மதுரை மீனாட்சியம்மன் ஆலயக் குடமுழுக்கு - நன்னீராட்டு விழாப் பதிவுகளின் தொடர்ச்சியாக இன்று...பிரபல பாடல்...நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே!
சமயபுரத்து அம்மன் சன்னிதியில், வெள்ளைக்காரத் துரை (மேஜர் சுந்தரராஜன்) அட்டகாசம் செய்யும் போது, அம்மை நோய் தாக்கி அலறுவார்!
அப்போது, மனம் திருந்தி, வேண்டுதல் மேற்கொள்ள, துன்பம் தீருவார்! அந்த நேரத்தில் உதிக்கும் பாட்டு இது! இசையரசி சுசீலாம்மாவின் இன்குரலில்...
அத்தனை அம்மன்கள் இருந்தாலும், சமயபுரத்தாளே, "நான்மாடக் கூடலிலே நான் மீனாட்சி" என்று தான் துவங்குகிறாள்! அதை இன்று அன்பர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறோம்! குடமுழுக்கு நாயகி மீனாட்சி திருவடிகளே சரணம்!
நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே மீனாட்சி என்ற பெயர் எனக்கு கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில் விசாலாட்சி என்ற பெயர் வழக்கு கோனாட்சி பல்லவர் தம் குளிர்சோலை காஞ்சி தன்னில் காமாட்சி என்ற பெயர் எனக்கு கொடும் கோலாட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும் - நிற்கும் ஊர் மாறி, பேர் மாறி, கரு மாறி, உரு மாறி, ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்! ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்!
காஞ்சி காமாட்சி - மதுரை மீனாட்சி - காசி விசாலாட்சி
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் குடமுழுக்குத் திருநாளை முன்னிட்டு இந்த 'அம்மன் பாட்டு' பதிவில் இன்று முதல் குடமுழுக்கு நன்னாளான ஏப்ரல் எட்டாம் நாள் வரை 'பங்குனியில் ஒரு நவராத்திரி' கொண்டாடப்படுகின்றது.
முதல் நாளாகிய இன்று அன்னையின் புகழினைப் பாடும் மீனாட்சி பஞ்சரத்தினம் என்னும் துதிப்பாடலைக் காண்போம்.
வலை ஒத்த வினை கலை ஒத்த மனம் மருளப் பறை ஆர் ஒலி ஒத்த விதால் நிலையற்று எளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய் அலைவற்று அசைவற்று அநுபூதி பெறும் அடியார் முடி வாழ் வைடூரியமே மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
எப்போதோ ஒரு முறை, மிக மிக அரிதாக, மனம் குவிந்து இறையருளை எண்ணி மனம் நிறைந்து மகிழ்வும் அமைதியும் கூடி இறை தாள் வணங்கி எச்செயலும் ஈசன் செயல் எனும் மன நிலை ஓரிரு நாழிகையாவது இறையருளால் நிகழ்கிறது. பெரும்பாலான நேரங்களில் அப்படி ஒரு நிலை இருக்கிறது; அதனை அனுபவித்திருக்கிறோம்; அந்நிலையிலேயே நிலையாக நிற்பது தான் பெருநிலை என்பதே மறந்து போகின்றது. அப்படி அரிதாக கிடைக்கும் மனநிலை மாறும் படியும் அந்நிலையே மறக்கும் படியும் செய்வது என்ன என்று பார்த்தால் உலக ஆரவாரங்களால் தள்ளப்பட்டு மருண்டு நாம் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான சிறு பயனோ பயனே இல்லாததோ ஆன பல செயல்களில் ஈடுபட்டு அதில் சிக்கிக் கிடக்கிறோம் என்று தெரிகிறது. எச்செயலும் ஈசன் செயல் என்று இறையின் திருவுள உகப்பிற்கு ஏற்ற செயல்களில் அமைதியாகவும் மகிழ்வுடனும் ஈடுபடும் போது வைத்த நிதி, குடும்பம், குலம், கல்வி என்று பலவிதமான ஆரவாரங்கள் நம்மைச் சூழ்ந்து நம்மைப் பிடித்துச் செயல்களில் தள்ளுகின்றன; அவை சுயநலமான செயல்களாகையால் ஈசன் செயல் எனும்படியாக இல்லை; அதனால் அமைதியும் மகிழ்ச்சியும் தொலைந்து பதட்டமும் ஆர்ப்பாட்டமுமாகவே அச்செயல்கள் செய்யப்படுகின்றன. 'யோக க்ஷேமம் வஹாம்யஹம் - உனக்கு வேண்டியதைத் தரும் பொறுப்பையும் உன்னிடம் ஏற்கனவே இருப்பதைக் காக்கும் பொறுப்பையும் நானே ஏற்கிறேன்' என்ற இறை உறுதி மொழி அறிந்திருந்தும் செல்வம், குடும்பம் போன்றவற்றை நாமே நம் முயற்சியால் காப்பாற்ற வேண்டும்; இயலும் என்ற இறையருளின் அடிப்படையாக அமையாத செயல் ஊக்கங்களால் கட்டப்படுகிறோம்.
செயல்கள் எல்லாம் வலையைப் போல் நம்மைச் சுற்றிப் பிணைத்துக் கட்டுப்படுத்துகின்றன. வலை ஒத்த வினை.
மனமோ அவ்வலையில் அகப்படும் மானைப் போல் இருக்கின்றது. கலை ஒத்த மனம்.
அந்த மனம் எனும் மான் மருண்டு செயல்கள் என்னும் வலையில் விழும் படி ஆரவாரமான ஒலியை எழுப்பும் பறையைப் போல் இந்த உலகம். மருளப் பறை ஆர் ஒலி ஒத்த விதால்.
உன்னருளையே முன்னிட்டு எல்லாச் செயல்களையும் உன் திருவுள உகப்பிற்காகவும் திருமுக உல்லாசத்திற்காகவும் செய்யும் நன்னிலையை விட்டு நீங்கி அடியேன் வீணாகிப் போகலாமா? நிலையற்று அடியேன் முடியத் தகுமோ?
நான் என் தனி முயற்சியால் என் குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன்; செல்வம் சேர்க்கிறேன்; குடும்பப்பெருமையைக் காக்கிறேன் என்று தன்முனைப்புடன் அமைதியின்றி ஆரவாரத்துடன் செயல்களை ஆற்றாமல் உன்னருளையே முன்னிட்டு அச்செயல்களை எல்லாம் செய்யும் நிலை தருவாய். என் செயலால் இங்கு ஆவதொன்றில்லை; நின் செயலே என்று அறிந்தேன் - என்று சொல்லும் நிலை தருவாய். மனைவி மக்கள் செல்வம் என்ற இவற்றையெல்லாம் நான் காக்கிறேன் என்ற எண்ணமே என்னைக் கட்டிப் போடும் சங்கிலியாக இருக்கிறது. இந்தச் சங்கிலி தூள் தூளாகி மனைவி மக்கள் செல்வம் எல்லாவற்றையும் நீயே என்னை ஒரு கருவியாக இயக்கிக் காத்துக் கொள்கிறாய் என்ற எண்ணம் வரும் படி செய்வாய். 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்' என்றாற்போல இச்சங்கிலியாகிய நிகளம் தூள்தூளாகப் போகும் வரம் தருவாய். நிகளம் துகளாக வரம் தருவாய்.
நான் செய்கிறேன், இது எனது, இதனைக் காக்கவேண்டும் என்றெல்லாம் இங்குமங்கும் அலையும் நிலையை நீங்கி அசைவற்று இறையருளில் மூழ்கித் திளைக்கும் ஆனந்த அனுபவம் பெறும் அடியவர்களின் திருமுடி மேல் ஒளிரும் வைடூரியமே. அலைவற்று அசைவற்று அநுபூதி பெறும் அடியார் முடி வாழ் வைடூரியமே.
பொதிகை மலையைத் தன்னுடைய கொடியாகக் கொண்ட மலையத்துவச பாண்டியனின் திருமகளே மீனாட்சியே வருவாய். மலையத்துவசன் மகளே வருவாய்.
அன்னையின் திருவருளுக்கு இசைவாக 'லலிதா நவரத்தினமாலை' என்னும் இத்துதி நூலை நாள்தோறும் படிப்பவர்கள் அற்புத சக்தி எல்லாம் அடைவார்கள். சிவரத்தினமாகத் திகழ்வார்கள்.