரு கலையைப் போல் விளங்குகின்றாள். கருதக் கிடையாக் கலையானவளே.

எந்த வித அணிகலன்களும் இல்லாமலேயே சிலர் மிக்க அழகாக இருப்பார்கள். அந்த அழகிற்கு அழ்கு சேர்ப்பது போல் மேலும் அணிகலன்கள் பூண்டால் அவர்களின் அழகு இன்னும் பன்மடங்கு பெருகி நிற்கும். அப்படிப்பட்ட அழகெல்லாம் சாதாரண அழகு. அன்னையின் அழகோ அணிகலன்களால் உயர்வுபடுத்த முடியா அழகு. அவளது அழகு அவ்வளவு பேரழகாக இருப்பதால் அணிகலன்கள் அணிந்த பின்னரும் ஒரு வித வேறுபாடும் காணமுடியாது. பூணக் கிடையாப் பொலிவானவளே.

என்றும் உள்ளவள் நம் அன்னை. பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் இருப்பவள் அவள். நம் கற்பனைக்கும் எட்டாதவள். எவ்வளவு உயர்வாக நாம் கற்பனை செய்தாலும் அந்தக் கற்பனையையும் விஞ்சி நிற்கும் புதுமையாக நிற்பவள் அவள். புனையக் கிடையாப் புதுமைத்தவளே.

இவ்வாறு காணக்கிடையாக் கதியாகவும் கருதக் கிடையாக் கலையாகவும் பூணக் கிடையாப் பொலிவாகவும் புனையக் கிடையாப் புதுமையாகவும் அன்னை இருப்பதை உணர்ந்து அவளை முழுமையாக அறிந்து கொள்வதென்பது நம்மால் ஆவதொன்றில்லை என்று நாணி அவளது திருநாமங்களையும் அவளது துதிகளையும் சொல்பவர்களை அவள் நாடி அருள் புரிகிறாள். அவ்வாறின்றி அவளது பெருமைகளை நான் முழுக்கத் தெரிந்து கொள்வேன் என்று தன் முயற்சியால் அது கைகூடும் என்று நினைத்து முயலுபவர்களை 'அவ்வாறே முயன்று எப்போது இயலுகிறதோ அப்போது தெரிந்து கொள்ளுங்கள்' என்று விட்டுவிடுகிறாள் அன்னை. 'அறியேன் என்று சொன்னவனே அறிந்தவன். அறிந்தேன் என்று சொன்னவனே அறியாதவன்' என்று வேதம் முறையிடுகின்றது. அதனை உணர்ந்து நம் இயலாமையை எண்ணி நாணி அவள் திருநாமங்களையும் துதிகளையும் சொல்வோம். நாணித் திருநாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே.

மாணிக்கத்தின் ஒளியைப் போல் செம்மையான நிறத்தை உடையவளே அன்னையே நீ வருவாய். மாதா லலிதாம்பிகையே உனக்கே வெற்றி உண்டாகட்டும். மாணிக்க ஒளிக்கதிரே வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


6. மரகதம்:

மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதிலயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்று அடியவர் குழும
அவர் அருள் பெற அருள் அமுதே சரணம்
வர நவநிதியே ச்ரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

கண்ணுக்குக் குளிர்ச்சியான நிறம் பச்சை நிறம். அதிலும் மரகதப்பச்சை மிக மிக இனிமையானது. செம்மை நிற மாணிக்க ஒளிக்கதிராக விளங்கும் அன்னை அதே நேரத்தில் மரகத வடிவிலும் திகழ்கின்றாள். மரகத வடிவே சரணம் சரணம்.

என்றைக்கும் நிலையான வாழ்வைத் தருவன அவளது திருவடிகள். மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசுவண்டறை பொய்கையும் போன்றதே தேன் பொழியும் அத்தாமரைத் திருவடிகள். மதுரித பதமே சரணம் சரணம்.

இப்பிரம்மாண்டத்தில் நல்லதும் தீயதுமாக பல இயற்கைச் சக்திகள் இருக்கின்றன. நல்ல சக்திகள் சுரர்களாகப் போற்றப்படுகின்றனர். அவர்களின் தலைவன் சுரபதி. அந்த சுரபதி போற்றும் திருவடிகளைக் கொண்டவள் அன்னை. சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்.

இவ்வுலகங்களை எல்லாம் ஈன்றவள் அன்னை. அவள் இசை வடிவானவள். முதல் ஒலியான ஓம்கார வடிவானவள். இந்த இசை சுதி, ஜதி, லயம் என்ற பாகங்களைக் கொண்டது. அந்த பாகங்களின் வடிவாக விளங்குகிறாள் அன்னை. சுதி ஜதி லயமே இசையே சரணம்.

ஹரஹரோஹரா என்று அடியவர்கள் ஒன்று கூடி வணங்கும் போது அவர்கள் இறையருளைப் பெறுவதற்கு அருள் புரிபவள் அன்னை. அவள் அருள் செய்தால் தானே அடியவர்கள் அவன் தாள் வணங்குதல் இயலும். ஹர ஹர சிவ என்று அடியவர் குழும அவர் அருள் பெற அருள் அமுதே சரணம்.

உலகத்தில் இருக்கும் எல்லாவித செல்வங்களும் அருளுபவள் அன்னை. அச்செல்வங்களின் வடிவாக விளங்குபவள் அன்னை. வர நவநிதியே சரணம் சரணம்.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

10 comments:

  1. நாணித் திருநாமமும் நின் துதியும்
    நவிலாதவரை நாடாதவளே//

    அன்னை வராவிட்டால் கஷ்டமாச்சே!!

    அவளை அழைத்து அனைத்தையும் பெறுவோம்.

    ReplyDelete
  2. "சுரபதி"ன்னு ஏன் சொல்றாங்கன்னு இப்பதான் புரிஞ்சது. அழகா விளக்கறீங்க. எனக்கெல்லாம் புரிஞ்ச பொருளைக் கூட மத்தவங்களுக்கு புரிய வைக்கணும்னா கஷ்டம்தான் :) உங்க பணி தொடரட்டும். மிக்க நன்றி குமரா.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி மௌலி, புதுகைத் தென்றல் & கவிநயா அக்கா.

    ReplyDelete
  4. நாணித் திருநாமமும் நின் துதியும்
    நவிலாதவரை நாடாதவளே

    நின் திருநாமத்தையும் உன்னை பற்றிய துதிகளையும் சொல்லுவதிற்கு வெட்கப்பட்டு நாணி சொல்லாதவர்களிடம் செல்லாதவள் நாடாதவள் அன்னையே நீ .அதே நேரத்தில் உனது துதிகளயும் திருநாமத்தையும் வெட்கத்தை விட்டு கதறும் அனபர்களிடம் நாடிச் சென்று அவர்களது குறைகளை நீக்குபவள் என்றும் கொள்ளலாம்.

    ReplyDelete
  5. என்றும் நிலையான பேறு என்னும் போது இவற்றையெல்லாம் தாண்டிய ஒன்று ஒவ்வொரு பிறவியிலும் நமக்குத் துணையாக வரும் ஒன்றையே குறிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒன்று எதுடூ எங்கும் தேடியும் காணக் கிடைக்காத கதி எதுடூ விலை மதிக்க முடியாத அந்த பொக்கிஷம் எதுடூ ஈரேழு உலகங்களுக்கும் அன்னையாக நிற்கும் அவளே நமக்கும் எக்காலத்திலும் நிலையான பேறாகவும் காணக்கிடையாக் கதியாகவும் நிற்கிறாள். காணக் கிடையாக் கதியானவளே.
    //
    சரியாக சொன்னீர்கள்/ சிறப்பான பதிவு. இன்னும் பக்தி மனம் வீசட்டும்.

    ReplyDelete
  6. Welcome to
    http://pureaanmeekam.blogspot.com
    and listen to these stanzas
    in conventional raagas.
    subbu rathinam
    NJ

    ReplyDelete
  7. அருமையான விளக்கம் தி.ரா.ச. மிக்க நன்றி.

    ReplyDelete
  8. வாங்க கடையம் ஆனந்த். பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  9. பாடல் பாடிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி சுப்புரத்தினம் ஐயா (தாத்தா).

    ReplyDelete