Friday, September 18, 2009

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" - 1&2

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 1&2

நவராத்ரியில் பொதுவாக நாமனைவரும் துர்கா, லக்ஷ்மி ஸரஸ்வதி எனும் முப்பெரும் தேவியரை வணங்குதல் மரபு. இவர்கள் மூவரும் முறையே சிவன், திருமால், பிரம்மா எனும் முக்கடவுளரின் சக்தியாக விளங்குவர். அருள்மிகக் கொண்ட லோகமாதா, தன் கருணையினால் இந்த தேவியரின் உள்ளிருந்து இயக்க இன்னும் மூன்று சக்திகள் பிறந்தன. இவையே நவராத்ரி நாயகியர் எனத் துதிக்கப்படும் சக்தியின் ஒன்பது அம்சங்கள். ஸ்ரீ மஹா துர்க்கையின் ஒன்பது அம்சங்களான இந்த நவராத்ரி நாயகியரின் குணச்சிறப்புகளைப் போற்றித் துதிக்கும் விதமாக இந்த 'நவநாயகியர் நற்றமிழ்மாலை' என்னும் துதிப்பாடலை இங்கு அளிக்கிறேன். மங்களமான இந்த நவராத்திரி நன்நாளில் இதனைதினந்தோறும் படித்து அவளருள் பெற அனைவரையும் வேண்டுகிறேன்.

எதை எழுதுவது எனத் திகைத்திருந்த வேளையில் தனது இந்த அம்சங்களை எனக்குக் காட்டியருளிய என் தாயின் கருணையைப் போற்றி, அவள் திருக்கமலங்களில் இதனைச் சமர்ப்பிக்கின்றேன். இவற்றுள் ஒரு அம்சம் ஸ்கந்த மாதா என்பது என் மனதுக்கு இனிமையாயிருந்தது!
ஒருநாள்விட்டு ஒருநாளாய் இந்தப் பதிவுகள் வரும். அந்தந்த நாட்களுக்கு உரிய தேவியைத் துதித்து அருள்பெற அழைக்கிறேன்! முருகனருள் முன்னிற்க, யாவினும் நலம் சூழ்க!


"நவநாயகியர் நற்றமிழ்மாலை"

'காப்பு'
மங்களஞ்சேர் நவநாயகி மன்னுபுகழ் பாடிடவே
பொங்குதமிழ்ச்சொல்லெடுத்துப் புகழ்மாலை சூட்டிடவே
தங்குதடை ஏதுமின்றிப் புகழ்பரதம் எழுதிட்ட
ஐங்கரனே நின்னடியே காப்பு.

1. ஷைலபுத்ரி தேவி:

சுகுண மனோஹரி சுந்தரன் நாயகி சீவனைக் காத்திடும் தேவியளே
புவனங்கள் யாவையும் படைத்திடச் சிவனைத் தேடியே கலந்திடும் உமையவளே
மோஹனப்புன்னகை வீசிடும் முகத்தினில் மூக்குத்தி ஜொலித்திடத் திகழ்பவளே
வாவென அழைத்திடும் பக்தரைக் கண்டிடப் பாகென உருகிடும் துர்க்கையளே!
ஹிமவான் மகளாய் மலையினில் பிறந்து ஷைலபுத்ரியென அருள்பவளே
சிவனை அடைந்திடக் கடுந்தவம்செய்து சிவமும் அசைந்திடச் செய்தவளே
மூலாதாரத்தில் உன்னிடும் பக்தரை மேலேகொண்டு செல்பவளே
நவநாயகியரில் முதல்நாளின்று மஹாஷைலபுத்ரி தாள் பணிந்தேன்! [1]

2. ப்ரஹ்மசாரிணி மாதா:பிரமனின்மகனாம் தக்ஷனின்மகளாய்ச் சிவனை மணம்செய்து கொண்டவளே
சிவனைமதியாச் சிறுமதியோனைச் சீற்றம்பொங்கிடப் பார்த்தவளே
சொல்மதிகேளா தக்ஷனைச் சபித்துத் தீயினில் மறைந்த தூயவளே
ஹிமவான் மகளாய் மலைமடி தவழ்ந்த பேரெழில்கொண்ட துர்க்கையளே!
பிரஹ்மசாரிணியாய்க் கடுந்தவம்புரிந்து சிவனை அசைத்திட்ட தாயவளே
ஸ்வாதிஷ்ட்டானத்தில் இருந்திடும் அடியவர் வேண்டியநல்கும் மாயவளே
தைரியம்,வீரம் அறிவினில்தெளிவு அனைத்துக்கும் நீயே காரணியே
நவநாயகியரில் இரண்டாம்நாளின்று ப்ரஹ்மச்சாரிணியின் தாள் பணிந்தேன்! [2]

********************
[நவநாயகியர் உலா தொடரும்]

Monday, September 14, 2009

புரியவில்லை...

அம்மா என் துயரம்
எப்போது முடிந்திடுமோ - இல்லை
முடியாத இரவாகி
விடியாமல் போய்விடுமோ?

விதி என்னும் நீர்ச்சுழிக்குள்
வசமாக அகப்பட்டேன்
ஒன்று முடிந்த பின்னும் நான்
மற்றொன்றில் உழலுகிறேன்

காட்டாற்றில் அகப்பட்டு
கதியற்றுச் செல்லுகிறேன் - உன்
மாயத்தின் கைப்பிடிக்குள்
மயங்கிச் சுழலுகிறேன்

சுழல் விட்டு வெளிவந்தால்
நீ வருவாய் என்கின்றார்
இது என்ன நியாயமோ
எனக்குப் புரியவில்லை

மூழ்காமல் காத்திடுதல்
உந்தன் பொறுப்பில்லையோ
கைகொடுத்துக் கரைசேர்க்கும்
கருணை உனக்கில்லையோ??


--கவிநயா

Monday, September 7, 2009

காத்தருள்வாய் அம்மா!

முன்னை வினையும் இம்மை வினையும்
மத்தாய் என்னைக் கடைகிறதே
வெண்ணெய் என நீ திரண்டு வந்து
என்னைக் காத்து அருள்வாயே

பொம்மையைப் பார்த்து அன்னையை மறந்த
பிள்ளை யாக ஆனேனே
மாயை விலக்கி மருளை நீக்கி
என்னைக் காத்து அருள்வாயே

அறியாத சிறு பிள்ளை நானே
தவறுகள் பலவும் செய்தேனே
அறியாமை எனும் இருளை நீக்கி
என்னைக் காத்து அருள்வாயே

உள்ளே உறையும் உன்னை மறந்து
உயிர் நோக அலைகின்றேனே
உந்தன் உண்மை உணர வைத்து
என்னைக் காத்து அருள்வாயே!


--கவிநயா

Monday, August 31, 2009

ஸ்ரீ ஜகன் மோகினி கல்யாணி !



ஸ்ரீ ஜகன் மோகினி கல்யாணி
ஜெய பவ தாரிணி சுகவாணி

மாமலை தனில்வாழும் எழில்ராணி
அந்த மாதொரு பாகன்மனம் மகிழ்வேணி

புள்ளினம் பாட்டிசைக்கும் காலையிலே
உந்தன் புகழினைச் சேர்ந்திசைக்கும் சோலையிலே
வண்டினம் தேடும் உந்தன் முகமலரை
மலர்ச் செண்டிடம் கண்டிடுமே உன்னெழிலை

காற்றும் உந்தன் பெயரை ஏந்தி வரும்
நாற்று முதல் நாணல் வரை ஓதி வரும்
பெருங்கடல் அலையும் உன் சேதி சொல்லும்
அதை கேட்கையில் ஆனந்தம் மனதை அள்ளும்


--கவிநயா

Monday, August 24, 2009

என் அன்னை நீயே!



என் அன்னை நீயே
என் னுயிர்த் தாயே
உன் திருப் பதங்கள்
சரணம் அம்மா

என் கண்ணின் மணியே
கண் காக்கும் இமையே
உன் அருள் பதங்கள்
சரணம் அம்மா

உள்ளன்பால் உன் பெயரை
உச்சரிக்கின்றேன்
பதர் என்னைக் கரையேற்ற
விரைந்தோடி வருவாய்

விதி எந்தன் வழி மறிக்க
விழி நீரோ கண் மறைக்க
இறைஞ்சி உன்னை அழைக்கின்றேன்
இரங்கி நீ வருவாய்

என்னுள்ளே உன்னை ஏற்றி
விளக்காக வைத்தேன்
இருள் அகற்றி ஒளி பரப்ப
இக்கணமே வருவாய்!


--கவிநயா