Wednesday, June 20, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 3

"மாரியம்மன் தாலாட்டு" -- 3

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"


[கிராமங்களில் இன்று நாமெல்லோரும் காணும் ஒரு காட்சி, தூளி!
தன் புடவையால் கட்டிய தூளியில் குழந்தையை இட்டு, தனக்கு வலப்புறமும், இடப்புறமுமாக ஒரு ராகம் பாடிக்கொண்டே தாய் ஆட்டுவாள்.
அதே போல ஒவ்வொரு வரியையும் இரண்டாகப் பிரித்து ஒரு தாலாட்டு பாடுவது போல இதைப் படித்துப் பாருங்கள்! இன்புறுங்கள்!]

" மாரியம்மன் துதி"

"மாயி மகமாயி மணிமந்திர சேகரியே

ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே

மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா

மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா

ஆயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா

தாயே துரந்தரியே ஆஸ்தான மாரிமுத்தே

திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே

எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி

கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே

காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மா [10]

நாரணனார் தங்கையம்மா நல்லமுத்து மாரியரே

உன் கரகம் பிறந்ததம்மா கன்னனூர் மேடையிலே

உன் வேம்பு பிறந்ததம்மா விஜயநகர் பட்டணமாம்

உன் சூலம் பிறந்ததம்மா துலங்குமணி மண்டபத்தில்

உன் அலகு பிறந்ததம்மா அயோத்திநகர் பட்டணமாம்

உன் பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியாம்

உன் உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச பூமியிலே

உன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்

உன் கருத்து பிறந்ததம்மா கஞ்சகிரி இந்திரபுரம்

உன் அருளர் தழைக்கவம்மா வையங்கள் ஈடேற [20]

உன் குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே மாரிமுத்தே

உனக்கு மூன்று கரகமம்மா முத்தான நற்கரகம்

உனக்கு ஐந்து கரகமம்மா அசைந்தாடும் பொற்கரகம்

உனக்கு ஏழு கரகமம்மா எடுத்தாடும் பொற்கரகம்

உனக்கு பத்து கரகமம்மா பதிந்தாடும் பொற்கரகம்

வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளை யாடிவர

ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா

பதினாயிரங் கண்ணுடையாள் பராசக்தி வாருமம்மா

துலுக்காணத் தெல்லையெல்லாம் குலுக்காடப் பெண்பிறந்தாய்

துலுக்காணத் தெல்லைவிட்டு துரந்தரியே வாருமம்மா [30]


[ஒவ்வொரு வரியையும் மனதில் பதிந்து ஊன்றிப் படிக்க வேண்டியே, சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்.]




Tuesday, June 19, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 2

"மாரியம்மன் தாலாட்டு" -- 2

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"


"விநாயகர் துதி"

'காப்பு'

'கொச்சகக் கலிப்பா'

"பூதலத்தில் யாவர்க்கும் பேராதரவா யென்னாளும்

மாதரசி யென்று வாழ்த்துகின்ற மாரியம்மன்

சீதரனார் தங்கை சிறப்பான தாலாட்டைக்

காதலுட னோதக் கணபதியுங் காப்பாமே"

'வெண் செந்துரை'

"முந்தி முந்தி விநாயகரே முக்கண்ணனார் தன்மகனே

கந்தருக்கு முன்பிறந்த கற்பகமே முன்னடவாய்

வேலவர்க்கு முன்பிறந்த விநாயகரே முன்னடவாய்

வேம்படியிற் பிள்ளையாரே விக்கினரே முன்னடவாய்

பேழை வயிற்றோனே பெருச்சாளி வாகனரே

காரண மால்மருகா கற்பகமே மெய்ப்பொருளே

சீரான நல்மருகா செல்வக்கணபதியே

ஒற்றைக் கொம்போனே உமையாள் திருமகனே

கற்றைச் சடையணிந்த கங்காதரன் மகனே

வித்தைக்கு விநாயகனே வெண்ணையுண்டோன் மருகா

மத்தக்கரி முகவா மாயோன் மருகோனே

ஐந்துகரத்தோனே யானை முகத்தோனே

தந்தமத வாரணனே தற்பரனே முன்னடவாய்

நெஞ்சிற் குடியிருந்து நீயெனக்கு முன்னடவாய்

பஞ்சஞ்சு மெல்லடியாள் பார்வதியாள் புத்திரனே

வேழமுகத்தோனே விநாயகரே முன்னடவாய்

தாழ்விலாச் சங்கரனார் சற்புத்திரா வாருமையா

முன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னாலே

கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே

முத்தாலே தண்டை கொஞ்ச முன்னடவாய் பிள்ளையாரே

செல்வக் கணபதியுன் சீர்ப்பாதம் நான் மறவேன்."



"சரஸ்வதி துதி"


"தாயே சரஸ்வதியே சங்கரியே முன்னடவாய்

என்தாயே கலைவாணி யோகவல்லி நாயகியே

வாணி சரஸ்வதியே வாக்கில் குடியிருந்து

என்நாவிற் குடியிருந்து நல்லோசை தாருமம்மா

கமலாசனத்தாளே காரடி பெற்றவளே

என்குரலிற் குடியிருந்து கொஞ்சடி பெற்றவளே

என்நாவு தவறாமல் நல்லோசை தாருமம்மா

மாரியம்மன் தன்கதையை மனமகிழ்ந்து நான் பாட

சரியாக என்நாவில் தங்கிக் குடியிரும்மா

கன்னனூர் மாரிமுத்தே கைதொழுது நான்பாட

பின்னமில்லாமல் பிறகிருந்து காருமம்மா."

Monday, June 18, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 1


"மாரியம்மன் தாலாட்டு" -- 1
வெகு நாட்களாக எனது நண்பர் திரு. நாமக்கல் சிபி என்னைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு தோத்திரப்பாடலை,

தமிழகத்திலுள்ள அனைத்து இந்துக்களாலும் போற்றி வணங்கப்படும் ஒரு தெய்வத்தைப் போற்றிப் பாடும் தோத்திரப்பாடலை,

தமிழ் தெரிந்த அனைவராலும் இயல்பாக மனமொன்றிப் பாடக்கூடிய ஒரு தோத்திரப்பாடலை,

படித்தவர் முதல்,பாமரர் வரை அனைவராலும் விரும்பிப் பாடப்படும் ஒரு தோத்திரப்பாடலை,

நம்பிக்கையோடு படித்தவர்க்கும், கேட்டவர்க்கும் பலவித நன்மைகளை அளிக்கும் வல்லமை படைத்த ஒரு தோத்திரப்பாடலை,

விளக்கம் எதுவும் இல்லாமலேயே எளிதாய் புரியக்கூடிய ஒரு தோத்திரப்பாடலை,

ஆடி மாதம் வந்தாலே, இறை நம்பிக்கை கொண்ட அனைத்துத் தமிழரும் தவறாது செல்லும் ஒரு திருத்தெய்வத்தின் தோத்திரப்பாடலை,

இன்று தொடங்கி சிறு சிறு பகுதிகளாக தினந்தோறும் இங்கே வழங்க,

எல்லாம் வல்ல பிள்ளையாரையும், எனையாளும் முருகனையும், அந்த மஹாசக்தியையும் வணங்கித் துதித்து,

"எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்துவரும் மாரியம்மன் தாலாட்டு"

எனும் திருத்தோத்திரத்தை நாளை முதல் பதிய எண்ணியிருக்கிறேன்.

கிட்டத்தட்ட 700 வரிகளுக்கும் மேற்பட்ட இத்தோத்திரத்தை நாளொன்றுக்கு 30 வரிகள் என பதிக்க நினைக்கிறேன்.

ஆடி மாதத் தொடக்கத்தில், அவள் அருளால், அனைவர் கையிலும் முழு நூலும் கிட்டிவிடும் என நம்புகிறேன்

இதற்கு விளக்கம் எதுவும் தேவையில்லை எனக் கருதுவதால், சொல்ல நினைப்பதை முதல், கடைசி பதிவுகளில் மட்டுமே சொல்லுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனக்குத்தோன்றும் இடங்களில் அருஞ்சொற்பொருள் தேவையெனப் பட்டால் இடுகிறேன்.

உங்களுக்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் தயங்காது கேட்கவும். ......தெரிந்த வரையில் சொல்லுகிறேன்.

இதனை ஒட்டி நான் எழுதிய ஒரு சிறு பாவுடன் இதனைத் துவக்குகிறேன்.

நாளை முதல் வருவது மூலநூல்.

இயற்றியவர் யாரெனக் குறிப்பிடவில்லை.

அனைவருக்கும் மாரியம்மன் அருள் கிட்ட வேண்டுகிறேன்.

ஓம் சக்தி மாரியம்மன் துணை.
*********************************************************************

ஓம் கணபதி துணை
ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

'எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்'


"மாரியம்மன் தாலாட்டு"

எண்ணியவர்க்கு எண்ணியதெலாம் தரும்,
திண்ணிய மனமுடையோர் தினமுமோதும்
கண் கொடுக்கும் சமயபுரம் மாரியம்மன்
பண்ணிதைப் பாடிட பண்ணிய பாவம் போகுமே!

[இது ஒரு எளிய பக்தன் தன் தாயை அழைத்து, தன் மனதில் தோன்றுகின்ற அத்தனை உணர்வுகளையும்,
மனம் போன போக்கில், இஷ்டப்படி சொல்லிக்கொண்டு போகும் ஒரு துதிப்பாடல்!


இலக்கணம் இதில் பார்க்க வேண்டாம்!
விளக்கமும் தேவையிருக்காது!
அப்படியே ரசியுங்கள்!
அன்னையைத் துதியுங்கள்!]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

Sunday, June 17, 2007

ஒரு முக்கிய அறிவிப்பு!!

ஒரு முக்கிய அறிவிப்பு!!

அனானி அன்பர் ஒருவர் என்னையும் பொருட்டாக மதித்து, என் பெயரில்[VSK] ஒரு தனிப் பூ ஒன்று தொடங்கி என்னைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்!

ஆத்திகம், கசடற[aaththigam, kasadara] என்ற இரு பூக்கள் வழியாக மட்டுமே நான் பின்னூட்டம் இடுகிறேன்!

பதிவுலக நண்பர்கள் என் பெயரில் [VSK] வரும் பின்னூட்டங்களை தயவு செய்து இவ்விரு பூ விலாசத்திலிருந்து வருகிறதா எனச் சோதனை செய்து, பின்னர் வெளியிடுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் வசதிக்காக, சிலகாலம் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை எனவும் முடிவு செய்திருக்கிறேன்.

நன்றி.

Friday, June 8, 2007

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்!

குருவை மிஞ்சும் சி'ஷ்'யன் - யாரு தெரியுமா? = ஒரு ஈழத்துப் பெருங்கவிஞர்!

குரு: பாபநாசம் சிவன் அவர்கள்.
சிஷ்யர்: யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்


வெள்ளிக் கிழமை அதுவுமா, அம்மன் பாட்டு கேட்கலாம் வாங்க!
சி'ஷ்'யர் எப்படிக் குருவை மிஞ்சினார்?

சென்னையில், திருமயிலை (மயிலாப்பூர்-ன்னா எல்லாருக்கும் புரிஞ்சிக்கற மாதிரி இருக்கும்)
மயிலை மன்னாரு தெரியும், கபாலி தெரியும், முண்டகக்கண்ணி தெரியும்....
- இன்னும் மயிலாப்பூரைப் பத்தி நிறையவே சொல்லலாம்!
- மயில் ஆர்ப்பு ஊர் => மயிலாப்பூர்


"கபாலீ'ஸ்'வரர்-கற்பகாம்பிகை" மேல் பற்பல பாடல்கள் எழுதியுள்ளார் பாபநாசம் சிவன்.
மயிலை விழாக்களைப் பற்றியெல்லாம் கூடப் பாடியுள்ளார்.

அவர் கூடவே மயிலை வீதிகளில் வலம் வந்த சீடர் தான் வீரமணி ஐயர். அவரையும் கற்பகாம்பாள் கவர்ந்ததில் வியப்பேதுமில்லையே!


 மயிலை = அன்றும்..இன்றும்...

ஆனால் பாருங்கள்!
கற்பக அம்பிகை மீது, சிவன் பாடியதை விட, சீடர் பாடியதே செம ஹிட்டானது!
குருவை விஞ்சும் சீடராக, வீரமணி ஐயரின் இந்தப் பாடல், அன்னைக்கு நிரந்தர அணிகலனாய் அமைந்து விட்டது = "கற்பக வல்லி நின்"

பாபநாசம் சிவன் = தமிழிசைத் தொண்டர்.
ராகத்துடன் கூடிய பல தமிழ்ப் பாடல்கள் பிரபலமாகத் தந்த மேதை.
அவரிடம் பயின்றவர் ப்ரம்மஸ்ரீ யாழ்ப்பாணம் வீரமணி ஐயா (அன்னார் அண்மையில் காலமானார்....)

இசை, நடனம் இரண்டிலும் இவர் வித்தகர்!
72 மேளகர்த்தா ராகங்கள் அனைத்திலும் பாடல்கள் புனைந்துள்ளார்; அத்தனையும் தமிழ்ப் பாடல்கள்!
பிரம்மஸ்ரீ யாழ்ப்பாணம் வீரமணி ஐயரைப் பற்றி, மலைநாடான் ஐயா ஒரு சிறப்பு ஒலிப்பதிவு முன்பு இட்டிருந்தார்!
அதில் வீரமணி ஐயர், இந்தப் பாடல் புனைவைப் பற்றித் தானே பேசும் ஒரு வீடியோவும் உள்ளது.
அதை அவசியம் காணுங்கள். சுட்டி இங்கே!

TMS குரலும் இந்தப் பாட்டிற்கு, அப்படியொரு சிறப்பு சேர்த்தது;

ஒவ்வொரு பத்தியிலும் ஒரு ராகத்தின் பெயர் வரும்! 
அந்தப் பத்தியை, அந்த ராகத்திலேயே பாடி,
உள்ளத்தைக் கொள்ளை கொண்டது வீரமணி ஐயரா? TMSஆ? :-)

சொல்லப் போனா, நாம எல்லாருமே கூட இந்தப் பாட்டை மிக எளிதாகப் பாடலாம்!
கர்நாடக இசைப் பயிற்சி எல்லாம் ஸ்பெஷலாக ஒண்ணும் தேவையில்லை இதைப் பாட!
அது தான் இந்தப் பாட்டின் சிறப்பு! பாட்டின் எளிமை!

இதை இசைப் பயிற்சியின் போது, மாணவர்களுக்கு துவக்க நிலைப் பாடமாகக் கூட வைக்கலாம்! அப்படி ஒரு எளிமையான சுவை! எங்கே...Hum பண்ணுங்க, இப்போ!


கற்பகத் தாய்!

ஏழிசை மன்னர், TMS பாடுவது = இங்கே!
குன்னக்குடி, அதே பாட்டை = வயலினில் தருவது இங்கே

ஆனா, அதே பாடலை, நாதசுரத்தில் வாசிக்கறாங்க! (Not to Miss!)
------------

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!
(கற்பக வல்லி)

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

(கற்பக வல்லி)

நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!

(கற்பக வல்லி)

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்
நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!

(கற்பக வல்லி)

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!

(கற்பக வல்லி)

அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் - அருள்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!

(கற்பக வல்லி)


மயிலாய் மாறி, "அவரே" எனத் தவம் கிடக்கும் "கற்பகம்"

வரிகள்: யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்
குரல்: TM சௌந்தரராஜன்
ராகம்: ராகமலிகை
தாளம்: ஆதி