Tuesday, June 19, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 2

"மாரியம்மன் தாலாட்டு" -- 2

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"


"விநாயகர் துதி"

'காப்பு'

'கொச்சகக் கலிப்பா'

"பூதலத்தில் யாவர்க்கும் பேராதரவா யென்னாளும்

மாதரசி யென்று வாழ்த்துகின்ற மாரியம்மன்

சீதரனார் தங்கை சிறப்பான தாலாட்டைக்

காதலுட னோதக் கணபதியுங் காப்பாமே"

'வெண் செந்துரை'

"முந்தி முந்தி விநாயகரே முக்கண்ணனார் தன்மகனே

கந்தருக்கு முன்பிறந்த கற்பகமே முன்னடவாய்

வேலவர்க்கு முன்பிறந்த விநாயகரே முன்னடவாய்

வேம்படியிற் பிள்ளையாரே விக்கினரே முன்னடவாய்

பேழை வயிற்றோனே பெருச்சாளி வாகனரே

காரண மால்மருகா கற்பகமே மெய்ப்பொருளே

சீரான நல்மருகா செல்வக்கணபதியே

ஒற்றைக் கொம்போனே உமையாள் திருமகனே

கற்றைச் சடையணிந்த கங்காதரன் மகனே

வித்தைக்கு விநாயகனே வெண்ணையுண்டோன் மருகா

மத்தக்கரி முகவா மாயோன் மருகோனே

ஐந்துகரத்தோனே யானை முகத்தோனே

தந்தமத வாரணனே தற்பரனே முன்னடவாய்

நெஞ்சிற் குடியிருந்து நீயெனக்கு முன்னடவாய்

பஞ்சஞ்சு மெல்லடியாள் பார்வதியாள் புத்திரனே

வேழமுகத்தோனே விநாயகரே முன்னடவாய்

தாழ்விலாச் சங்கரனார் சற்புத்திரா வாருமையா

முன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னாலே

கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே

முத்தாலே தண்டை கொஞ்ச முன்னடவாய் பிள்ளையாரே

செல்வக் கணபதியுன் சீர்ப்பாதம் நான் மறவேன்."



"சரஸ்வதி துதி"


"தாயே சரஸ்வதியே சங்கரியே முன்னடவாய்

என்தாயே கலைவாணி யோகவல்லி நாயகியே

வாணி சரஸ்வதியே வாக்கில் குடியிருந்து

என்நாவிற் குடியிருந்து நல்லோசை தாருமம்மா

கமலாசனத்தாளே காரடி பெற்றவளே

என்குரலிற் குடியிருந்து கொஞ்சடி பெற்றவளே

என்நாவு தவறாமல் நல்லோசை தாருமம்மா

மாரியம்மன் தன்கதையை மனமகிழ்ந்து நான் பாட

சரியாக என்நாவில் தங்கிக் குடியிரும்மா

கன்னனூர் மாரிமுத்தே கைதொழுது நான்பாட

பின்னமில்லாமல் பிறகிருந்து காருமம்மா."

4 comments:

  1. ஆஹா! அற்புதாய்த் தொடங்கி விட்டீர்கள்!

    ஆனைமுகத்தோனும் சரஸ்வதியும்
    துணையிருக்க
    அன்புடனே அனைவருக்கும்
    மாரியம்மன் தாலாட்டை
    மனமுவந்து பரிமாற
    நித்தமும்தான் பக்தியுடன்
    மனமுருகிக் கேட்போமே!

    ReplyDelete
  2. அருமையான எளிமையான வரிகள்...
    அப்படியே நேரில் நின்று பேசுவது போல் இருக்கு SK.

    அம்மனின் தாலாட்டை
    அனுதினமும் தரப்போகும்
    ஆத்திகப் பதிவரை நீ
    ஆதரித்துக் காரும் அம்மா!

    ReplyDelete
  3. விநாயகர், வேலவன்
    சிவனார், சீதரனார்
    (ஸ்ரீதரனார்-லட்சுமி நாராயணன்)
    சரஸ்வதியாள், பார்வதி
    என்று எல்லாரும் வந்து விட்டார்கள், SK!

    //கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே//

    கண்ணடக்கம் என்பது இறைவையின் சிலையில், கண்ணுக்குச் சார்த்தப்படும் கண்மலர் தானே?

    ReplyDelete
  4. எஸ்.கே. முதல் பாகமே அருமையாக வந்திருக்கிறது. முன்னடவாய் முன்னடவாய் என்று நாட்டுப்புறப் பாடல்களில் வரும் என்று படித்திருக்கிறேன். இந்தப் பாடலில் தான் பார்க்கிறேன். ஒவ்வொரு வரியிலும் அருமையான கருத்துகள்.

    ReplyDelete