Friday, May 21, 2010

அன்னைக்கு 64 உபசாரங்கள்...பாகம்-1

இது அம்மன் பாட்டில் 194-ஆம் பதிவு! 200 எட்டும் வரை, இந்த 64 உபசாரப் பதிவுகளைப் பார்த்து, பின்னர் 200-ஆம் இடுகையைக் கொண்டாடுவோம்!
இந்த இடுகைகள் முன்பு செளந்தர்யலஹரி வலைப்பூவின் நிறைவில் வந்தவை! இங்கு மீள்பதிக்க இசைந்த மெளலி அண்ணாவுக்கு, அம்மன் பாட்டுக் குழுவினரின் நன்றி!

அன்னையின் மீள் பதிவுகளை,
மீள் உபசாரங்களாகக் கருதி...
மீண்டும் வாசித்து மகிழுங்கள்!


உபசாரம் - பாகம் 1

ஆதி சங்கரரால் அன்னையின் மிது இயற்றப்பட்ட பல நூல்களில் இந்த சதுஷ்-சஷ்டி உபசார பூஜையும் ஒன்று. இதைப் பாராயணம் செய்வதே 64 உபசாரங்களுடன் செய்யும் பூஜைக்கு சமம் என்று ஆன்றோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

செளந்தர்ய லஹரியுடன் இந்த வலைப்பதிவை முடிக்க இருந்தேன். ஆனால் அம்பிகைக்கு இங்கேயே ஒரு பூஜையைச் செய்து முடிக்க நினைக்கிறேன். இந்த நவராத்ரி தினங்களில் சில பதிவுகளாக இந்த 64 உபசார ஸ்லோகங்களையும் பார்க்கலாம்.

64 உபசாரங்களையும் தமிழில் சகோதரி கவிநயா அவர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.
தமிழில் கவிநயா அவர்கள் எழுதியிருக்கும் பாடல்களை, திரு. கே.ஆர்.எஸ் அவர்கள் அழகாகப் பாடிய லிங்க் கீழே!.
Annaikku_64_Upacha...
இன்றிலிருந்து தொடராக விஜயதசமிக்குள் இதை முடிக்க முயல்கிறேன்.
******************************************************************************1. சுப்ரபாதம்

உஷஸி மாகத மங்கள காயனை
ஜடிதி ஜாக்ருஹி ஜாக்ருஹி ஜாக்ருஸி!
அதிக்ருபார்த்ர கடாக்ஷ நிரீக்ஷணை:
ஜகதிதம் ஜகதம்பு ஸுகீ குரு !!

தாயே!, காலையில் பக்தர்கள் பாடும் கானத்தை கேட்டு சீக்கிரம் எழுந்து உலகிற்கு நன்மை அருள்வாயாக. கவிநயா அவர்கள் எழுதிய சுப்ரபாதம் கீழே
புள்ளினங்கள் பண்ணமைத்து பூபாளம் இசைத்திருக்க (1)
வெள்ளியதும் முளைத்ததம்மா வெண்ணிலவே எழுந்தருள்வாய்!
காதளவில் நீண்டிருக்கும் கண்ணிமைகள் மலர்ந்திடவே
சீதளமே புவியனைத்தும் சீர்பெறவே எழுந்தருள்வாய்!

2. மணிமண்டபம்

கனக மய விதர்தி சோபமானம் !
திசிதிசி பூர்ண ஸுவர்ண கும்ப யுக்தம்
மணிமய மண்டப மேஹி மாத:
மயிக்ருபபாஸு ஸமர்சனம் க்ருஹிதும் !!

நான் செய்யும் பூஜையை ஏற்றுக் கொள்ள மணிமண்டபத்திற்கு வாருங்கள் அம்பிகையே!.

3. மணிமய மாளிகை

கனக கலச சோபமான சீர்ஷம்
ஜலதர லம்பிஸமுல்லஸத் பதாகம் !
பகவதி தவ ஸந்நிவாஸ ஹேதோ
மணிமய மந்திர மேத தர்ப்பயாமி !!

இந்த மணிமண்டபம் தங்க கலசங்கள் கொண்டது. விண்ணளாவும் கொடிகள் பறக்கின்றன. இதில் வாசம் செய்ய வாருங்கள் தேவி. மேலே இருக்கும் இரு உபசாரங்களுக்கு இணையான கவிநயா அவர்களின் படைப்பு கீழே!

செம்பொன்னால் வடிவமைத்து செய்துவைத்த மாளிகையில் (2)
ஆயிரமாம் தோரணங்கள் அர்த்தமணி மண்டபங்கள்
சேயிழையே உனக்கெனவே செதுக்கி வைத்த மண்டபத்தில் (3)
பார்முழுதும் போற்றிடவே வீற்றிருக்க வந்தருள்வாய்!

4. பல்லக்கு

தபமீயமயீ ஸுதூலிகா கமநீயா ம்ருதுலோத்தரச்சதா !
நவரத்ன விபூஷிதாமயா சிபிகேயம் ஜகதம்பதேர்பிதா !!

அழகானதும், மென்மையானதும், நவரத்னங்களால் இழைக்கப்பட்டதுமான பல்லக்கை உங்களுக்கு அளிக்கிறேன். கவிநயா அவர்களின் படைப்பு கீழே!

ஏற்றிவைத்த தீபங்கள் எழிலுடனே ஒளிர்ந்திருக்க
போற்றியுன்னை வேண்டிநிற்கும் பக்தர்மனம் களித்திருக்க
மாற்றும்மணம் மாறாத மலர்கள்அலங் கரித்திருக்க
காற்றேகும் பல்லக்கில் கற்பகமே எழுந்தருள்வாய்! (4)

5. சிம்மாசனம்

விவித குஸும கீர்ணே கோடி பாலார்க்க வர்ணே !
பகவதீ ரமணீயே ரத்ன ஸிம்ஹாஸனேஸ்மின்
உபவிச பதயுக்மம் ரத்ன பீடநிதாய !!


ஸுவர்ணமயமான மேடைமீது, கோடி சூர்யப் பிரகாசமான, அழகான ரத்ன சிம்மாசனத்தில் வந்து அமருங்கள் தாயே!

6. மேல் விமானம்

மணி மெளக்திக நிர்மிதம் மஹாந்தம் கனகஸ்தம்ப சதுஷ்ட்யேன யுக்தம் !
கமனீப தமம் பவானி துப்யம் நவமுல்லோச மஹம் ஸமர்ப்பயாமி !!

மணி முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தூண்கள் தாங்கும் புத்தம் புது மேல் விமானத்தை உமக்கு அளிக்கிறேன்.கவிநயா அவர்கள் தமிழில் செய்த சிம்மாசனம் மற்றும் மேல்விமான வர்ணனை கீழே!

தகதகக்கும் தங்கத்தில் தாங்கிநிற்க தூணமைத்து
பளபளத்து உளம்மயக்கும் முத்துவிதா னத்திலே (6)
ஜொலிஜொலிக்கும் இரத்தினங்கள் பதித்தசிம் மாசனத்தில்
கொலுவிருக்க வேண்டுகின்றோம் கோகிலமே வந்தருள்வாய்! (5)

7. பாத்யம்

தூர்வயா ஸரஸிஜான்வித விஷ்ணு
க்ராந்தயா ச ஸஹிதம் குஸுமாட்யம் !
பத்மயுக்ம ஸத்ருசேபத யுக்மே
பாத்ய மேத துரரீகுரு மாத: !!

தூர்வை, தாமரை, விஷ்ணுக்ராந்தி முதலிய புஷ்பங்கள் நிறைந்த பாத்யத்தை உமது பாதங்களில் அளிக்கிறேன். ஏற்றுக்கொள்வீர்களாக.

தாயுன்னைத் தாங்கிநிற்கும் தாமரையின் இதழெடுத்து
மாலவனின் பெயர்கொண்ட கிரந்திமலர் சேர்த்தெடுத்து
ஆய்ந்துஇன்னும் மலரெடுத்து தூயகங்கை நீரிலிட்டு
தேமலர்போல் தாளிணைகள் தூய்மைசெய்ய நீயருள்வாய்! (7)

8. அர்க்யம்

கந்த புஷ்ப யவஸர்ஷப தூர்வா
ஸம்யுதம் கிலகுசாக்ஷத மிச்ரம் !
ஹேம பாத்ர நிஹிதம் ஸஹரத்னை:
அர்க்யமேத துரரீகுரு மாத: !!

கந்த புஷ்பம் நவதான்யம், தூர்வை, எள்ளுகர்ப்பம் அக்ஷதௌ ஆகியவைகள் கலந்து தங்கக் கிண்ணத்தில் வைக்கப்பட்ட அர்க்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

எண்ணுகின்ற எண்ணம்முதல் பண்ணுகின்ற செயல்வரைக்கும்
கண்ணுதலான் இடப்பாகம் கொண்டவளே உனக்கேயாம்
சந்தனத்தால் நீரெடுத்து சமர்ப்பணம் செய்யுகின்றோம்
சியாமளையே கோமளமே கருணையுடன் ஏற்றருள்வாய்! (8)

9. ஆசமனம்

ஜலஜத்யுதினா கரேணா ஜாதீ
பலதக்கோல லவங்க கந்த யுக்தை: !
அம்ருதை ரம்ருதை ரிவாதி சீதை:
பகவத்யாசமனம் விதீயதாம் !!

ஜாதிக்காய், கந்தம், லவங்கம் இவைகளுடன் கூடிய, அமிர்தம் போன்ற குளிர்ந்த ஜலத்தால் ஆசமனம் செய்யுங்கள் அம்மா!

10. மதுபர்க்கம்

நிஹிதம் கனகஸ்ய ஸம்புடே
பிஹிமே ரத்ன பிதானகேன யத்!
ததிதம் ஜகதம்ப தேர்பயிதம்
மதுபர்க்கம் ஜனனிப்ரக்ருஹ்யதாம்!!


தங்க ஸம்புடத்தில், ரத்ன மூடியால் மூடி வைக்கப்பட்ட மதுபர்க்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் தாயே! ஆசமனம், மதுபர்க்கம் ஆகிய இரண்டிற்கும் கவிநயா அவர்கள் எழுதிய வர்ணனை கீழே!

ஏலமுடன் சாதிக்காய் சேர்த்திட்ட குளிர்நீரை
கோலஎழில் கொண்டவளே கொஞ்சம்நீ பருகிடுவாய் (9)
பாலோடு தேன்கலந்தே பொன்செம்பில் தருகின்றோம்
வேலாடும் விழியுடையாய் விருப்பமுடன் பருகிடுவாய்! (10)

5 comments:

 1. உஷஸி மாகத மங்கள காயனை
  ஜடிதி ஜாக்ருஹி ஜாக்ருஹி ஜாக்ருஸி!
  அதிக்ருபார்த்ர கடாக்ஷ நிரீக்ஷணை:
  ஜகதிதம் ஜகதம்பு ஸுகீ குரு !!

  என்று துவங்கும் உபசாரத்துடன் ஷோடச உபசாரத்தையும் தமிழ் மொழியிலே அழகாக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். இது ஒரு நல்ல ஆரம்பம்.

  கவி நயா அவர்கள் 64 உபசாரங்களையும் தமிழிலே தந்திருக்கிறார்களா ? இதுவரை படிக்கவில்லையே !
  என்க்கு அவர்கள் அந்த தொகுப்பினை ஈ மெயிலில் அனுப்பி வைப்பார்கள், அன்னையின் அருள் எனக்கிருப்பின்.

  இந்த முதற் ஸ்லோகம், கொஞ்சம் உச்சரிப்பு அங்க்ங்கே லேசா இடிக்கிறார்போல தோன்றுகிறது.
  ushasim agatha mangala gayanai
  jatithi jaagruhi jaagruhi jaagrusi.

  காயா என்றால் உடம்பு. காயனை என்றால் உடம்பினை என்று பொருள் வந்து விடும்.
  மூன்றாவது க அதாவது ga காயனை என்றால் பாடல்கள், பாடப்பெறுகின்றன. என்று பொருள்.

  திவா ஸார் அருள் கூர்ந்து மேல் விளக்கம் அளித்திட வேண்டும்.
  கே.ஆர்.எஸ். பணி சிறப்பாகத் தொடர வாழத்துக்கள்.

  மீனாட்சி பாட்டி.
  http://pureaanmeekam.blogspot.com

  ReplyDelete
 2. அன்னையின் அருளால்
  அவனி எல்லாம் மகிழ்ந்திட‌
  அவளைப்போற்றிடவே
  சுள் எனக்கதிரவன் வருமுன்
  சுப்ரபாதம் ஒன்றிசைத்து
  மணிமண்டபத்திலோர்
  மாலைசூழ் ஆசனம் அமைத்து
  ஆங்கவளை அம்ரச்செய்து
  ஆயிரம் மலர்கள் சாத்தி
  பால், தயிர், தேன் கலந்த
  பஞ்ச அமிர்தம் நிவேதித்து
  நீராஜனம் சாதித்து
  நீயே எனக்கெல்லாம் என
  மனமுருகிச் செய்த பாடல்
  மயிர்சிலிர்க்கச் செய்ததய்யா !!!

  மேடம் கவி நயா அவர்கள் பாடலை ஒரு ராக மாலிகையாக , பூபாளம், அடாணா, சஹானா, தன்யாசி கலந்த தோடி,
  நீலாம்பரி, ஷண்முகபிரியா, மத்யமாவதி ஆகிய மலர்களை, சுப்பு தாத்தா எனும் நாரில் தொடுத்து எனது
  வலையில் இணைத்திருக்கிறேன்.

  சுப்பு ரத்தினம்.
  http://menakasury.blogspot.com

  ReplyDelete
 3. சுப்பு தாத்தா, மன்னிக்கணும். வேலை ரொம்ப அதிகம். இப்பதான் பார்த்தேன். இன்று இரவு 64 உபசாரங்களின் தொகுப்பை அனுப்பி வைக்கிறேன்... உங்களுடைய அன்பான ஆசிகளுக்கு என்றென்றும் நன்றி.

  வெகு நாட்களுக்கு முன் மௌலியுடைய சௌந்தர்யலஹரி வலைப்பூவில் வந்தது.

  ReplyDelete