Monday, April 6, 2015

பாராயோ? வாராயோ?


சுப்பு தாத்தா தேன் போலப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



தேனினிய திருநாமம், செப்புகிறேன் தினந்தோறும்

மீனனைய விழியாளே, மீனாளே பாராயோ?



உன்நினைவே சுவாசமென, வாழுகிறேன் தினந்தோறும்

உத்தமியே உமையாளே, உன்மகளைப் பாராயோ?



பனிமலை மீதினிலே, பரம சிவன்அருகே

பதவிசாய் வீற்றிருக்கும், பார்வதியே பாராயோ?



கனியிதழ் முறுவலுடன், காசினியைக் காத்திருக்கும்

காஞ்சிநகர்க் காமாக்ஷி, என்திசையில் பாராயோ?



சிதம்பர நாதனவன், சிலம்பொலியில் லயிக்கும்

சிற்றிடையாள் சிவகாமி, சற்று என்னைப் பாராயோ?



காசிவிஸ்வ நாதனுடன், பக்தர்தமைக் கடைத்தேற்றும்

கோலஎழில் விசாலாக்ஷி, கொஞ்சமிங்கு பாராயோ?



ஊருக்கொரு பெயருடனே, உலகெல்லாம் ஆளுகின்ற

என்தாயே மனமிரங்கி, பிள்ளையினைப் பாராயோ?



விழிகளில் நீர்வழிய, வேண்டுகிறேன் உனைநானும்

வேதனைகள் தீர்த்திடவே, விரைந்திங்கு வாராயோ?


--கவிநயா

2 comments:

  1. ஆதியன்னை சோதிக்கிறாள் ; "பொறு "என்று போதிக்கிறாள் ;

    பேதையர் நமக்கு வேறு ஆதாரம் யார் மகளே ?

    விழிகளிலே அருள் வழிய மீன்விழியாள் பார்த்திடுவாள் ;

    எழிலரசி சடுதியிலே வேதனைகள் தீர்த்தருள்வாள் !

    ReplyDelete
  2. உங்க பின்னூட்டம் பார்த்ததுமே பதிவிட்டிருப்பீங்கன்னு நினைச்சேன் :) நன்றி லலிதாம்மா.

    ReplyDelete