Thursday, August 5, 2010

அம்மன் பாட்டு 200! வருக! அவள் அருள் பெறுக!



அம்மா.


அன்பின் திருவுருவம். கருணையின் முழுவடிவம்.
அன்போடு எப்போது அழைத்தாலும் அவள் நிச்சயம் வருவாள்.
அதுவும் ஆடி மாதம் அழைத்தால்! உடனடியாக ஓடோடியும் வந்து விடுவாள்! இந்த சிறப்புப் பதிவிற்காக அவளை ஆடி வெள்ளியில் அழைப்பது இன்னும் சிறப்பல்லவா!

அவளுக்கு எல்லாமே பிடிக்கும்…
நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கல், முந்திரி மின்னும் வெண் பொங்கல், காரசாரமான புளியோதரை, பால்வெள்ளை தயிரமுது, விதவிதமான பாயசங்கள், சுவைமிகுந்த சுண்டல்கள்,… இவை மட்டுமின்றி, ஏழைக்கேற்ற கூழும், அச்சு வெல்லப் பானகமும் கூட அவளுக்கு பிடிக்கும்.

அவளுக்கு என்ன கொடுக்கிறோம் என்பது முக்கியம் இல்லை; எவ்வளவு அன்போடு கொடுக்கிறோம் என்பதே முக்கியம்.

இதோ, இந்த அம்மன் பாடல்கள் வலைப்பூவில் இன்றோடு 200 பூக்கள் பூத்து விட்டன. என்றும் வாடாத பக்திப் பாடல் பூக்கள்.
ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வடிவம்; ஒவ்வொரு நிறம்; ஒவ்வொரு மணம். அவள் ஒருவளே வித விதமான தோற்றங்களில் அருள் பாலிப்பதைப் போல.

ஆனால் எல்லாப் பூக்களையுமே அன்பென்ற நாரால்தான் தொடுத்திருக்கிறது. இப்போதும், எத்தனை பூக்கள் தொடுத்தோம் என்பது முக்கியமில்லை; எவ்வளவு அன்போடு தொடுத்தோம் என்பதே முக்கியம், என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியதாகிறது.



இந்த 200-வது சிறப்புப் பதிவிற்கென, அவளுக்காக ஒரே மாலையை அம்மன் பாடல் குழுவினர் அனைவரும் சேர்ந்து தொடுத்திருக்கிறோம்.

அதாவது, இங்கே தருகின்ற பாடலை இரண்டிரண்டு பத்திகளாக, VSK என்று அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் சங்கர் குமார் அண்ணாவும், மாதவிப் பந்தல் கேயாரெஸும், கூடல் குமரனும், மற்றும் கவிநயாவாகிய நானும், எழுதி இருக்கிறோம். யார் யார் எந்த எந்த பத்திகள் எழுதினோம் என்று கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம் :)

நம்முடைய ஆஸ்தானப் பாடகி மீனா சங்கரன் அவர்கள் மனமுவந்து பாடித் தந்திருக்கிறார்.

இந்த நல்ல நாளில், அன்னையின் மீதான அன்பும் பக்தியும் அவள் பிள்ளைகளுக்கு பல்கிப் பெருகவும், அவள் விருப்பப்படி நடக்கும் செல்லக் குழந்தைகளாக அவர்கள் இருக்கவும், அவளை மனமுருகப் பிரார்த்திக்கிறோம்.





நெஞ்சில் நிறைந்தவள் நினைவில் உறைபவள் எங்கள் இறையவள் சக்தியளே!
பஞ்சினும் மெல்லிய பாதங்கள் உடையவள் அஞ்சிடும் நெஞ்சிற்கு துணையவளே!
சிந்தையில் நின்றவள் விந்தை மிகுந்தவள் எந்தையுடன் மகிழ்ந் தருள்பவளே!
மந்தையென வரும் துன்பங்கள் தீர்ப்பவள் சொந்தமென எமைக் காப்பவளே!.....(1)

கொன்றை யணிந்தவன் மேனி பகிர்ந்தவள் பங்கய கண்ணனின் தங்கையளே!
குன்றில் அமர்ந்தவன் கோலஎழில் குகன் வென்றிட வேல் தன்னைத் தந்தவளே!
மன்றினில் ஆடிடும் செஞ்சடை யோனுடன் கொஞ்சி மகிழ்ந்திடும் கோமகளே!
கன்றதன் குரலினில் குழைந்திடும் ஆவென ஓடி உடன்வந்து காப்பவளே!.....(2)

பம்பை யொலித்திட சங்கம் முழங்கிட தண்டை குலுங்கிட வருபவளே!
உம்பர்கள் நாடிட உலகமே தேடிட எங்குமிலா தோடி மறைபவளே!
வம்பர்கள் வாடிட அன்பர்கள் ஆடிட ஆனந்த தரிசனம் தருபவளே!
அம்பரம் நடுவினில் பம்பரமாய் நின்று எங்களை யென்றும் காப்பவளே!.....(3)

சங்கரன் பாதியில் தங்கமாய்க் கலந்து கங்கையைக் கூடவே அணைத்தவளே!
சங்கரன் சுதனை மங்கலமாய்த் தந்து அடியவர் வினைகளைக் களைந்தவளே!
சங்கரன் புதல்வனாம் சண்முக நாதனைச் சரவணப் பொய்கையில் சேர்த்தவளே!
சங்கரன் குமரன் சந்ததம் கும்பிடும் அம்பிகையே எமைக் காப்பவளே!.....(4)

மங்கலம் பொங்கிடும் செங்கலசம் என எங்குமே இன்பமே அருள்பவளே
மங்கலக் கமலச் செல்வியாய் மாலவன் மார்பினில் பொலிந்திடும் திருமகளே
செங்கையில் நூலினை ஏந்தியே வேதங்கள் சீர்பெற யாழினில் இசைப்பவளே
மங்கையே நான்முகன் நாவினில் நிலைத்திடும் நாமகளே எமைக் காப்பவளே!.....(5)

இடமென வலமென இருபுறம் இறைவனை என்றுமே இருத்திடும் இளையவளே
இடமென அவனது மேனியில் அமர்ந்து இமையவர் போற்றிட இசைந்தவளே
படர்பொருள் யாவுமாய் பரிதியில் தோன்றி பார்மிசை ஒளியென விளைந்தவளே
உடல்மிசை உயிரென கரங்தெங்கும் பரந்துமே உலகையும் எம்மையும் காப்பவளே!....(6)

அயிகிரி நந்தினி, அகிலம் மகிழ்ந்து இனி, அடியவர்க்கு இனிமை சேர்ப்பவளே!
கிரிவர விந்திய, மலை தனில் வாசினி, வெற்றியின் முரசை ஆர்ப்பவளே!
பகவதி, போது மணிச் சடை நாயகி, மகிஷ மனம் தனில் வேர்ப்பவளே!
வெற்றி உனக்கென, வெற்றி உனக்கென, வேல்தரும் அன்னையே! காப்பவளே!....(7)

மாதொரு பாகனின், பாதி மதி நதி, பாயும் முகம் தனைக் கொண்டவளே!
தீதொரு பாகனாம், எந்தன் பிழை களை, வீயும் அகம் தனைக் கொண்டவளே!
கோகில வாணி, குழல் மொழி பாணி, நூபுரத்தில் மறை நூற்பவளே!
தந்திடு திருவடி, தந்திடு திருவடி, தாயவளே என்னைக் காப்பவளே!.....(8)

காப்பவளே! கதி சேர்ப்பவளே! விதி மாய்ப்பவளே! பதி வாய்ப்பவளே!
தீர்ப்பவளே! துயர் தீர்ப்பவளே! அகம் ஆர்ப்பவளே! முகம் பார்ப்பவளே!
நோற்பவளே! நுதல் வேர்ப்பவளே! சீர் சேர்ப்பவளே! சேய் மீட்பவளே!
ஏற்பவளே! எனை ஏற்பவளே! என் தாயவளே! என் தாய் இவளே!.....(9)

இத்துடன் சங்கர, குமரனும், மீனாள்,
இராகவ சேகரன் இயம்பித் துதித்திடு
இமைய வரம்பியின் இருநூறாம் துதி
அம்மன் பாட்டில் அமைந்தேலோ ரெம்பாவாய்!

***
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறைந்திருக்கட்டும்!

17 comments:

  1. அம்மா என்று அழைத்து
    அம்மன் பாட்டு 200-க்கு
    அம்மாவின் பாட்டு 200-க்கு
    என்ன வாழ்த்து சொல்வது-ன்னு யோசனையாவே நிக்குறேன்!

    Happy 200 amma!

    ReplyDelete
  2. நன்றி கவி-க்கா!

    கவிநயக் கவிகளை, விடாது, தொடர்ந்து இங்கு இட்டு,
    இருநூறும் திருநூறாய் ஆனதில் தங்கள் பங்கு மகத்தானது! இனிய வாழ்த்துக்கள்!

    அம்மன் பாட்டு பிந்தித் துவங்கி, முந்தி முந்தியுள்ளது!
    முருகனருள், கண்ணன் பாட்டு போன்ற குழு வலைப்பூக்கள் எல்லாம் முந்தித் துவங்கியவை! ஆனால் அம்மன் பாட்டு தான் 200 இலக்கை அடைந்த முதல் ஆன்மீக குழுப்பதிவு!

    அதற்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. மொத்தமாக எல்லாத்தையும் சேர்த்துப் படிக்கிறப்ப அருமையா இருக்கு அக்கா. மீனா சங்கரன் அவர்களும் ரொம்ப நல்லா பாடியிருக்காங்க!

    ReplyDelete
  4. இத்துடன் பத்து முறைக்கும் மேல் கேட்டு விட்டேன்!
    நம்ம அரசவைப் பாடகியான மீனாட்சி மேடம் தீர்க்கமான குரலில் அருமையாப் பாடி இருக்காங்க!

    100-க்கு நீங்க தான் பாடினீங்க - ஜனனீ ஜனனீ - தமிழ் நீ, தமிழ் நீ!
    200-க்கும் உங்கள் குரலே அமைந்தது பாருங்கள்!

    இதே போல் முந்நூறு முந்த, நான் நூறு நவில, ஐ நூறு என மகிழ, அறு நூறு, துயர் அறு நூறாய், எழு நூறு, அருள் எழும் நூறாய், எண்ணூறு, எண்ணிலா நூறாய், இந்தத் தொண்டு தொடரட்டும்!

    ReplyDelete
  5. //இத்துடன் சங்கர, குமரனும், மீனாள்,
    இராகவ சேகரன் இயம்பித் துதித்திடு
    இமைய வரம்பியின் இருநூறாம் துதி
    அம்மன் பாட்டில் அமைந்தேலோ ரெம்பாவாய்!//

    சங்கர, குமரனும் என்னும் போது சங்கர் குமார் (SK ஐயா) மற்றும் குமரனும் வந்து விட்டார்கள்!
    மீனாள் என்னும் போது பாருங்க - எழுதிக் கொடுத்த மீனாள் (கவிநயா அக்கா), பாடிக் கொடுத்த மீனாள் (மீனாட்சி சங்கரன்) - ரெண்டு பேருமே வந்துட்டாங்க! எதேச்சையா போட்டது, அப்படியே உண்மையாகி விட்டது!

    ReplyDelete
  6. ஒரு பத்து வெவ்வேறு ராகங்களில் ஒவ்வொரு நாலடியையும் பாட நினைத்தேன்.
    அது போல ஒரு ராக மாலிகையாக இப்பாடலைத் தொடுத்து யூ ட்யூபில் போடுகிறேன்.
    புன்னாக வராளி, சாரங்க, நீலாம்பரி, அடாணா, சாமா,சஹானா, கானடா, பெளளி, தர்பாரி கானடா,
    இத்தனை ராகங்களும் இன்னும் பலவும்.

    இன்னும் இந்த ராகமாலிகை கொஞ்ச நேரத்தில் வரும்.

    ஆஸ்தான பாடகி மீனாள் அவர்கள் ஒரு ப்ரொஃபஷணல். அவங்க பக்கம் நாங்க நெருங்கவே முடியாது.
    அவ்வளவு நளினமாகப் பாடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு சபாஷ் !!

    சுப்பு ரத்தினம்.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  7. இன்றுதான் குமரன் பதிவுப்பக்கப் பலகையில் பார்த்தேன்...ஆடிவெள்ளியில் ஆடிப் பாடி வந்திருக்கும் அம்பிகையை வணங்குகிறேன்....குழுவினர் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்...எத்தனையோ குழுப்பதிவுகள் ஆரம்பித்து ஆங்காங்கே நின்றிருக்கிறது, இக்குழு மேன்மேலும் தொடர்ந்திட அவளருளட்டும்.

    ReplyDelete
  8. மதுரையம்பதி சொல்வதை நாம் எல்லோருமே ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்
    என்ன சொல்கிறார் ?
    .//.ஆடிவெள்ளியில் ஆடிப் பாடி வந்திருக்கும் அம்பிகையை வணங்குகிறேன்....குழுவினர் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்...எத்தனையோ குழுப்பதிவுகள் ஆரம்பித்து ஆங்காங்கே நின்றிருக்கிறது, //

    இவர் சொல்வதில் உள்ள நூறு விழுக்காடு உண்மை நம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
    ஏன் துவங்கும் எல்லா பதிவுகளும் நின்று போகின்றன நடுவினிலே ?
    அவர்களுக்கு பக்தி குறைந்துவிட்டதா இல்லை காணாமற்போய்விட்டதா ?

    பக்தி தன்னலமற்றது. வழிபடும் தெய்வத்தை மனப்பூர்வமாக வணங்கி எல்லாவற்றையும்
    அவனுக்கே ஒப்படைத்து, நடப்பதெல்லாம் அவன் செயலே என்று ஒரு சரணாகதி தத்துவ அடிப்படையில்
    அமைந்தது பக்தி. ( இதைப்பற்றி பெரியவர் என்ன சொல்கிறார் என்று இந்த வார கல்கியில் படியுங்கள். இங்கும் இருக்கிறது) இந்த நோக்குடன் துவங்கும் எந்த செயலுமே நிற்பதில்லை. துவங்கியவர் முடிந்தாலும்
    அவர் நிலையில் இன்னொருவர் தொடரத்தான் செய்கிறார்.

    ஆனால், பக்தி எனும் வெளிப்பூச்சுடன் துவங்கும் எந்த செயலும் தொடர்ந்து நிற்பதில்லை. இவர்கள் கடவுள்: பக்தி
    என்று துவங்கி, வலைக்கு வந்து கேள்வியோ பின்னூட்டம் போடுகிறவர்களுக்கு , பரிகாரங்கள், அது இது என்று சொல்லி குழப்பிவிட்டு, அதற்கு இங்கு போ, இதற்கு இங்கு போ, இவரைப் பார், அவரைப்பார் என்று சொல்லி
    பக்தியின் திசையை திருப்பி விடுகிறார்கள். இன்னும் பல பதிவர் இந்தப்புத்தகத்தை வாங்கு, அந்த ப் புத்தகத்தை
    வாங்கு, இந்த அன்னதானம் நடக்கிறது, இந்த பூஜையில் பங்கு கொள்ள இந்த நம்பருக்கு தொடர்பு கொள் என்று
    ஒரு வணிக நோக்குடன் செயல்படுகிறார்கள். இன்னும் சிலர், இதற்கெல்லாம் சப்ஸிடரி கம்பெனி போல ஒரு சோதிடப்பதிவும் வைத்துக்கொண்டு, தமது அரைகுறை ஞானத்தை ( அஞ்ஞானத்தை ) வெளிப்படுத்துகின்றனர்.
    இன்றைய பதிவு உலகம் பார்ப்பதற்கு கொஞ்சம் வேதனையாகவே இருக்கிறது.

    நடப்பது நடந்தே தீரும். நடப்பன யாவும் நீ நிகழ்த்தவில்லை. நீ ஒரு சாட்சியே

    ஆண்டவனை அடைய‌
    அன்யதா சரணம் நாஸ்தி, த்வமேவ சரணம் மம

    என்ற நோக்குடன் செயல் படவேண்டும். அது தான் உண்மையான பக்தி.

    அந்த நோக்குடனே செயல்படும் தளம் இந்த அம்மன் பாட்டு வலைத் தளம்.
    எனது ஆசிகளும் வாழ்த்துக்களும்

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  9. நாத நாமகிரியாவில் துவங்கி பெளளி , கானடா, சஹானா, மத்யமாவதி, நீலாம்பரி, அடாணா, தர்பாரி கானடா,
    இன்னும் பல ராகங்களில் இந்த அற்புதமான பாசுரங்களைப் பாடியிருக்கிறார். அயிகிரி என்னும் துவங்கும் பாசுரம்
    மட்டும் அதே மெட்டில். கடைசி பாட்டு தர்பாரி கானடாவில். ஒரு ராக மாலிகை .
    பதினைந்து நிமிடத்திற்கு மேல் ஆனதால், இரண்டாகப்பிரித்துப்போட்டிருக்கிறார்
    யூ ட்யூபில்
    பாருங்கள். இல்லை என்றால், எனது
    பதிவிலும் இருக்கிறது.
    அம்மன் சன்னதி ஒரு திருக்கோவில் .
    அதில் எல்லோருக்கும் ஒரு இடம் உண்டு.
    இவர் பாடுவதை
    யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும், இந்த‌
    மீனாட்சி பாட்டி கேட்பார் ரசிப்பார்.

    மீனாட்சி பாட்டி.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  10. அருமையாக, கேட்டவுடன், மிகக் குறைந்த நேரத்தில் பாடித்தந்த மீனாவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

    எப்போதும் பாடித் தரும் தாத்தா குடும்பத்தில் ஒருவர் என்பதால் நன்றி வேண்டாமில்லையா தாத்தா? :) உங்களுடைய ஆசிகள் மட்டும் எப்போதும் வேண்டும் :) பக்தியை பற்றிய அழகான பகிர்தலுக்கு நன்றி தாத்தா.

    மௌலி, உங்களை இந்தப் பக்கம் அம்மா வரவழைத்து விட்டாள். மிக்க மகிழ்ச்சி :)

    இரண்டு கைகள் சேர்ந்தாதான் சப்தம் வரும் என்பது போல் அனைவருடைய முயற்சியினாலும், மிக முக்கியமான அவள் அருளாலும் நடை பழகும் இந்த வலைப்பூ, மேலும் தொடரவும், அவளே அருள வேண்டும்.

    அன்னையின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்.

    ReplyDelete
  11. அம்மனின் 200 பாடலுக்காக வலைக்குழுவினர் அனைவருக்கும் அன்னை தன் அருளை வழங்க பிரார்த்தனை செய்கிறேன்.

    ReplyDelete
  12. வாருங்கள் கைலாஷி. வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  13. தாத்தா, நீங்கள் பல ராகங்களில் பாடிச் சிறப்பித்திருப்பதை இப்போதுதான் கேட்க முடிந்தது தாத்தா. மிகவும் அருமையாக இருக்கிறது. மனமார்ந்த நன்றிகள்.

    //இவர் பாடுவதை
    யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும், இந்த‌
    மீனாட்சி பாட்டி கேட்பார் ரசிப்பார்.//

    பாட்டி, தாத்தா பாடறதை நானும்தானே எப்பவும் கேட்கிறேன்? :)

    ReplyDelete
  14. வாழ்த்துகள்

    நன்றிகள் உங்களுக்கு

    ReplyDelete
  15. இன்னும் வளர்ந்து 500ரைத் தொட அம்மன் அருள் புரியட்டும்.

    ReplyDelete
  16. எப்படியோ திகழுக்கும் பதில் சொல்ல விட்டுப் போயிடுச்சு :( மன்னியுங்கள் திகழ். வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  17. //இன்னும் வளர்ந்து 500ரைத் தொட அம்மன் அருள் புரியட்டும்.//

    மிக்க நன்றி கைலாஷி.

    ReplyDelete