Tuesday, February 15, 2022

என்ன ஆச்சு, அம்மா?

 

பார்வதியே பைரவியே பரமசிவன் பாரிகையே

காரிகையே கருணை செய்ய நேரமில்லையோ, என்னைக்

கடைக் கண்ணால் பார்ப்பதற்கும் மனமும் வல்லையோ?

(பார்வதி)

 

மனுஷியாகப் பிறந்தாலும் நானும் உன்றன் பிள்ளை

அதனை நீயும் மறந்ததனால் எனக்கு ரொம்பத் தொல்லை

(பார்வதி)

 

நீலகண்டன் முகம் பார்த்து உன்னை மறந்தையோ, மீண்டும்

ஆலகாலம் குடிப்பானென்று எண்ணி பயந்தையோ?

 

ஆனைமுகப் பிள்ளை கண்டு கவலை கொண்டையோ, மீண்டும்

பழைய முகம் திரும்ப வரும் என்றிருந்தையோ?

 

ஆறுமுகன் பின்னாலே ஓடித் திரிந்தையோ, மீண்டும்

கோபங் கொண்டு செல்வனென்று காவலிருந்தையோ?

 

ஆக மொத்தம் இவ்வுலகைப் பார்க்க மறந்தையோ

ஓலமிடும் பிள்ளை குரல் கேட்க மறந்தையோ?

(பார்வதி)


--கவிநயா



1 comment:

  1. நன்றி அக்கா , சந்தோசம் மீண்டும் பதிவிடுவதை பார்ப்பற்கு

    ReplyDelete