Friday, May 10, 2013

எப்போ ??

   

                    எப்போ ??
(மிகவும் பொருத்தமான ராகத்தில் சுப்புசார்  பாடுகிறார் :

http://www.youtube.com/watch?v=PbnM5WFW_rc&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1 )


அப்போ: 

நாடகத்திலே நடிக்கப் 
பேதை என்னை அழைத்து ,
வேடமெல்லாம் பூணவைத்து
மேடையிலே ஏற்றிவிட்டாய்.

தாய் நீயே  நாடகத்தின்
நாயகி என்றறிந்ததுமே 
மாயே !அதில் நடிக்க 
சேய்நானும் தயங்கவில்லை .

நடித்தபடி இருந்த என்மேல் 
அடிவிழுந்து நான் துடிக்க ,
"நடப்பதெல்லாம் நடிப்பு-அடி 
பொறுத்தலுமோர் படிப்பு"என்றாய் 

"மெய்யடியார் மீது விழும்
 பொய்யடியே பேரிடியா ?
 ஐயோ !"என்று நானலற ,
"தொய்யாதே"எனத்தடுத்தாய் .

விடம் விழுங்கி இடமுறையும்
மடவாளே !கடையனுக்கு
விடம் விழுங்கும் வித்தையையும்
படிப்படியாய்ப் பயிற்றுவித்தாய் .

அடி=அன்பு ,இடி= இன்பம் ,
விடம்=விருந்து என்றுரைக்கும் 
புதிய அகராதியொன்றைப்
பரிசாக எனக்களித்தாய் .

இப்போ:

டவூரில் அமர்ந்தென்னைப் 
புடம்போடும் அபிராமி!
அடிவாங்க,இடிதாங்க ,
விடம்விழுங்கப் பழகிவிட்டேன்.

பாத்திரந்தனை  உணர்ந்து  
நேர்த்தியாக நடித்தபடி 
காத்திருக்கேன்  அடித்தகைதான்   
சேர்த்தணைக்கும்  என்றுநம்பி .

எப்போ ??

ஆடகத்தாமரையே!உன்
நாடகம்  முடிவதெப்போ?
வேடம் களைந்துனை நான்
கூடுவது  எப்போ?எப்போ??







 

4 comments:

  1. அருமை...

    கருணைக்கடல் தான் பதில் சொல்ல வேண்டும்...

    ReplyDelete
  2. //புடம்போடும் அபிராமி!
    அடிவாங்க,இடிதாங்க ,
    விடம்விழுங்கப் பழகிவிட்டேன்.//

    ஆனால் நான் பழகி விட்டேன் என்று நினைக்கும் போதுதான் இன்னொரு பெரீய்ய அடி வந்து விழும். சொல்லாமல் சொல்வாள், இன்னும் பழகவில்லையடி அடி, என்று.

    ReplyDelete
  3. //எப்போ ??

    ஆடகத்தாமரையே!உன்
    நாடகம் முடிவதெப்போ?
    வேடம் களைந்துனை நான்
    கூடுவது எப்போ?எப்போ??//

    நாம் பழுக்க அந்த சமயமும் வந்து விடும்.

    ReplyDelete