ஒரு முறை எந்தன் எதிரினில் வந்து
தரிசனம் தருவாயோ, அம்மா
தரிசனம் தருவாயோ?
கரிசனமாக என்முகம் பார்த்து
கனிவுடன் சிரிப்பாயோ, அம்மா
கனிவுடன் சிரிப்பாயோ?
(ஒரு முறை)
கண்ணீர் போதும் என்பாயோ, எனை
நெஞ்சோடணைத்துக் கொள்வாயோ?
(என்) உளறல் கேட்டு மகிழ்வாயோ?
உவகை மீறக் களிப்பாயோ?
(ஒரு முறை)
உலகினில் பிறந்து உழலும் பேதை
நீயே கதியென உணரும் வேளை
பேதியென் குரலைக் கேட்பாயோ?
வாதை தீர்க்க வருவாயோ?
(ஒரு முறை)
சொந்தம் பந்தம் எல்லாம் மாயை
உண்மைச் சொந்தம் நீயே தாயே
அழைத்தேன் உன்னை வருவாயோ?
அணைத்தே ஆறுதல் தருவாயோ?
(ஒரு முறை)
--கவிநயா
No comments:
Post a Comment