Monday, August 16, 2010

சிந்தையில் நின்றிடுவாய் சிவகாமியே!



சிந்தையில் நின்றிடுவாய் சிவகாமியே
முந்தைவினை ஓய அபிராமியே

(சிந்தையில்)

பரிபுரை பனிமொழி திரிபுரை தீங்கனி
எரிபுரை மேனியற்கு ஒருபுறம் அருள்சகி

(சிந்தையில்)

புவனங்கள் யாவையும் பூத்திட்ட பயிரவி
சலனங்கள் தீர்த்தெம்மை காத்திடும் சாம்பவி
ஜகமெல்லாம் நகக்கண்ணில் அடக்கிய மாலினி
உளமெல்லாம் புளகிக்க பணிந்திட்டோம் வாழிநீ

(சிந்தையில்)


--கவிநயா

Wednesday, August 11, 2010

மலயத்துவசன் மகள்

அனைவருக்கும் ஆடிப் பூரத் திருநாள் வாழ்த்துகள்!



பார்க்கும் திசையி லெல்லாம் பைங்கிளி உன்முகமே
கேட்கும் ஒலியிலெல்லாம் கோகிலம் உன்பெயரே
காக்கும் கரங்களெல்லாம் மரகத வளைக்கரமே
மீட்கும் கடலினின்றும் மீனாள்உன் கடைவிழியே!

காஞ்சன மாலைக்கென கனியமுதாய் உதித்தாய்
மாமதுரை மன்னன் மடியினிலே சிரித்தாய்
சேயெனவே வந்து சுவர்க்கசுகம் தந்தாய்
வையகம் போற்றிடவே ஆயகலை களில்தேர்ந்தாய்!

வீரத்தின் விளைநிலமே வேதங்களின் மறைபொருளே
நான்மாடக் கூடல்தன்னில் நலம்பல அருள்பவளே
திக்விஜயம் செய்து திசையெல்லாம் வென்றவளே
சுந்தரனைக் கண்டபின்னே சொக்கியங்கே நின்றவளே!

மதுரைநகர் ஆளவந்த மீனாக்ஷிதேவி போற்றி!
மாந்தர்தமைக் காக்கவந்த மங்கையர்க்கரசி போற்றி!
பச்சைக்கிளி ஏந்துகின்ற பசுங்கிளியின் தாள்கள் போற்றி!
பொற்றாமரைப் பூவேயுன்றன் பொற்பதங்கள் போற்றிபோற்றி!!


--கவிநயா

Thursday, August 5, 2010

அம்மன் பாட்டு 200! வருக! அவள் அருள் பெறுக!



அம்மா.


அன்பின் திருவுருவம். கருணையின் முழுவடிவம்.
அன்போடு எப்போது அழைத்தாலும் அவள் நிச்சயம் வருவாள்.
அதுவும் ஆடி மாதம் அழைத்தால்! உடனடியாக ஓடோடியும் வந்து விடுவாள்! இந்த சிறப்புப் பதிவிற்காக அவளை ஆடி வெள்ளியில் அழைப்பது இன்னும் சிறப்பல்லவா!

அவளுக்கு எல்லாமே பிடிக்கும்…
நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கல், முந்திரி மின்னும் வெண் பொங்கல், காரசாரமான புளியோதரை, பால்வெள்ளை தயிரமுது, விதவிதமான பாயசங்கள், சுவைமிகுந்த சுண்டல்கள்,… இவை மட்டுமின்றி, ஏழைக்கேற்ற கூழும், அச்சு வெல்லப் பானகமும் கூட அவளுக்கு பிடிக்கும்.

அவளுக்கு என்ன கொடுக்கிறோம் என்பது முக்கியம் இல்லை; எவ்வளவு அன்போடு கொடுக்கிறோம் என்பதே முக்கியம்.

இதோ, இந்த அம்மன் பாடல்கள் வலைப்பூவில் இன்றோடு 200 பூக்கள் பூத்து விட்டன. என்றும் வாடாத பக்திப் பாடல் பூக்கள்.
ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வடிவம்; ஒவ்வொரு நிறம்; ஒவ்வொரு மணம். அவள் ஒருவளே வித விதமான தோற்றங்களில் அருள் பாலிப்பதைப் போல.

ஆனால் எல்லாப் பூக்களையுமே அன்பென்ற நாரால்தான் தொடுத்திருக்கிறது. இப்போதும், எத்தனை பூக்கள் தொடுத்தோம் என்பது முக்கியமில்லை; எவ்வளவு அன்போடு தொடுத்தோம் என்பதே முக்கியம், என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியதாகிறது.



இந்த 200-வது சிறப்புப் பதிவிற்கென, அவளுக்காக ஒரே மாலையை அம்மன் பாடல் குழுவினர் அனைவரும் சேர்ந்து தொடுத்திருக்கிறோம்.

அதாவது, இங்கே தருகின்ற பாடலை இரண்டிரண்டு பத்திகளாக, VSK என்று அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் சங்கர் குமார் அண்ணாவும், மாதவிப் பந்தல் கேயாரெஸும், கூடல் குமரனும், மற்றும் கவிநயாவாகிய நானும், எழுதி இருக்கிறோம். யார் யார் எந்த எந்த பத்திகள் எழுதினோம் என்று கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம் :)

நம்முடைய ஆஸ்தானப் பாடகி மீனா சங்கரன் அவர்கள் மனமுவந்து பாடித் தந்திருக்கிறார்.

இந்த நல்ல நாளில், அன்னையின் மீதான அன்பும் பக்தியும் அவள் பிள்ளைகளுக்கு பல்கிப் பெருகவும், அவள் விருப்பப்படி நடக்கும் செல்லக் குழந்தைகளாக அவர்கள் இருக்கவும், அவளை மனமுருகப் பிரார்த்திக்கிறோம்.





நெஞ்சில் நிறைந்தவள் நினைவில் உறைபவள் எங்கள் இறையவள் சக்தியளே!
பஞ்சினும் மெல்லிய பாதங்கள் உடையவள் அஞ்சிடும் நெஞ்சிற்கு துணையவளே!
சிந்தையில் நின்றவள் விந்தை மிகுந்தவள் எந்தையுடன் மகிழ்ந் தருள்பவளே!
மந்தையென வரும் துன்பங்கள் தீர்ப்பவள் சொந்தமென எமைக் காப்பவளே!.....(1)

கொன்றை யணிந்தவன் மேனி பகிர்ந்தவள் பங்கய கண்ணனின் தங்கையளே!
குன்றில் அமர்ந்தவன் கோலஎழில் குகன் வென்றிட வேல் தன்னைத் தந்தவளே!
மன்றினில் ஆடிடும் செஞ்சடை யோனுடன் கொஞ்சி மகிழ்ந்திடும் கோமகளே!
கன்றதன் குரலினில் குழைந்திடும் ஆவென ஓடி உடன்வந்து காப்பவளே!.....(2)

பம்பை யொலித்திட சங்கம் முழங்கிட தண்டை குலுங்கிட வருபவளே!
உம்பர்கள் நாடிட உலகமே தேடிட எங்குமிலா தோடி மறைபவளே!
வம்பர்கள் வாடிட அன்பர்கள் ஆடிட ஆனந்த தரிசனம் தருபவளே!
அம்பரம் நடுவினில் பம்பரமாய் நின்று எங்களை யென்றும் காப்பவளே!.....(3)

சங்கரன் பாதியில் தங்கமாய்க் கலந்து கங்கையைக் கூடவே அணைத்தவளே!
சங்கரன் சுதனை மங்கலமாய்த் தந்து அடியவர் வினைகளைக் களைந்தவளே!
சங்கரன் புதல்வனாம் சண்முக நாதனைச் சரவணப் பொய்கையில் சேர்த்தவளே!
சங்கரன் குமரன் சந்ததம் கும்பிடும் அம்பிகையே எமைக் காப்பவளே!.....(4)

மங்கலம் பொங்கிடும் செங்கலசம் என எங்குமே இன்பமே அருள்பவளே
மங்கலக் கமலச் செல்வியாய் மாலவன் மார்பினில் பொலிந்திடும் திருமகளே
செங்கையில் நூலினை ஏந்தியே வேதங்கள் சீர்பெற யாழினில் இசைப்பவளே
மங்கையே நான்முகன் நாவினில் நிலைத்திடும் நாமகளே எமைக் காப்பவளே!.....(5)

இடமென வலமென இருபுறம் இறைவனை என்றுமே இருத்திடும் இளையவளே
இடமென அவனது மேனியில் அமர்ந்து இமையவர் போற்றிட இசைந்தவளே
படர்பொருள் யாவுமாய் பரிதியில் தோன்றி பார்மிசை ஒளியென விளைந்தவளே
உடல்மிசை உயிரென கரங்தெங்கும் பரந்துமே உலகையும் எம்மையும் காப்பவளே!....(6)

அயிகிரி நந்தினி, அகிலம் மகிழ்ந்து இனி, அடியவர்க்கு இனிமை சேர்ப்பவளே!
கிரிவர விந்திய, மலை தனில் வாசினி, வெற்றியின் முரசை ஆர்ப்பவளே!
பகவதி, போது மணிச் சடை நாயகி, மகிஷ மனம் தனில் வேர்ப்பவளே!
வெற்றி உனக்கென, வெற்றி உனக்கென, வேல்தரும் அன்னையே! காப்பவளே!....(7)

மாதொரு பாகனின், பாதி மதி நதி, பாயும் முகம் தனைக் கொண்டவளே!
தீதொரு பாகனாம், எந்தன் பிழை களை, வீயும் அகம் தனைக் கொண்டவளே!
கோகில வாணி, குழல் மொழி பாணி, நூபுரத்தில் மறை நூற்பவளே!
தந்திடு திருவடி, தந்திடு திருவடி, தாயவளே என்னைக் காப்பவளே!.....(8)

காப்பவளே! கதி சேர்ப்பவளே! விதி மாய்ப்பவளே! பதி வாய்ப்பவளே!
தீர்ப்பவளே! துயர் தீர்ப்பவளே! அகம் ஆர்ப்பவளே! முகம் பார்ப்பவளே!
நோற்பவளே! நுதல் வேர்ப்பவளே! சீர் சேர்ப்பவளே! சேய் மீட்பவளே!
ஏற்பவளே! எனை ஏற்பவளே! என் தாயவளே! என் தாய் இவளே!.....(9)

இத்துடன் சங்கர, குமரனும், மீனாள்,
இராகவ சேகரன் இயம்பித் துதித்திடு
இமைய வரம்பியின் இருநூறாம் துதி
அம்மன் பாட்டில் அமைந்தேலோ ரெம்பாவாய்!

***
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறைந்திருக்கட்டும்!

Thursday, July 22, 2010

ஆடி வெள்ளி 1: இது பி.சுசீலா-வா? எல்.ஆர்.ஈஸ்வரியா??

அம்மன் பாட்டு-ன்னாலே, அதுவும் ஆத்தா, மகமாயீ-ன்னு ஹை பிட்ச் பாட்டெல்லாம் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களுக்கே சொந்தம்!
மென்மையா, மெலடி பாடும் இசையரசி பி.சுசீலா போன்றவர்கள், இது போல மாரியம்மன் பாட்டு எல்லாம் பாடினா எடுபடுமா?
கீழே பாடுறது ஈஸ்வரியா? சுசீலாம்மா-வான்னு, கேட்டுட்டு சொல்லுங்க பார்ப்போம்!


இன்று முதல் ஆடி வெள்ளி! ஆடி முதல் வெள்ளி!
அம்மன் பாட்டு அடுத்த இடுகையில் 200-ஐத் தொட்டுவிடும்!
கவிநயா அக்கா - எங்கிருந்தாலும் மேடைக்கு வாங்க!

ஆன்மீக குழு வலைப்பூக்களில், 200-ஐத் தொட்ட முதல் வலைப்பூ, அவள் பாட்டு தான்! அம்மன் பாட்டு தான்!
ஆடிக் கொண்டாட்டங்களில் ஆடிக்கிட்டே கலந்துக்குங்க!

இதோ, பி.சுசீலா-வா? எல்.ஆர்.ஈஸ்வரியா??



ஆயி மகமாயி...ஆயிரம் கண்ணுடையாள்...
நீலி திரிசூலி...நீங்காத பொட்டுடையாள்...
சமய புரத்தாளே...சாம்பிராணி வாசகியே...
சமயபுரத்தை விட்டுச் சடுதியில வாருமம்மா..


மாயி மகமாயி மணி மந்திர சேகரியே! - எங்க
ஆயி உமையானவளே ஆத்தா என் மாரிமுத்தே!
(மாயி)

சிலம்பு பிறந்ததம்மா சிவகங்கைச் சாலையிலே!
பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சன்னிதியில்!
உடுக்கை பிறந்ததம்மா உருத்ராட்ச பூமியிலே!
பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்!
(மாயி)

பரிகாசம் செய்தவரை, பதைபதைக்க வெட்டிடுவே!
பரிகாரம் கேட்டு விட்டா, பக்கத்துணை நீ இருப்பே!
மேனாட்டுப் பிள்ளையிடம், நீ போட்ட முத்திரையை
நீபார்த்து மாத்தி வச்சா, நாள் பார்த்து பூசை செய்வான்!

(மாயி)

குழந்தை வருந்துவது கோயிலுக்குக் கேட்கலையோ?
மைந்தன் வருந்துவது மாளிகைக்குக் கேட்கலையோ?
ஏழைக் குழந்தையம்மா எடுத்தார்க்குப் பாலனம்மா!
உன் தாளைப் பணிந்து விட்டால் தயவுடனே காருமம்மா!

கத்தி போல் வேப்பிலையாம்
காளியம்மன் மருத்துவராம்!
ஈட்டி போல் வேப்பிலையாம்
ஈஸ்வரியின் அருமருந்தாம்!
வேப்பிலையின் உள்ளிருக்கும்
விந்தைதனை யார் அறிவார்!


ஆயா மனமிரங்கு! - என்
ஆத்தா மனமிரங்கு!
அன்னையே நீ இரங்கு! - என்
அம்மையே நீ இறங்கு!!

குரல்: பி.சுசீலா
படம்: ஆதி பராசக்தி
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
(மாரியம்மன் தாலாட்டு என்ற நாட்டுப்புறப் பெரும்பாடலை ஒட்டி திரைப்படத்துக்காக எழுதியது)

சமயபுரம் மாரியம்மன்

பாட்டைக் கொஞ்சம் கவனிச்சா, இன்னும் சுவை தெரியும்!
வடமொழிச் சொற்களுக்கு எல்லாம் கூட நாட்டுப்புறத்தில் அழகாத் தமிழாக்கி வச்சிருக்காங்க நம்ம கிராமத்து மக்கள்! நகரத்து மக்கள் தான் நந்தமிழை ஒரு வழி பண்ணி இருக்காக போல! :)
நீங்காத பொட்டுடையாள் = நித்ய சுமங்கலி!
காப்பாத்து என்பதைக் காரும் அம்மா என்று நாட்டுத் திரிபு!

அன்னையே நீ இ"ர"ங்கு! அம்மையே நீ இ"ற"ங்கு என்று எழுதுகிறார் கண்ணதாசன்!
அன்னை மனம் இ"ர"ங்க வேணுமாம்! = அதனால் இடையின "ர"!
அம்மை (நோய்) இ"ற"ங்க வேணுமாம்! ஆணை! = அதனால் வல்லின "ற"!

அன்னை இரங்கு! அம்மை இறங்கு!
அன்னை-அம்மை/இரங்கு-இறங்கு-ன்னு சினிமாத் தமிழிலும் விளையாட வல்ல ஒரு அரசர், அது நம் கவி அரசரே!

படத்தில் வெள்ளைக்கார துரை என்ன தப்பு செஞ்சாரு? யாரு அவரு? இது சமயபுரத்து தல வரலாறா என்பதைச் சினிமா பார்த்த மக்கள், கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க! :)

ஆடிப் பதிவுகள் தொடரும்...அடுத்து 200!

Friday, July 16, 2010

அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -5 (நிறைவு)

உபசாரம் - பாகம் 5
(முன்பு மெளலி அண்ணாவின் செளந்தர்யலஹரி வலைப்பூவின் நிறைவில் வந்தவை!)
முதல் பகுதி இங்கே!
இரண்டாம் பகுதி இங்கே!
மூன்றாம் பகுதி இங்கே!
நான்காம் பகுதி இங்கே!


பாடல்களை திரு.. கே.ஆர்.எஸ் அவர்கள் பாடியிருக்கிறார், கேட்டுக் கொண்டே படிக்க, இதோ லிங்க்.

Annaikku_64_Upacha...


41. சாமரம்

சரதிந்து மரீசி கெளர வர்ணைர்
மணிமுத்து விலஸத் ஸுவர்ண தண்டை: !
ஜகதம்ப விசித்ர சாமரை ஸ்த்வம்
அஹமா நந்த பரேண விஜயாமி !!

சந்திரன் போன்ற வெண்மை நிறங்கொண்டதும், மணிமுத்துக்கள் விளங்கும் பொன் தண்டமுள்ளதுமாகிய அற்புத சாமரங்களை உமக்கு ஆனந்தத்தோடு அளிக்கிறேன்.

சந்திரனின் கதிரெடுத்து இந்திரவில் லாய்வளைத்து
மயிற்பீலி தனையெடுத்து கருத்துடனே கோர்த்துவிட்டு
தங்கத்தில் பிடியமைத்து செய்துவைத்த சாமரத்தால்
தென்காற்றாய் வீசிவிட தேவதையே மகிழ்ந்திடுவாய்! (41)

42. கண்ணாடி

மார்த்தாண்ட மண்டலநிபோ ஜகதம்ப யோயம்
பக்த்யா மயாமணிமயோ முகிரோர் பிதஸ்தே !
பூர்ணேந்து பிம்ப ருசிரம் வதனம் ஸ்வகீபமஸ்மின்

விலோக்ய விலோல விலோச நேஸ்வம் !!

சஞ்சலமான கண்கள் உடையவளே! நான், உனக்கு சூரியனைப் போன்ற ஒளி மிகுந்த கண்ணாடியைத் தருகிறேன். நீ, உன்னுடைய சந்திரன் போன்ற முகத்தை அதில் பார்ப்பாயாக.

பூப்போல திருமுகத்தில் பொன்போன்ற புன்னகையாம்
தேன்போல மொழியழகாம் தென்றல்போல் நடையழகாம்
அகிலத்தின் அழகெல்லாம் உன்னிடத்தில் ஒளிர்ந்திருக்க
கதிரவன்போல் கண்ணாடியில் கமலமுகம் பார்த்தருள்வாய்! (42)

43. நீராஜனம்

இந்த்ராதயோ நதிநதைர் மகுடப்ரதீயை
நீராஜயந்தி ஸததம் தவபாத பீடம் !
தஸ்மாதஹம்தவ ஸமஸ்த சரீர மேதந்
நீராஜயாமி ஜகதம்ப ஸஹஸ்ர தீபை: !!

இந்திரன் முதலான தேவர்கள் வணங்கும் போது, தங்களுடைய கிரீடமென்னும் தீபங்களால் உமக்கு நீராஜனம் செய்கிறார்கள். நான் உங்களுக்கு ஆயிரம் தீபங்களால் நீராஜனம் செய்கிறேனம்மா.

பட்டாடை சிவந்திருக்க பட்டுப்போல் தழுவிநிற்க
சிற்றாடைப் பெண்ணைபோல் சிரித்துநீயும் மகிழ்ந்திருக்க
எடுப்பான உன்தோற்றம் எழிலாகத் தெரிந்திடவே
அடுக்கடுக்காய் காட்டுகின்றோம் ஆயிரமாம் தீபங்கள்! (43)

44. குதிரைகள்

ப்ரியகதி ரதிதுங்கோ ரத்ன பல்யாண யுக்த
கனகமய விபூஷ ஸ்திக்த கம்பீர கோஷ: !
பகவதி கலிதோயம் வாஹனார்த்தம் மயாதே
துரக சத ஸமேத: வாயு வேகஸ் துரங்க: !!

ரத்ன சேணமும், பொன் ஆபரணங்களும் பூட்டி, கம்பீரமாய் கனைக்கின்ற, வாயுவேகமாகச் செல்லக்கூடிய நூற்றுக்கணக்கான குதிரைகளை உமக்கு வாகனமாக கல்பித்து அளிக்கிறேன்.

45. யானை

மதுகர வ்ருத கும்பந்யஸ்த ஸிந்தூர ரேணு:
கனக கலித கண்டா கிங்கிணீசோபி கண்ட: !
ச்ரவண யுகள சஞ்சக் சாமரோ மேகதுல்ய:
ஜனனி தவமுதேஸ்யான் மத்தமாதங்க ஏஷ !!

வண்டுகள் சூழ்ந்த மத்தகத்தில், சிந்தூரத் துளிகள் உள்ள, மேகம் போன்ற மதயானையை உமது பிரியத்துக்காக உம்மிடம் அளிக்கிறேன்.
46. ரதம்

த்ருததர துரகைர் விராஜமாநம்
மணிமய சக்ர சதுஷ்டயேன யுக்தம் !
கனகமய மும்விதான வந்தம்
பகவதி தே ஹிதரம் ஸமர்ப்பயாமி !!

வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தங்கத்தேரை உமக்கு அர்ப்பணிக்கிறேன்.

குதிரை, யானை மற்றும் ரதங்கள் ஆகிய மூன்று உபசாரங்களுக்கான தமிழ் பாடல் கீழே!

ஆபரணங்கள் அலங்கரிக்கும் சேணமிட்ட குதிரைகளும் (44)
கருமேக நிறங்கொண்ட கம்பீர யானைகளும் (45)
காற்றைப்போல் புரவிகளைப் பூட்டிவிட்ட இரதங்களும் (46)
களிப்புடனே தருகின்றோம் கருணையுடன் ஏற்றருள்வாய்!

47. சதுரங்க சேனைகள்

ஹயகஜ ரதபத்தி சோப மானம்
திசிதிசி துந்துபி மேகநாத யுக்தம் !
அதிபஹு சதுரங்க ஸைன்ய மேதம்
பகவதி பக்தி பரேண தேர்ப்பயாமி !!

ரத, கஜ, துரக, பதாதிகளுடன், ஒவ்வொரு திக்கிலும் துந்துபி நாதம் முழங்க, நால்வகைப் படைகளையும் மிகுந்த பக்தியுடன் உமக்கு அளிக்கிறேன்.

48. கோட்டை

பரிகீ க்ருத ஸப்த ஸாகரம்
பஹுஸம்பத் ஸஹிதம் மயாம்பதே விபுலம் !
ப்ரபலம் தரணி தலாபிதம்
த்ருடதுர்க்கம் நிகிலம் ஸமர்ப்பயாமி !!

ஏழுகடல்களால் எழிலாய் சூழப்பட்டதும், மிகுந்த செல்வம் கொண்டதும், பரந்த பரப்பளவுள்ளதுமான பூமி என்னும் பெயருள்ள கோட்டையை உமக்கு அளிக்கிறேன்.
சதுரங்க சேனை, கோட்டை ஆகியவற்றுக்கான தமிழ் பாடல் கீழே!

சர்வலோக அரசியுனக்கு சதுரங்க சேனைகளும் (47)
கடல்சூழ்ந்த புவியிதுவும் புவிதாங்கும் செல்வங்களும்
கோட்டையென உன்குடைக்கீழ் நீயாள வேண்டுமென
பதம்பணிந்து கேட்கின்றோம் பரமேசீ கொண்டருள்வாய்! (48)

49. விசிறி

சதபத்ர யுதை: ஸ்வபாவ சிதை
அது ஸெரளப்ய யுதை: யராக: பீதை: !
ப்ரமரீ முகரீ கிருதை ரநந்தை:
வ்யஜனை ஸ்த்வாம் ஜகதம்ப விஜயாமி !!

குளிர்ச்சியுடையதும், நறுமணமுள்ளதும், புஷ்ப தூளிகளால் சிவந்ததும், வண்டுகள் ரீங்காரமிடுவதுமான விசிறியால் உங்களுக்கு வீசுகிறேன்.

50. நாட்டியம்

ப்ரமர லுலித லோல குந்தலாலீ
விகளித மால்ய விகீர்ண ரங்கபூமீ: !
இயமதி ருசிராநடீ நடந்தீ
தவஹ்ருதயே முதமாதநோது மாத: !!

வண்டுகள் மொய்ப்பதால் சஞ்சலமான குந்தளத்திலிருந்து விழுந்த புஷ்பங்கள் இறைந்து கிடக்கும் இடமே நாட்ய பூமி, அங்கு நடனமிடும் நடீ உனக்கு சந்தோஷம் அளிக்கட்டும்.

குளுமைதரும் மலர்களுடன் மணம்பரப்பும் விசிறிகொண்டு
பூந்தென்றல் போலமெல்ல வீசிடநீ மகிழ்ந்திடுவாய்! (49)
வாயுவேகம் விஞ்சுகின்ற எழில்வண்ணக் கொடிகளுடன்
இரத்தினப் பதாகைகளும் தந்திடநீ ஏற்றருள்வாய்!



திரு. கே.ஆர்.எஸ் பாடியிருப்பதை கேட்க, கீழே இருக்கும் ப்ளேயரை இயக்கவும்.

Annaikku_64_Upacha...


Annaikku_64_Upacha...

51. நடனம்

முகநயன விலாஸ லோல வேணீ
விவஸித நிர்ஜித லோல ப்ருங்கமாலா !
யுவஜன ஸுககாரி சாருலீலா:
பகவதி தே புரதோ நடந்தி பாலா:

முகம், கண் இவைகளின் அபிநயத்தால் அசைகின்ற வேணியின் விலாசம், வரிசையாகச் சுற்றிவடும் வண்டுகள் வரிசையை விட அழகான இருக்கிறது. நடனக் கலையில் சிறந்த மங்கையர் உம்முன் நடனமாடுவதை சமர்ப்பிக்கிறேன்.

ப்ரம தளிகுல துல்யா லோலதம் மில்ல பாரா:
ஸ்மிதமுக கமலோத்யத் திவ்ய லாவண்ய பூரா: !
அநுபமித ஸுவேஷா வாரயோஷா நடந்தி
பரப்ருத கலகண்ட்யா: தேவிதைன்யம் துநோது: !!

அழகானவர்களும், ஒப்பற்ற வேடம் பூண்டவர்களும், குயில் போன்ற குரலினிமை கொண்டவர்களுடைய நடனம் ஏழ்மையை அகற்றட்டும்.

52. வாத்யம்

டமரு டிண்டிம ஜர்ஜர ஜல்லரீ
ம்ருதுரவத்ர கடத்ர கடாதய: !
ஜடிதி ஜாங்க்ருத ஜரங்க்ருதை:
பஹுதயம் ஹ்ருதயம் ஸுகபந்துமே!!

டமரு, டிண்டிம, ஜாஜ்ர ஜல்லரீ, த்ரகடம் ஆகிய வாத்யங்களின் சப்தம் மனதைச் சுகப்படுத்தட்டும்.
நாட்டியம், நடனம், மற்றும் வாத்யங்களுக்கான உபசார பாடல் கீழே!

நவரசமும் காட்டியுன்னை போற்றுகின்ற நாட்டியமும் (51)
ஜதிகள்சேர்த்து துரிதகதியில் ஆடுகின்ற நடனங்களும் (52)
டமரு,டிண்டிம, கச்சபிகள் முழங்குகின்ற பேரொலியும் (53)
அத்தனையும் உனக்காக, ஆனந்தமாய் மகிழ்ந்திடுவாய்!

53. கானம்

விபஞ்சீஷு ஸப்தஸ்வரான் வாத யந்த்ய:
தவத்வாரி காயந்தி கந்தர்வ கன்யா: !
க்ஷணம் ஸாவ தானேன சித்தேன மாத:
ஸமா கர்ணய த்வம் மயா ப்ரார்த்திதாஸி: !!

கந்தர்வ கன்னியர்கள் வீணையில் கானம் செய்கின்றனர். அந்த இசை இனிமையை நானும் கேட்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

54. நர்த்தன அபிநயம்

அபிநய கமநீயைர் நர்த்தனைர் நர்த்தகீனாம்
க்ஷணமபி ரமயித்வா சேத ஏதத் த்வதீயம் !
ஸ்வய மஹதி சித்ரை: ந்ருத்த வாதித்ர கீதை:
பகவதி பவதீயம் மானஸம் ரஞ்ஜயாமி !!

நடன மாதர்கள் அழகான அபிநயத்தால் உங்களை மகிழ்விப்பது போல நானும் ந்ருத்த வாத்யங்களால் உங்களை மகிழ்விக்கிறேன்.

கந்தர்வர் இசைக்கின்ற இனிமையான கானங்களும் (54)
கங்காதரன்விளை யாடல்களை அபிநயிக்கும் நர்த்தனங்களும்
கொன்றைமலர் சூடுவோனின் இடமிருக்கும் கொற்றவையே
கடம்பவனப் பேரழகீ, கண்டுநீயும் களித்திடுவாய்!


55. ஸ்துதி

தவ தேவி குணானு வர்ணனே
சதுரா நோ சதுரான நாதய: !
ததிவஹை க முகோஷு ஜந்துஷு
ஸ்தவநம் கஸ்தவ கர்துமீ ச்வர: !!

நான்முகன் முதலான தேவர்களாலேயே உமது குணத்தை வர்ணிக்க முடியாதெனில், என் போன்ற ஒரு முகம் கொண்ட மனிதர்களால் எப்படி வர்ணிக்க இயலும்?

56. ப்ரதக்ஷிணம்

பதேபதேயத் பரிபுஜ கேப்ய:
ஸத்யோச்வ மேதாதி பலம் ததாதி !
தத்ஸர்வ பாப க்ஷயயேது பூதம்
ப்ரதக்ஷிணம் தே பரிதள் கரோமி !!
பிரதக்ஷிணம் செய்பவர்களது ஒவ்வொரு அடியிலும் 'அச்வ மேதப் பலம்' கிடைக்கும். எனவே பாபங்கள் தீரும் வகையில் நாற்புறமும் பிரதக்ஷிணம் செய்கிறேன்.

பிரம்மன்,விஷ்ணு, சிவனென்ற மூன்றுதிருமூர்த்திகளும்
அடிபணியும் அன்னையுன்னை அன்புடனே வணங்குகின்றோம்! (55)
எண்ணுகின்ற மனதாலும் சொல்லுகின்ற வாக்காலும்
செய்யுகின்ற செயலாலும் உன்னைவலம் வருகின்றோம்! (56)


57. நமஸ்காரம்

ரக்தோத்பலா ரக்தலதா ப்ரபாப்யாம்
த்வஜோர்த்வா லேகா குலிசாங்கிதாப்யாம் !
அசேஷ ப்ருந்தாரக வந்திதாப்யாம்
நமோ பவாநீ பதபங்கஜாப்யாம் !!

தேவர்களால் வணங்கப்படுகிற செந்தாமரை போன்ற பவாநியே உன் பாதகமலங்களில் நமஸ்கரிக்கிறேன்.

சின்னமணி நூபுரங்கள் செல்லமாக கிணுகிணுக்க
வண்ணமணி ரத்தினங்கள் வரிசையாக மினுமினுக்க
சிற்சபையில் சிலம்பொலிக்க சிவனுடனே நடனமிடும்
செந்தாமரைப் பாதங்கள் சிரம்தாழ்ந்து வணங்குகின்றோம்! (57)


58. புஷ்பாஞ்சலி

சரண நளினயுக்மம் பங்கஜை: பூஜயித்வா
கனக கமலாமாலாம் கண்ட தேசேர் பயித்வா !
சிரஸி விநிஹி தோயம் ரத்ன புஷ்பாஞ்சலிஸ்தே
ஹ்ருதய கமலமத்யே தேவி ஹர்ஷம் தநோது !!


கமலத்தால் பூஜித்து, கமலத்தை அணிவித்து, உன்னுடைய முடிமேல் நான் வைக்கும் ரத்ன புஷ்பாஞ்சலி, என்னுடைய இதயத்தில் சந்தோஷத்தை அளிக்கட்டும்.
பலநிறத்தில் மலர்பறித்து பிரியமாக சேகரித்து
சுகமளிக்கும் மலர்பறித்து வாசனையாய் சேகரித்து
முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் தொழும்தேவி
எங்களுக்கும் அருளவேண்டி அஞ்சலிகள் செய்யுகின்றோம்! (58)

59. அந்தப்புரம்


அதமணிமய மஞ்சகா பிராமே
கனகமய விதான ராஜமானே !
ப்ரஸதகரு தூபிதேஸ் மின்
பகவதி பவநேஸ்து தே நிவாஸ: !!

மணிமயமாஅன மஞ்சம்; அழகான விதானம்; அகரு, தூபம் புகை; இவையிருக்கும் அந்தப்புரம் வாருங்கள்.

வானளாவும் மாடங்கள் தாமரைத்த டாகங்கள்
துள்ளியோடும் புள்ளிமான்கள் கொஞ்சிக்கூவும் இளங்கிளிகள்
அழகழகாய் பலமணிகள் இரத்தினங்கள் இழைத்திருக்கும்
எழில்அந்தப் புரத்திற்கு வசங்கரியே எழுந்தருள்வாய்! (60)


60. கட்டில்

ஏதஸ்மின் மணிகசிதே ஸுவர்ண பீடே
த்ரைலோக்யா பயவரதெள நிதாய ஹஸ்தெள!
விஸ்தீர்ணே ம்ருதுலத ரோத்தரச் சதேஸ்மின்
பர்ங்கே கனகமயே நிஷீத மாத: !!

மூவுலகுக்கும் வரமளிப்பவளே!, விசாலமான, மேல்விரிப்புள்ள ரத்னக் கட்டிலில் வந்து அமருங்கள்.
வெண்தந்தம் இழைத்துவைத்து இரத்தினங்கள் பதித்துவைத்து
பட்டுமெத்தை விரித்துவைத்தவி சாலமான கட்டிலிலே
பெண்நிலவே பேரெழிலே சிரமபரி காரம்செய்து
கண்ணயர்ந்து ஓய்வெடுக்க கண்மணியே வந்தருள்வாய்! (60)


61. நலங்கு

தவதேவி ஸ்ரோஜ சின்னயோ:
பதயோர் நிர்ஜித பத்மராகயோ: !
அதிரக்த தரை ரலக்தை:
புனருக்தாம் ரசயாமி ரக்ததாம். !!

தாமரை அடையாளமுள்ளதும், பத்மராகம் போன்றதுமான உமது சிவந்த திருவடிகளுக்கு செம்பஞ்சுக் குழம்பினால் நலங்கிட்டு, மேலும் செம்மையாக்குகிறேன்.
செங்கமலங் களும்வணங்கும் மென்பிஞ்சுப் பதங்களுக்கு
செம்பஞ்சுக் குழம்பெடுத்து செஞ்சித்திர மாய்தீட்டி
பூந்தளிர்போல் பதங்களுக்கு பூப்போல எழில்கூட்டி
பூவைக்கு நலுங்கிடவே பூமகளே நீமகிழ்வாய்! (61)

62. வாய் கொப்புளித்தல்
அதமாத ருசீர வாஸிதம்
நிஜதாம்பூல ரஸேன ரஞ்சிதம் !
தபநீய மயேஹி பட்டகே
முககண்டூஷ ஜலம் விதியதாம் !!

வெட்டிவேர் வாசனையுடன், உமது தாம்பூல ரசத்தால் சிவந்து போன வாயிலுள்ள நீரை, இந்த பொற்கிண்ணத்தில் கொப்பளியுங்கள்.

63. சயனம்

க்ஷணமத ஜகதம்ப மஞ்சகேஸ்மின்
ம்ருதுதர தூலிகயா விராஜமானே !
அதிரஹஸி முதா சிவேன ஸார்த்தம்
ஸுகசயனம் குருதத்ர மாம் ஸ்மரந்தீ !!

மிக மென்மையான மெத்தையுடன் கூடிய கட்டிலில் சிவனாருடன் மகிழ்வுடன் படுத்துக் கொள்வீர்களாக.


வெட்டிவேர் வாசநீரால் வாய்தூய்மை செய்துகொண்டு (63)
கட்டியமண வாளனான முக்கண்ணன் ஈசனுடன்
எட்டிய திசைகளெல்லாம் ஏற்றிகீதம் பாடிவர
கட்டிலில் சேர்ந்திருந்து காப்பாற்ற வேண்டுமம்மா! (64)


64. த்யானம்
முக்தா குந்தேந்து கெளராம் மணிமய
மகுடரம் ரத்ன தாடங்க யுக்தாம்
அக்ஷஸ்ரக் புஷ்ப ஹஸ்தாம் அபய வரகராம்
சந்த்ர சூடாம் தரிணேத்ராம் !
நானாலங்கார யுக்தாம் ஸுரமகுட
மணித்யோதித ஸவர்ண பீடாம்
ஸானந்தம் ஸுப்ரஸன்னாம் த்ரிபுவன
ஜனனீம் ஸேதஸா சிந்தயாமி !!

முத்து, குந்தம், சந்திரனைப் போன்று சிவப்பு நிறம் கொண்டவளும், மணிக்கீரீடமுள்ளவளும், ரத்னத்தால் ஆன தோடுகளை அணிந்தவளும், ஜப-மாலை, புஷ்பத்தை கைகளில் ஏந்தியவளும், அபய-வரத முத்திரைகளை மற்ற கரங்களில் காட்டியும், சந்திரனைத் தலையில் சூடியவளும், மூன்று கண்களை உடையவளும், அலங்காரமான தேவர்களது மகுடத்தை தனது பாத பீடமாகக் கொண்டவளும், ஆனந்தமானவளும், மூவ்வுலக்கிற்குக்கும் தாயான தேவீ!, நான் உன்னை என் மனத்தில் தியானிக்கிறேன்.

க்ஷமை வேண்டல்
ஏஷா பக்த்யா தவ விரசிதா யாமயா தேவிபூஜா
ஸ்விக்ருத்யைநாம் ஸபதி கைலான் மேப்ராதான் க்ஷமஸ்வ !
ந்யூனம் யுத்தத்தவ கருணையா பூர்ண தாமேது ஸத்ய:
ஸானந்தம் மே ஹ்ருதய கமலே தேஸ்து நித்யன் நிவாஸ : !!

தேவி, நான் பக்தியுடன் மானஸீகப் பூஜை செய்கிறேன். அதை ஏற்று, என்னுடைய தவறுகளைப் பொறுத்துக் கொள்வாயாக. பூஜையில் ஏதேனும் குறையிருக்குமானால். அதை உனது கருணையால் பூர்த்தி செய்வாயாக. நீ எனது ஹ்ருதய கமலத்தில் என்றும் வாசம் செய்ய வேண்டும் தாயே!.

அன்போடு பணிவோடு செய்துவந்த உபசாரங்களில்
குற்றங்குறை இருந்தாலும் கோபிக்க லாகாதம்மா!
அறியாமை ஆண்டிருக்கும் அறியாத பிள்ளைகள்யாம்
தெரியாமற் செய்யும்பிழை பொறுப்பதுந்தன் கடமையாகும்!

கரியோனைப் பெற்றெடுத்த கமலாத்மிகையே, உமையே!
கருத்துடனே செய்துவந்த அறுபத்தி நான்கு உபசாரங்களையும் ஏற்று
கனிந்துமனம் மகிழ்ந்திடுவாய்! மலர்ந்துஅருள் புரிந்திடுவாய்!
கடைக்கண்ணால் பார்த்திடுவாய்! காப்பாற்ற வந்திடுவாய்!

*******************************************************************************
ஸ்ரீ ஜகத்குரு சரணாரவிந்தாப்யாம் நம:
ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தர்யை நம:

*******************************************************************************

எனது வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு உபசாரத்திற்கும் தமிழில் அழகாகப் பாடல்கள் எழுதிக் கொடுத்த சகோதரி கவிநயாவிற்கும், தானாக முன்வந்து பாடல்களைப் பாடிக் கொடுத்த திரு. கே.ஆர்.எஸ் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

படித்துப் பின்னூட்டமிட்ட, மற்றும் படித்து மட்டும் சென்ற எல்லோருக்கும் எனது நன்றிகள், மற்றும் வணக்கங்கள்.
அம்பிகை ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுர சுந்தரி பரபட்டாரிகா எல்லோருக்கும் அவரவர் மனோ-பீஷ்டங்களை அருள வேண்டிக் கொண்டு, இந்த வலைப் பூவை முடிக்கிறேன்.

சுபமஸ்து !!!