Thursday, August 14, 2008

"ஆடித் தேர் வருகுதம்மா!" -- ஆடிவெள்ளி 5-ம் பதிவு

"ஆடித் தேர் வருகுதம்மா!"
ஆடிவெள்ளிக் கிழமையிலே அன்னை வந்தாள் தேரினிலே
அண்டமெலாம் ஆளும் சத்தி அசைந்து வந்தாள் ஊரினிலே
கண்டவரின் மனம் மயங்க கனிந்து வந்தாள் மாரியம்மா
வண்டாரும் குழலழகி வேண்டும் வரம் தாருமம்மா!

அழகுமிகு தொம்பைகளும் அந்தரத்தில் ஆடிவர
வாழை, தெங்கு குலைகளுமே அடுக்கடுக்காய் அசைந்துவர
குழைந்திருக்கும் பக்தர்கூட்டம் வடமெடுத்து இழுத்துவர
அழகுமயில் ஆடுதல்போல் அம்மன் தேர் ஓடுதம்மா!

ஓரசைவில் பார்த்திருந்தால் சிறுகுழந்தை தவழுதல்போல்
மறுபக்கம் பார்த்திருந்தால் சின்னப்பெண் நடப்பதுபோல்
இன்னொருபுறம் பார்த்தாலோ பருவப்பெண் குலுங்குதல்போல்
சிலநேரம் வயதான மூதாட்டி தளர்நடைபோல்.......
காட்டியிங்கே ஆடித்தேர் அசைந்தசைந்து வருகுதம்மா!

அன்னையிவள் பெருமையினைச் சொல்லிடவும் முடியாது
என்னமொழி சொன்னாலும் எடுத்துரைக்க இயலாது
கண்ணெழிலைக் காட்டியிவள் கேட்டவரம் தந்திடுவாள்
பண்ணெடுத்துப் பாடுபவர் பாவங்களைப் போக்கிடுவாள்!

சமயபுரத்தினிலே மாரியென வீற்றிருப்பாள்
கண்ணபுரத்தினிலே கண்ணாத்தா இவளேதான்
மதுரையிலே மீனாக்ஷி காஞ்சியிலே காமாக்ஷி
காசி விசாலாக்ஷி வேற்காட்டில் கருமாரி
திருவாரூர் கமலாம்பா திருக்கடவூர் அபிராமி
ஆரணி பெரியபாளையம் அங்கிவளே படவேட்டம்மா
சிதம்பரத்தில் சிவகாமி நாகையிலே நீலாயி
உஜ்ஜயினி ஓங்காளி உறையூரில் வெக்காளி
புதுக்கோட்டையில் புவனேஸ்வரி மயிலையிலே கற்பகம்மா
முண்டகக்கண்ணி மாரியம்மா, அங்கையற்கண்ணி அகிலாம்பா
பொற்கூடை மகமாயி பொலிவுதரும் பொன்னாத்தா
என்றுன்னைப் போற்றுகின்ற பக்தருக்கு அருளிடம்மா!

இப்படியே கோயிலிலே இருப்பதிலே மகிழாமல்
தாயாக நீவந்து வீடெல்லாம் குடியிருப்பாய்
தாயன்பே தெய்வமென தரணிக்குக் காட்டிடுவாய்
தங்கமே நின்பெருமை எளியேனால் சொல்லப்போமோ!

ஊரிருக்கும் இடமெல்லாம் தாயாரே நீயிருப்பாய்
உன்பிள்ளை கணபதியை உன்னுடனே வைத்திருப்பாய்
தடையேதும் வாராமல் உனைக்காண அவன் அருள,
தயவெல்லாம் தந்திடவே நீயென்றும் அருளிடுவாய்!

ஆற்றங்கரை மணலெடுத்து ஆடியிலே தவமிருந்தாய்
கூற்றுவனை உதைத்திட்ட இடக்காலாய் நீயிருந்தாய்
குற்றமிலா பட்டருக்கு நிலவொளியாய் நீ வந்தாய்
ஏற்றிடுவாய் என் துதியை! எல்லார்க்கும் அருளிடுவாய்!

தேரோட்டம் கூட்டிவந்து ஊர்நிலையைக் காட்டுகின்றோம்
வேறோட்டம் இல்லாது கூழூற்றிக் குளிர்கின்றோம்
ஏரோட்டம் நடப்பதற்கு நீர்நிலையைத் தந்திடுவாய்
பாரெட்டும் புகழ்பாடும் பத்தினியே பொழிந்திடுவாய்!

ஆதவனைக்கண்டதுபோல் என்மனமும் மலர்கிறது
திங்களைக் கண்டதுபோல் என்னுள்ளம் குளிர்கிறது
செவ்வாயில் சிரிப்பெல்லாம் காட்டியெனை மகிழ்த்திடுவாய்
பொன்புதனாய் என்வாழ்வில் புத்தொளியை ஊட்டிடுவாய்
குருவாக நீவந்து திருவருளைக் காட்டிடுவாய் - விடி
வெள்ளியென நம்பிக்கை எனக்கூட்டி நிறைத்திடுவாய் - வி
சனிக்கும் கவலைகளை நீ விரட்டிக் காத்திடுவாய்
நின்னடியில் என்காலம் நிறைவுபெறச் செய்திடுவாய்!

****************************

25 comments:

 1. //சமயபுரத்தினிலே மாரியென வீற்றிருப்பாள்
  கண்ணபுரத்தினிலே கண்ணாத்தா இவளேதான்
  மதுரையிலே மீனாக்ஷி காஞ்சியிலே காமாக்ஷி
  காசி விசாலாக்ஷி வேற்காட்டில் கருமாரி
  திருவாரூர் கமலாம்பா திருக்கடவூர் அபிராமி
  ஆரணி பெரியபாளையம் அங்கிவளே படவேட்டம்மா
  சிதம்பரத்தில் சிவகாமி நாகையிலே நீலாயி
  உஜ்ஜயினி ஓங்காளி உறையூரில் வெக்காளி
  புதுக்கோட்டையில் புவனேஸ்வரி மயிலையிலே கற்பகம்மா
  முண்டகக்கண்ணி மாரியம்மா, அங்கையற்கண்ணி அகிலாம்பா
  பொற்கூடை மகமாயி பொலிவுதரும் பொன்னாத்தா
  என்றுன்னைப் போற்றுகின்ற பக்தருக்கு அருளிடம்மா!//

  ஒம் சக்தி! ஓம் சக்தி!

  ஆடி வெள்ளியன்று ஆயிரங் கண்ணுடையாளுக்கு அருமையான பாடலை சமர்ப்பணம் செய்திருக்கின்றீர்கள். வளர்க தங்கள் தொண்டு.

  ReplyDelete
 2. //ஓரசைவில் பார்த்திருந்தால் சிறுகுழந்தை தவழுதல்போல்
  மறுபக்கம் பார்த்திருந்தால் சின்னப்பெண் நடப்பதுபோல்
  இன்னொருபுறம் பார்த்தாலோ பருவப்பெண் குலுங்குதல்போல்
  சிலநேரம் வயதான மூதாட்டி தளர்நடைபோல்.......
  காட்டியிங்கே ஆடித்தேர் அசைந்தசைந்து வருகுதம்மா!
  //

  சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் சாயல் இருக்கிறது.
  :)

  சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி, சிவகங்கை குளத்தருகோ.

  ReplyDelete
 3. //////நின்னடியில் என்காலம் நிறைவுபெறச் செய்திடுவாய்!////

  என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் வி.எஸ்.கே சார்!

  ReplyDelete
 4. ////// கோவியார் சொல்லியது: சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் சாயல் இருக்கிறது.////

  சாயல் இருந்தால் என்ன சுவாமி?
  பாடல் நன்றாக இருக்கிறதே;
  அதைச் சொல்லியிருக்கலாமே நீங்கள்!

  ReplyDelete
 5. //ஒம் சக்தி! ஓம் சக்தி!

  ஆடி வெள்ளியன்று ஆயிரங் கண்ணுடையாளுக்கு அருமையான பாடலை சமர்ப்பணம் செய்திருக்கின்றீர்கள். வளர்க தங்கள் தொண்டு.//

  நன்றி திரு கைலாஷி!
  ஓம் சக்தி! ஓம் சக்தி!

  ReplyDelete
 6. //சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் சாயல் இருக்கிறது.
  :)//

  இருக்கலாம் கோவியாரே! ஆனால், அது என் நினைவில் அப்போது இல்லை என்பதே உண்மை!

  ReplyDelete
 7. //என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் வி.எஸ்.கே சார்!//

  நீங்க எப்பவும் என் நினைவில் உண்டு ஆசானே!:))

  ReplyDelete
 8. //ஆடி வெள்ளியன்று ஆயிரங் கண்ணுடையாளுக்கு அருமையான பாடலை சமர்ப்பணம் செய்திருக்கின்றீர்கள். வளர்க தங்கள் தொண்டு.//

  வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 9. //சாயல் இருந்தால் என்ன சுவாமி?
  பாடல் நன்றாக இருக்கிறதே;
  அதைச் சொல்லியிருக்கலாமே நீங்கள்!//

  அதானே!:))))))))

  ReplyDelete
 10. //SP.VR. SUBBIAH said...
  ////// கோவியார் சொல்லியது: சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் சாயல் இருக்கிறது.////

  சாயல் இருந்தால் என்ன சுவாமி?
  பாடல் நன்றாக இருக்கிறதே;
  அதைச் சொல்லியிருக்கலாமே நீங்கள்!
  //

  வாத்தியார் இது என்ன வத்தி வைக்கும் வேலை ? பொறுப்பான வாத்தியார் செய்யக் கூடியதா இது ?

  நான் எங்கே நல்லா இல்லை என்று சொன்னேன் ? சொல்லாததை ஏன் குறிப்பிடுகிறீர்கள் ?
  :)

  ReplyDelete
 11. //வாத்தியார் இது என்ன வத்தி வைக்கும் வேலை ? பொறுப்பான வாத்தியார் செய்யக் கூடியதா இது//

  ஆமாம்!
  எங்க வாத்தியார் பொறுப்பான வேலையைத் தான் செஞ்சி இருக்காரு! வத்தி வைத்துத் தானே தீபம் ஏற்ற முடியும்! அதான் ஆடி வெள்ளி அதுவுமா மாவிளக்கில் வத்தி போட்டு தீபம் ஏத்தி இருக்கார்!

  கோவி அண்ணா, ஒங்களுக்கு இன்னிக்கி நோ எஸ்கேப்! :)

  ReplyDelete
 12. //ஆரணி பெரியபாளையம் அங்கிவளே படவேட்டம்மா//

  எங்கூரு ஆத்தாளையும் SK கட்டிய தேரில் கண்டு கொண்டேன்! கண்டு கொண்டேன்! அருமையான பாடல் புனைவு SK ஐயா!

  வேகமா பாடிக் கொடுத்தா, பதிவில் ஒலியேற்றி விடலாம்!

  ReplyDelete
 13. //உஜ்ஜயினி ஓங்காளி உறையூரில் வெக்காளி
  புதுக்கோட்டையில் புவனேஸ்வரி மயிலையிலே கற்பகம்மா
  முண்டகக்கண்ணி மாரியம்மா//

  ராஜராஜேஸ்வரி தொலைக்காட்சித் தொடரில் ஒரு பாட்டு வருமே, வேகமான ஓட்ட நடையில்...அப்படி ஒரு beat இருக்கு SK, இந்த வரிகளில்! நல்ல சந்தம்!

  //வி-சனிக்கும் கவலைகளை நீ விரட்டிக் காத்திடுவாய்//

  அழகான சொல் விளையாட்டு! :)

  //இப்படியே கோயிலிலே இருப்பதிலே மகிழாமல்
  தாயாக நீவந்து வீடெல்லாம் குடியிருப்பாய்//

  எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!

  ReplyDelete
 14. "ஆடி ஆடி வருகுதம்மா
  ஆடித்தேர் வருகுதம்மா
  தேடித் தேடி வந்து நின்றோம்
  தேவி உன்னைக் காண‌ வந்தோம்
  வாடி வாடி அழுத முகம்
  வாட்டம் தீர வணங்கி நின்றோம்
  ஓடி ஓடி களைத்து விட்டோம்
  உன் மடியில் சாய வந்தோம்
  இடி இடியாய் வருவதெல்லாம்
  பொடிப்பொடியாய் ஆகக் கண்டோம்
  இன்னல் என்று வந்ததெல்லாம்
  இன்னிசையாய் மாறக் கேட்டோம்
  ............"
  உங்கள் பாமாலை, என்னையும் தொடுக்க வைத்தது ஒரு பக்தி மாலை
  .நன்றி
  இனி நீங்களே முடித்து வையுங்கள்.அல்லது ஒரு பகுதி முடித்து , அடுத்தவரை எழுதச் சொல்லி, அன்புக் கட்டளை இடுங்கள்,அன்னைக்கு சாற்றும் பாமாலையை அனைவரும் சேர்ந்தே தொடுக்கலாமே.

  ReplyDelete
 15. http://valluvam-rohini.blogspot.com/2007/12/blog-post.html#links
  ------
  one more pakthi paamaalai

  ReplyDelete
 16. //ஆசான்:பாடல் நன்றாக இருக்கிறதே;
  அதைச் சொல்லியிருக்கலாமே நீங்கள்!
  //

  கோவி.கண்ணன்: வாத்தியார் இது என்ன வத்தி வைக்கும் வேலை ? பொறுப்பான வாத்தியார் செய்யக் கூடியதா இது ?

  நான் எங்கே நல்லா இல்லை என்று சொன்னேன் ? சொல்லாததை ஏன் குறிப்பிடுகிறீர்கள் ?//


  நல்லா இருக்கேன்னுதான் ஆசான் சொல்லச் சொன்னார்,
  நல்லா இல்லைன்னு நீங்க சொன்னதாச் சொல்லலியே, கோவியாரே!

  ReplyDelete
 17. // அதான் ஆடி வெள்ளி அதுவுமா மாவிளக்கில் வத்தி போட்டு தீபம் ஏத்தி இருக்கார்! //

  புரிபவர்க்குப் புரிந்தால் சரி., ரவி.

  ReplyDelete
 18. //எங்கூரு ஆத்தாளையும் SK கட்டிய தேரில் கண்டு கொண்டேன்! கண்டு கொண்டேன்! அருமையான பாடல் புனைவு SK ஐயா!

  வேகமா பாடிக் கொடுத்தா, பதிவில் ஒலியேற்றி விடலாம்!//

  நன்றி. ரவி.
  பாடிருவோம்!:))

  ReplyDelete
 19. //எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!//

  எழுதி முடித்ததும், மீண்டும் படிக்கும்போது, எனக்கும் பிடித்த வரிகள் இவை, ரவி.
  அதேபோல, எனக்கும் அந்த'ராஜ ராஜேஸ்வரி' பாடல் நினைவுக்கு வந்தது உண்மையே!

  ReplyDelete
 20. //வழிமொழிகிறேன்.//

  நன்றி, கவிநயா.

  ReplyDelete
 21. //இன்னல் என்று வந்ததெல்லாம்
  இன்னிசையாய் மாறக் கேட்டோம்
  ............"
  உங்கள் பாமாலை, என்னையும் தொடுக்க வைத்தது ஒரு பக்தி மாலை
  .நன்றி
  இனி நீங்களே முடித்து வையுங்கள்.அல்லது ஒரு பகுதி முடித்து , அடுத்தவரை எழுதச் சொல்லி, அன்புக் கட்டளை இடுங்கள்,அன்னைக்கு சாற்றும் பாமாலையை அனைவரும் சேர்ந்தே தொடுக்கலாமே.//

  மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் ரோகிணி அவர்களே.

  உங்கள் வரிகள் என்ன மீண்டும் சில வரிகள் எழுத வைத்தன. இன்று வலையேற்றுகிறேன். நன்றி.

  உங்கள் பதிவையும் பார்க்கிறேன்.

  ReplyDelete
 22. பக்திப் பாடல் எனும் தீபத்தின் சுடரைத் தூண்டி விட்டேன்...அது ஜக‌ஜோதியாய், ஒளி வீச ,அனைவரையும் ,கோல் ஏந்தி ,அணிவகுக்க வைக்க இருப்பது குறித்து ,மகிழ்ச்சி.
  இப்படிக்கு
  கோமா என்ற ரோகிணி[ரோகிணி என்ற கோமா]
  அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன்

  ReplyDelete
 23. Nice verses. Sankar, collect all your Bhakthi Paadalkal & publish as a book.
  Best wishes.
  Balakka

  ReplyDelete
 24. //இப்படிக்கு
  கோமா என்ற ரோகிணி[ரோகிணி என்ற கோமா]
  அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன்//

  போட்டாச்சுங்க!

  ReplyDelete
 25. மிக்க நன்றி பாலாக்கா!
  செய்ய முயற்சிக்கிறேன்!

  ReplyDelete