Monday, December 24, 2012

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!



சுப்பு தாத்தா சிந்து பைரவி ராகத்தில் அப்படி ஒரு அன்போடு அம்மாவை ஊஞ்சல் ஆட்டுகிறார். நாமும் சேர்ந்து கொள்வோம், வாருங்கள்! மிக்க நன்றி தாத்தா! ஊஞ்சலில் அமைத்திருக்கும் படம் மிக அழகு. அதற்கும் மிகவும் நன்றி!





ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா ஊஞ்சல் ஆடுகவே
அகிலம் எல்லாம் போற்றிடவே
ஆனந்தமாய் நீ ஆடுகவே!

கண்டங் கறுத்த சிவனுடனே
கண்ணாய் மணியாய் இருப்பவளே
கண்ணாரமுதே உமையவளே
கனிவாய் ஊஞ்சல் ஆடுகவே!

கஜமுகப் பிள்ளை உடனிருக்க
கந்தப் பிள்ளை துணையிருக்க
கண்ணுதலான் உன் அருகிருக்க
கனியமுதே நீ ஆடுகவே!

வானவ ரெல்லாம் வணங்கி நிற்க
தானவ ரெல்லாம் தெண்டனிட
மானிட ரெல்லாம் பணிந்திருக்க
மகிழ்ந்தே ஊஞ்சல் ஆடுகவே!

நான்முக னுடனே நாமகளும்
அரிதுயில் அரியுடன் பூமகளும்
அரனுடன் அகிலமும் போற்றிடவே
அம்மா நீயும் ஆடுகவே!

ஐந்தொழில் புரியும் தேவியளே
அன்பே உருவாம் அன்னையளே
கொஞ்சம் நீயும் ஓய்வெடுக்க
ஊஞ்சல் அமைத்தோம் ஆடுகவே!    

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா ஊஞ்சல் ஆடுகவே
அகிலம் எல்லாம் போற்றிடவே
ஆனந்தமாய் நீ ஆடுகவே!


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://navarathrii.blogspot.com/2010/10/4.html

3 comments:

  1. ஐந்தொழில் புரியும் தேவியளே
    அன்பே உருவாம் அன்னையளே
    கொஞ்சம் நீயும் ஓய்வெடுக்க
    ஊஞ்சல் அமைத்தோம் ஆடுகவே!

    ஓய்வில்லா தாய்தான் ஆனால்
    ஊஞ்சலாடிக்கொண்டே உலகைக்காப்பாள்

    ReplyDelete
  2. நன்றி, திவாகர் ஜி!

    ReplyDelete