Thursday, July 22, 2010

ஆடி வெள்ளி 1: இது பி.சுசீலா-வா? எல்.ஆர்.ஈஸ்வரியா??

அம்மன் பாட்டு-ன்னாலே, அதுவும் ஆத்தா, மகமாயீ-ன்னு ஹை பிட்ச் பாட்டெல்லாம் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களுக்கே சொந்தம்!
மென்மையா, மெலடி பாடும் இசையரசி பி.சுசீலா போன்றவர்கள், இது போல மாரியம்மன் பாட்டு எல்லாம் பாடினா எடுபடுமா?
கீழே பாடுறது ஈஸ்வரியா? சுசீலாம்மா-வான்னு, கேட்டுட்டு சொல்லுங்க பார்ப்போம்!


இன்று முதல் ஆடி வெள்ளி! ஆடி முதல் வெள்ளி!
அம்மன் பாட்டு அடுத்த இடுகையில் 200-ஐத் தொட்டுவிடும்!
கவிநயா அக்கா - எங்கிருந்தாலும் மேடைக்கு வாங்க!

ஆன்மீக குழு வலைப்பூக்களில், 200-ஐத் தொட்ட முதல் வலைப்பூ, அவள் பாட்டு தான்! அம்மன் பாட்டு தான்!
ஆடிக் கொண்டாட்டங்களில் ஆடிக்கிட்டே கலந்துக்குங்க!

இதோ, பி.சுசீலா-வா? எல்.ஆர்.ஈஸ்வரியா??ஆயி மகமாயி...ஆயிரம் கண்ணுடையாள்...
நீலி திரிசூலி...நீங்காத பொட்டுடையாள்...
சமய புரத்தாளே...சாம்பிராணி வாசகியே...
சமயபுரத்தை விட்டுச் சடுதியில வாருமம்மா..


மாயி மகமாயி மணி மந்திர சேகரியே! - எங்க
ஆயி உமையானவளே ஆத்தா என் மாரிமுத்தே!
(மாயி)

சிலம்பு பிறந்ததம்மா சிவகங்கைச் சாலையிலே!
பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சன்னிதியில்!
உடுக்கை பிறந்ததம்மா உருத்ராட்ச பூமியிலே!
பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்!
(மாயி)

பரிகாசம் செய்தவரை, பதைபதைக்க வெட்டிடுவே!
பரிகாரம் கேட்டு விட்டா, பக்கத்துணை நீ இருப்பே!
மேனாட்டுப் பிள்ளையிடம், நீ போட்ட முத்திரையை
நீபார்த்து மாத்தி வச்சா, நாள் பார்த்து பூசை செய்வான்!

(மாயி)

குழந்தை வருந்துவது கோயிலுக்குக் கேட்கலையோ?
மைந்தன் வருந்துவது மாளிகைக்குக் கேட்கலையோ?
ஏழைக் குழந்தையம்மா எடுத்தார்க்குப் பாலனம்மா!
உன் தாளைப் பணிந்து விட்டால் தயவுடனே காருமம்மா!

கத்தி போல் வேப்பிலையாம்
காளியம்மன் மருத்துவராம்!
ஈட்டி போல் வேப்பிலையாம்
ஈஸ்வரியின் அருமருந்தாம்!
வேப்பிலையின் உள்ளிருக்கும்
விந்தைதனை யார் அறிவார்!


ஆயா மனமிரங்கு! - என்
ஆத்தா மனமிரங்கு!
அன்னையே நீ இரங்கு! - என்
அம்மையே நீ இறங்கு!!

குரல்: பி.சுசீலா
படம்: ஆதி பராசக்தி
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
(மாரியம்மன் தாலாட்டு என்ற நாட்டுப்புறப் பெரும்பாடலை ஒட்டி திரைப்படத்துக்காக எழுதியது)

சமயபுரம் மாரியம்மன்

பாட்டைக் கொஞ்சம் கவனிச்சா, இன்னும் சுவை தெரியும்!
வடமொழிச் சொற்களுக்கு எல்லாம் கூட நாட்டுப்புறத்தில் அழகாத் தமிழாக்கி வச்சிருக்காங்க நம்ம கிராமத்து மக்கள்! நகரத்து மக்கள் தான் நந்தமிழை ஒரு வழி பண்ணி இருக்காக போல! :)
நீங்காத பொட்டுடையாள் = நித்ய சுமங்கலி!
காப்பாத்து என்பதைக் காரும் அம்மா என்று நாட்டுத் திரிபு!

அன்னையே நீ இ"ர"ங்கு! அம்மையே நீ இ"ற"ங்கு என்று எழுதுகிறார் கண்ணதாசன்!
அன்னை மனம் இ"ர"ங்க வேணுமாம்! = அதனால் இடையின "ர"!
அம்மை (நோய்) இ"ற"ங்க வேணுமாம்! ஆணை! = அதனால் வல்லின "ற"!

அன்னை இரங்கு! அம்மை இறங்கு!
அன்னை-அம்மை/இரங்கு-இறங்கு-ன்னு சினிமாத் தமிழிலும் விளையாட வல்ல ஒரு அரசர், அது நம் கவி அரசரே!

படத்தில் வெள்ளைக்கார துரை என்ன தப்பு செஞ்சாரு? யாரு அவரு? இது சமயபுரத்து தல வரலாறா என்பதைச் சினிமா பார்த்த மக்கள், கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க! :)

ஆடிப் பதிவுகள் தொடரும்...அடுத்து 200!

6 comments:

 1. படத்தில் துரையாக நடித்திருப்பவர் மேஜர் சுந்தரராஜன். அவர் ஷூவைக் கழற்றாமலேயே ஆலயத்தில் நுழைவார். அர்ச்சகர் சுவாமியின் சக்திகளை எடுத்துக்கூறி சுவாமியின் முகத்தில் வியர்வைத்துளிகள் வருவதை சுட்டிக்காட்டுவார். துரை அதை நம்பாமல் அந்த வியர்வைத்துளிகளைத் துடைக்கச் சொன்னதும் இவருக்கு முகமெல்லாம் அம்மை போட்டு கண்களும் தெரியாமல் போய்விடும்.
  இக்கதை தஞ்சை அருகில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் பற்றியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உறுதியாகத் தெரியவில்லை.

  ReplyDelete
 2. பிரகாசம் ஐயா சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன். :-)

  ReplyDelete
 3. வந்துட்டேன் தம்பீ :) அருமையான பாடல் ஆடி வெள்ளியில் அம்மாவை அழைக்க. வாழ்க!

  ReplyDelete
 4. பிரகாசம் செட்: இக்கதை தஞ்சை அருகில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் பற்றியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. //

  நீங்கள் கேள்விப்பட்டது சரிதான்.

  சுப்பு ரத்தினம்
  http://kandhanaithuthi.blogspot.com

  ReplyDelete
 5. பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
  உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
  www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
  எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

  ReplyDelete
 6. நீங்கதா பொட்டுடையால் நித்திய சுமங்கலி மாரியம்மன்

  ReplyDelete