ஆதி சிவை அம்பிகையே
பாதி சிவன் ஆனவளே
ஏழுலகம் ஆக்கி வைத்த எங்கள் தேவியே, உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காக்க வா நீயே
(ஆதி)
பாசமுடன் சென்னியிலுன்
பாதமலர் சூடிக் கொண்டோம்
பக்தருக்காய் இரங்குகின்ற எங்கள் தேவியே, உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காக்க வா நீயே
(ஆதி)
போதும் இந்தப் பிறவியென
தேடி உன்னைச் சரணடைந்தோம்
அடைக்கலமாய் எங்களை நீ ஏற்க வேண்டுமே, உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காக்க வேண்டுமே
(ஆதி)
அஞ்சலென்று நீ சொன்னால்
அந்தச் சொல்லே போதுமம்மா
அஞ்சுகமே உன்னை நிழலை அண்டி வந்தோமே, உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காக்க வேண்டுமே
(ஆதி)
நெருப்பிலிட்ட பஞ்சு போலத்
துன்பமெல்லாம் தூசாகக்
கடை விழியால் எம் திசையில் பார்த்தருள்வாயே, உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காத்தருள்வாயே
(ஆதி)
வாழும் வரை உன் நினைவே
வாழ வேண்டும் எம்முடனே
வந்து எங்கள் நெஞ்சினிலே குடியிருப்பாயே, உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காத்தருள்வாயே
(ஆதி)
--கவிநயா
No comments:
Post a Comment