Monday, April 22, 2013

கா அம்மா!



சுப்பு தாத்தா கிராமிய மெட்டில் அமைத்து அசத்தியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



கண்ணீராலே கவிதை வடித்தேன்,
            காதால் கேளாயோ?
பன்னீர்ப் பூவே பாதம் பிடித்தேன்,
            பரிவாய்ப் பாராயோ?
நாவை அசைத்து நாமம் சொன்னேன்,
            நங்காய் கேளாயோ?
பூவை உனக்குப் பூசை செய்தேன்,
            பக்கம் வாராயோ?

அகிலம் காக்கும் என்அம்மா,
            என் அகத்தில் வந்து நில்லம்மா
நிகளம் துகளாய் ஆக்கம்மா,
            புகலாய் வந்தேன் கா அம்மா
விதியோ இன்னும் விடவில்லை,
            மயங்கும் மதியோ மாறவில்லை
பதமே கதியென வந்து விட்டேன்,
            பழவினை விரட்டி அருளம்மா

தேடும் யாவும் நீயாக,
            தெவிட்டா இன்பத் தேனாக…
வாடும் உள்ளம் பூவாக,
            வாசத் தென்றல் காற்றாக…
ஓடும் மனது நின்றிடணும்,
            உன்பதந் தனிலே ஒன்றிடணும்
பாடும் பேசும் பொருள் யாவும்,          
            பாவை புகழே ஆகிடணும்!


--கவிநயா

8 comments:

  1. /// ஓடும் மனது நின்றிடணும்...
    உன்பதந் தனிலே ஒன்றிடணும்... //

    அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அங்கயற்கண்ணியின் திருமண வைபோகம் நடைபெறும் நேரம், அம்பிகையின் கவிதை ஒன்று தந்திருப்பீர்கள் என வந்தால்....... இருக்கிறது!!!!. மிகுந்த மகிழ்ச்சி. அருமையான கவிதை. அம்பிகையின் அருள் நம் அனைவர் மீதும் பொழியப் பிரார்த்திக்கிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  3. //பதமே கதியென வந்து விட்டேன்,
    பழவினை விரட்டி அருளம்மா//

    அழகான கருத்து மிக்க வரிகள். நன்றி

    ReplyDelete
  4. நன்றி தனபாலன்!

    ReplyDelete
  5. ஆமாம் பார்வதி, கல்யாணம்னு உணராம நான் பாட்டுக்கு புலம்பிட்டேன்! இங்கே சில சமயங்களில் நாளும் கிழமையும் என்னன்னு தெரியறதுக்குள்ளேயே முடிஞ்சிடுது :( வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. நன்றி ஷைலன்!

    ReplyDelete
  7. "ஓடும் மனது நின்றிடணும்,

    உன்பதந் தனிலே ஒன்றிடணும்"

    SOOPER

    ReplyDelete