Monday, May 19, 2014

என்று வருவாயோ?


நாதநாமக்ரியா மற்றும் ஸாரங்கா ராகங்களில் சுப்பு தாத்தா பாடித் தந்ததை நீங்களும் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா! கவிதை வடிவில் இருக்கும் இதனை பாட முடியும் என்று நான் நினைத்திருக்கவில்லை! ஆனால் நம் தாத்தாவினால் இசையமைக்க முடியாததும் உண்டோ? :)



என்று வருவாயோ
எனை வாட்டும் வேதனை களைய?
என்று தருவாயோ
உன் தரிசனம் என் மனம் நிறைய?

என் விழி வழியும் நீர் உனக்கு வேடிக்கையானதோ?
என் மதி மயக்கும் கலக்கம் உனக்கு வாடிக்கையானதோ?
என் கேவல் உன் காதில் குழலோசை யானதோ?
என் பாடல் உனைச் சேராது தடம் மாறிப் போனதோ?

உனக்கான என் அன்பை உயிரூற்றி வளர்க்கின்றேன்
உன் நினைவின் போதையிலே எனை நானே மறக்கின்றேன்
கண்களும் கருக் கொள்ளும் உன் கனிவிலென அறிந்து கொண்டேன்
புன்னகையில் பூப் பூக்கும் உன் இதழால் புரிந்து கொண்டேன்!

என் மனதை நீ அறிவாய் என்றேனும் நீ வருவாய்
என் ஏக்கம் உணர்ந்திடு்வாய் கருணையுடன் தீர்த்திடுவாய்
வைகறையின் விடியலுக்கு புள்ளினம்போல் காத்திருப்பேன்
வாசலிலே தென்றல் வரும் வழி பார்த்து தவமிருப்பேன்!


--கவிநயா

2 comments:

  1. வைகறையின் விடியலுக்கு புள்ளினம்போல் காத்திருப்பேன்
    வாசலிலே தென்றல் வரும் வழி பார்த்து தவமிருப்பேன்!

    arumai Kavinaya!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க திவாகர் ஜி! மிக்க நன்றி.

      Delete