Tuesday, March 3, 2009

லலிதா நவரத்தினமாலை 6

7. கோமேதகம்

பூ மேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீ மேல் இடினும் ஜெய சக்தி என
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர் வான் நிலவே
குழல்வாய்மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

அன்னையே. முன் செய்த நல்வினைத் தீவினைப் பயனாக இந்த பூமியின் மேல் பிறந்திருக்கும் நான் அவ்வினைப்பயன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வினைப்பயன்களை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறேனா என்றால் இல்லை; மேன்மேலும் வினைகள் செய்து கொண்டிருக்கிறேன். எந்த செயலும் செய்யாமல் இருக்க இவ்வுலகில் பிறந்த எவ்வுயிரினாலும் இயலாது. அதனால் நான் விரும்பியோ விரும்பாமலோ செயல்களைச் செய்து கொண்டிருக்கிறேன். அச்செயல்களில் சில தன்முனைப்புடன் செய்யப்படுகின்றன; சில பிறர் நன்மையை வேண்டிச் செய்யப்படுகின்றன; பிற வேறு வகைகளில் அமைகின்றன. இச்செயல்கள் எல்லாம் குறைவில்லாது நற்பயன்களைத் தரவேண்டுமென்றால் என் முயற்சி மட்டுமே போதாது. அதற்கு உன் திருவருளும் வேண்டும். பூ மேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாது பயன் குன்றா வரம் தருவாய்.

அச்செயல்களைச் செய்யும் போது உன்னருளினை முன்னிட்டு வரும் தடைகளை எல்லாம் தாண்டும் படி செய்வாய். அத்தடைகள் எப்பேர்ப்பட்டனவாக இருந்தாலும் சரி - தீயில் இடும்படியான தடையாக இருந்தாலுமே சரி - மனத்திடத்துடன் 'ஓம் சக்தி ஜெய் சக்தி' என்று உன் திருநாமங்களை மொழிந்து அத்தடைகளைத் தாண்டும் திறனைத் தந்தருள்வாய். தீ மேல் இடினும் ஜெய சக்தியென திடமாய் அடியேன் மொழியும் திறன் தருவாய்.

கோமேதக மணியைப் போல் அழகுடன் ஒளி வீசுபவளே. வானத்தில் திகழும் குளிர்ந்த நிலவே. புல்லாங்குழலின் இன்னிசையைப் போன்ற குரலினை உடையவளே. நீ வருவாய். அருள் தருவாய். கோமேதகமே குளிர் வான் நிலவே குழல்வாய்மொழியே வருவாய் தருவாய்.

மகாமேருவில் பிந்து நிலையத்தில் என்றைக்கும் நீங்காது நின்று அருள் புரியும் கிளியைப் போன்றவளே. அன்னையே. லலிதாம்பிகையே. உனக்கே வெற்றி உண்டாகட்டும். மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


8. பதுமராகம்:

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ரகலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபினி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

இன்பங்களை அருள்பவளே ரஞ்சனி. இன்பமே வடிவானவளே நந்தினி. அழகிய திருக்கண்களை உடையவளே அங்கணி. பதுமராக மணியின் ஒளியில் நிறைந்தவளே பதுமராக விகாச வியாபினி. அன்னையே அம்பா.

நிலையில்லாமல் அங்கும் இங்கும் அலையும் மனத்தினை அந்நோய் தீர்ந்து ஒரு நிலைப்படுமாறு செய்பவளே சஞ்சல ரோக நிவாரணி. அனைத்துக் கலைகளின் இருப்பிடமே வாணி. மகிழ்வினைத் தருபவளே சாம்பவி. சம்புவின் சக்தியே சாம்பவி. நிலவைத் திருமுடியின் மேல் அணிந்தவளே சந்த்ரகலாதரி. தலைவியே ராணி.

மை நிறம் கொண்டவளே அஞ்சன மேனி. எல்லாவித அணிகலன்களும் அணிந்தவளே அலங்க்ருத பூரணி. மரணமில்லாப் பெருவாழ்வின் திருவுருவே அம்ருத சொரூபிணி. என்றும் மங்கலகரமானவளே நித்ய கல்யாணி.

அழகே உருவான மேரு மலையின் மேல் என்றைக்கும் வாழ்பவளே மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி. அன்னையே லலிதாம்பிகையே உனக்கே வெற்றி. மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

17 comments:

 1. இந்த ரெண்டு பத்தியும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  //தீ மேல் இடினும் ஜெய சக்தி என
  திடமாய் அடியேன் மொழியும் திறமும்//

  இதற்கு மட்டும் - செயல்களை செய்யும்போது வரும் தடைகளின் போது - அப்படின்னு இல்லாம, பொதுவாக வாழ்வில் எந்த விதமான துயரம் வந்தாலும் உன் பெயரைச் சொல்லி அதன் துணையுடன் அந்தத் துயரை எதிர்கொள்ளும் உறுதியைத் தருவாயாக - அப்படின்னு பொருள் கொண்டேன்.

  ReplyDelete
 2. நானும் அப்படித் தான் பொருள் கொள்ளுவேன் அக்கா. எழுதும் போது இப்படி வந்ததால் அப்படியே விட்டுவிட்டேன்.

  எனக்கு இந்த கோமேதகம் பத்தியும் இனிமே வரப்போற 9ம் பத்தியும் ரொம்ப பிடிக்கும் அக்கா. :-)

  மேரு மலையோட படத்தைப் பாத்தீங்களா?

  ReplyDelete
 3. //மேரு மலையோட படத்தைப் பாத்தீங்களா?//

  ஆமா! எங்கே புடிச்சீங்க? மேருமலை எங்கே இருக்கு? முந்தி கண்ணன் ஒரு பதிவுல்ல கேட்டார், பதில் படிச்ச மாதிரி நினைவில்லை.

  ReplyDelete
 4. மகாமேருவோட படத்தைத் தேடுனப்ப இந்தப் படத்தை கூகிளார் கொடுத்தார். சுமேரு பருவதம் ஜாவா தீவில் இருக்கிறதாம். இரவிசங்கர் கேட்ட போது எனக்குத் தெரியாது. அதனால அப்ப பதில் சொல்லலை.

  ReplyDelete
 5. //தீ மேல் இடினும் ஜெய சக்தி என
  திடமாய் அடியேன் மொழியும் திறமும்//

  தசையினைத் தீ சுடினும்,
  சிவ சக்தியைப் பாடும் நல்
  அகம் கேட்டேன்-ன்னு பாரதி வரிகள் மாதிரியே இருக்குல்ல குமரன்?

  மேருமலை படத்துக்கு நன்றி!

  கோமேதகம், பதுமராகம் படம் எல்லாம் போட மாட்டீகளா? எனக்காக இல்லை! எங்க கவி அக்காவுக்காகத் தான் கேக்குறேன்! :)

  இந்த ரத்தினங்களின் ஆங்கிலப் பெயர் என்ன? கலர் எப்படி இருக்கும்-ன்னு ஒரு சிறு குறிப்பு கொடுக்கலாம்! பொதுவா தெரிஞ்சது முத்து, தங்கம், வைரம் தான்!

  ReplyDelete
 6. படத்தில் இருப்பது ஜாவா தீவில் இருக்கும் சுமேரு பர்வதமா?.

  கோமேதகமே, குளிர் நிலவே..அருமை. இரண்டும் பழுப்பான மஞ்சள் நிறமல்லவா?.

  பிந்து மத்ய நிவாசினி கிளிபோல் இருப்பவளா?..அருமை

  //சாம்பவி சந்த்ரகலாதரி//
  'மாதே!, மலையத்வஜ பாண்டிய சஞ்சாத்ரே' அப்படின்னு முத்தையா பாகவதர் எழுதிய பாடல் நினைவுக்கு வருது.

  அதே போல ரஞ்சனி, நந்தினி... அங்கணி என்பவை ராகமாலிகையாக ஒரு பாடல் 'ரஞ்சனி, நிரஞ்சனி, ஜனனி, நீ நிகில லோக நாயகி..' அப்படின்னு வரும். அதை நினைவு படுத்துகிறது.

  ReplyDelete
 7. தகவலுக்கு நன்றி குமரா :)

  //எங்க கவி அக்காவுக்காகத் தான் கேக்குறேன்! :)//

  ஆஹா... :))

  ReplyDelete
 8. மகாமேருவில் பிந்து நிலையத்தில் என்றைக்கும் நீங்காது நின்று அருள் புரியும் கிளியைப் போன்றவளே. அன்னையே. லலிதாம்பிகையே. உனக்கே வெற்றி உண்டாகட்டும். மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

  ""சுமேரு மத்ய வாசினி சிரீ காமட்ஷி என்று முத்துஸ்வாமி தீக்ஷதர் கூறுகிறார் ஹிமாத்ரிசுதே பாஹிமாம் என்ற கல்யாணி ராகப் பாடலில்.
  நான் ஜகர்தா போன போது ஒரு எரிமலையை போய் பார்த்தேன் 200 வருடங்களாக உறங்கிக் கொண்டு இருக்கிறது என்றார்கள். ஆனால் அருகிலிருந்து வரும் தண்ணீர் மிகவும் சூடாக இருந்தது அந்த மலையின் பெயரும் சுமேருதான்
  அன்னயின் அருளை அழகாக விவரித்துள்ளீர்கள் நன்றி

  ReplyDelete
 9. கோமேதகம், பதுமராகம் படம் எல்லாம் போட மாட்டீகளா

  பத்மராகக் கல் என்று ஒன்று உண்டு. அதனுடைய குணம் எதிரில் உள்ள பொருளை அப்படியே பிரதிபலிக்கும். இப்பொழுது இருக்கும் கண்ணாடியைப் போல். ஆனால் அம்பாளின் கன்னம் அந்த பத்மராகக் கல்லை ஒன்னுமே இல்லாமல் செய்யக்கூடிய காந்தி படைத்தது என்கிறது லலிதா ஸ்ஹஸ்ரனாமம்

  ReplyDelete
 10. திராச ஐயா,

  "ஹிமாத்ரிசுதே பாஹிமாம்" பாடல் சியாமா சாஸ்திரிகள் அப்படின்னு ஒரு நினைவு. இப்போ என்னிடம் அந்த காஸட்டும் என்னிடம் இல்லை, பாடலும் முழுதாக நினைவுக்கு வரல்ல. சற்று சரிபார்த்துச் சொல்லுங்களேன்.

  ReplyDelete
 11. இந்த பாடல்களை பாரம்பரிய ராகங்களான ஆனந்த் பைரவி, மற்றும்
  நீலாம்பரியில் பாட இயன்றவரை முயற்சித்திருக்கிறேன்.

  எனது ஆன்மீக வலைப்பதிவில் இதைப் பார்க்கவும். கேட்கவும். இதில்
  ஸ்ரீ சகரம் மற்றும் நவரத்ன கற்கள் அமைப்பும் தரப்பட்டுள்ளது.

  நவரத்ன மாலையைப் பாடுவதில் ஒரு க்ரமம் இருக்கிறது எனச் சொல்லுவார்கள்.
  மாலை தொடுத்து முடிந்தவுடன் அது பற்றி எழுதவும்.

  சுப்பு ரத்தினம்.
  http://pureaanmeekam.blogspot.com

  ReplyDelete
 12. ஆமாம் இரவி. எனக்கும் பாரதியாரின் பாடல் வரிகள் நினைவிற்கு வந்தன.

  நவரத்தின மோதிரமெல்லாம் மத்தவங்க போட்டு பாத்திருக்கேன். ஆனா எந்த இரத்தினம் எப்படி இருக்கும் என்றெல்லாம் தெரியாது. இப்போது கூகிளாரைக் கேட்டால் ஒன்பது மணியும் இருக்கும் படத்தைத் தருகிறார். அதுவும் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அடுத்த இடுகையில் நவரத்தினங்களின் படத்தைப் போடுகிறேன்; ஆனால் எந்த இரத்தினம் எப்படி இருக்கும் என்றெல்லாம் சொல்லத் தெரியாது.

  அந்தப் படத்துல ஆங்கிலப் பெயர்கள் இருக்கு. அதோட தமிழ்ப்பெயர்களை நீங்கள் தான் சொல்லவேண்டும்.

  ReplyDelete
 13. குளிர் வான் நிலவைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் பொன்னிறத்தில் இருக்கும். கோமேதகமும் பார்த்திருப்பேன். ஆனால் நிறம் என்ன நிறம் என்று தெரியாது மௌலி. :-)

  நீங்கள் சொல்லும் பாடல்களை எல்லாம் 'அம்மன் பாட்டில்' இடலாமே.

  ReplyDelete
 14. தி.ரா.ச. நீங்கள் சொல்லும் மலை தான் இந்தப் படத்தில் இருக்கிறதா?

  ReplyDelete
 15. ஞாயிறு போற்றுதும் பாடல்ல இளங்கோவடிகள் 'மேரு வலம் தருதலான்' என்கிறார். சூரியனோட தட்சிணாயண உத்தராயண பாதை இந்த மேருவின் அருகில் தான் திசை திரும்புகின்றது போலும்; அதனால் தான் அப்படி சொல்லியிருப்பார்களோ?

  ReplyDelete
 16. பாடலைப் பாடித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 17. இன்றைக்குதான் இந்த பாடலும் கேட்டேன். நன்றி தாத்தா.

  ReplyDelete