Sunday, August 17, 2008

"அம்மன் தரிசனம்"

"அம்மன் தரிசனம்"

கவிநயா ஒரு அற்புதமான மீனாக்ஷி அம்மன் படத்தைப் போட்டிருந்தார்.
ரோகிணியும் எனது "ஆடித்தேர் வருகுதம்மா" பதிவில் ஒரு தொடர்கவிதை இப்படி ஆரம்பித்து வைத்தார்.

"ஆடி ஆடி வருகுதம்மா
ஆடித்தேர் வருகுதம்மா

தேடித் தேடி வந்து நின்றோம்
தேவி உன்னைக் காண‌ வந்தோம்

வாடி வாடி அழுத முகம்
வாட்டம் தீர வணங்கி நின்றோம்

ஓடி ஓடி களைத்து விட்டோம்
உன் மடியில் சாய வந்தோம்

இடி இடியாய் வருவதெல்லாம்
பொடிப்பொடியாய் ஆகக் கண்டோம்

இன்னல் என்று வந்ததெல்லாம்
இன்னிசையாய் மாறக் கேட்டோம்"


இன்று[08/16/08] காலை வரலக்ஷ்மி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள்.
பூஜை மரியாதைகளை அன்புடன் ஏற்றுக்கொண்டாள்.
அதைத் தொடர்ந்து என் மனத்தில் எழுந்த வரிகள் இவை!



வெள்ளிக்கிழமையில் அம்மன் தரிசனம் செய்வது இங்கே சிறப்பாகும்!

வடிவுடையாளின் வண்ணமுகத்தைக் காண்பது மனதுக்கு இனிதாகும்!

நுதலில் துலங்கும் குங்குமச்சிவப்பில் குற்றங்கள் யாவும் மறைந்தோடும்!

மீன்விழியாளின் மருளும் விழிகள் கண்டிட இங்கே கலிதீரும்!

மூக்குத்தி அழகைக் கண்டால்போதும் மனதில் மகிழ்ச்சி மிகவாகும்!

செவ்விதழ் காட்டும் சிரிப்பில் கவலைகள் எம்மைவிட்டு விரைந்தோடும்!

செவ்வாய்மொழிகள் கேட்டிடக் கேட்டிட களிப்பும் நெஞ்சில் குடியேறும்!

பட்டுக்கன்னம் காட்டும் செம்மையில் பாவங்கள் எல்லாம் பறந்தோடும்!

செவிமடல் ஆடும் குண்டலவொலியில் செய்தன யாவும் கழிந்துவிடும்!

அலையாய் விரியும் கூந்தல் அழகினில் அலைபோல் துன்பம் நீங்கிவிடும்!

அல்லிக்கைகள் அருளும் அழகில் அன்பே இங்கு அணைந்தேறும்!

கைவளை குலுங்க அசைந்திடும் அழகில் ஆசைகள் உள்ளில் மிகவாகும்!

குலுங்கும் கொங்கைகள் சுரக்கும் அமுதினில் பசியும் இங்கே பறந்தோடும்!

இடையில் திகழும் மேகலை ஒலியில் இன்னிசைக் கீதம் செவிமடுக்கும்!

கட்டுடல்மேனி கண்டதும் மனதில் கசடுகள் எல்லாம் கரைந்தோடும்!

பிஞ்சுப்பாதம் மிஞ்சும் மிஞ்சில் நெஞ்சம் இங்கே தள்ளாடும்!

மாவிலைவிரல்கள் முன்னே வருகையில் மோஹனம் எதிரே நடமாடும்!

முன்னழகில் மனம் தடுமாறும்! பின்னழகில் மனம் தள்ளாடும்!

அம்மன் தரிசனம் அழகாய்க் கண்டதில் ஆனந்தம் இங்கே மிகவாச்சு!

அம்மா உந்தன் அருளைக் காட்டி அடியேன் வாழ்வில் விளக்கேற்று!
***********************

12 comments:

  1. வரலக்ஷ்மி தமிழ்மணம் வரும் முன்னரே இதோ வந்தேன் அன்னையிடம்!
    வரலக்ஷ்மி நீ ப்ரோவ பாரம்மா!

    //மாவிலைவிரல்கள் முன்னே வருகையில் மோஹனம் எதிரே நடமாடும்!//
    //குலுங்கும் கொங்கைகள் சுரக்கும் அமுதினில் பசியும் இங்கே பறந்தோடும்!//

    அருமையான வரிகள் SK!
    ஆடி வெள்ளி தோறும் நீங்கள் அம்மன் தரிசனம் செய்வித்து வைத்தமைக்கு அடியோங்கள் நன்றி!

    ReplyDelete
  2. அடியேனுக்கு உன் அருளைக் காட்டி
    அன்பாய் அம்-மா விளக்கேற்று!

    ReplyDelete
  3. ஒவ்வொரு வெள்ளியும் நீங்களும் இங்கே அளித்த பங்கினை மறக்கப் போமோ ரவி!@

    //அடியேனுக்கு உன் அருளைக் காட்டி
    அன்பாய் அம்-மா விளக்கேற்று!//

    அருமை! ரவி!

    மாவிளக்கு நாமதானே ஏத்தணும்!
    அவ அதுலே வருவா!

    ReplyDelete
  4. பக்திப் பாடல் எனும் கரும்பின் அடுத்த பகுதி [இணுக்கு]தேனாய் இனிக்கிறது ..
    பாடல் தொகுப்பின், தொடக்கம்,
    நுனிக்கரும்பென்றால்...
    போகப் போக சுவை கூடுமே ...?
    அடிக் கரும்பை, ருசிக்க ஆவலாய் இருக்கிறேன்.

    ReplyDelete
  5. அம்மன் தரிசனம் அருமை. ரோகிணி அவர்களின் வரிகளையும் மிகவும் ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  6. அவங்க வரிகள்தான் இந்தக் கவிதைக்கு[??] இன்ஸ்பிரேஷன் கவிநயா!

    நன்றி!

    ReplyDelete
  7. வள்ளுவம் ரோகிணி என்பது என் வலைத்தளத்தின் தலைப்பு.கோமா [கோமதிநடராஜன்]என்ற பெயரில்தான் நான் வலைத்தள சகோதர‌
    சகோதரிகளிடையே பரிச்சயமாகியிருக்கிறேன்.
    அன்புடன் கோமா என்ற ரோகிணி

    ReplyDelete
  8. //மாவிளக்கு நாமதானே ஏத்தணும்!
    அவ அதுலே வருவா!//

    அம்மா தானே நம்ம சார்பா மாவிளக்கு போடுவாங்க!
    அவளும் அம்மா தானே!

    அதான் அவளையே அம்-மா விளக்கேற்று-ன்னு அடம் புடிச்சேன் SK! :))

    ReplyDelete
  9. கோமா தொடங்கிய வரிகளிலே அம்மனின் அருளையும் தொடர்ந்து வந்த தங்கள் வரிகளிலே அவளின் அழகுடன் கூடிய அருளையும் தரிசிக்கப் பெற்றேன். அருமை அருமை.

    ReplyDelete
  10. //அன்புடன் கோமா என்ற ரோகிணி//

    இனி இப்படியே அழைக்கிறேன்!:))

    ReplyDelete
  11. //அவளும் அம்மா தானே!

    அதான் அவளையே அம்-மா விளக்கேற்று-ன்னு அடம் புடிச்சேன் SK! :))//

    உங்க அடத்துக்கு முன்னாடி என் கருத்தெல்லாம் ஜுஜுப்பி ரவி!
    ஒத்துக்கறேன்!:))

    ReplyDelete
  12. //கோமா தொடங்கிய வரிகளிலே அம்மனின் அருளையும் தொடர்ந்து வந்த தங்கள் வரிகளிலே அவளின் அழகுடன் கூடிய அருளையும் தரிசிக்கப் பெற்றேன். அருமை அருமை.//

    நன்றி ராமலக்ஷ்மி அவர்களே!

    ReplyDelete