Monday, August 8, 2016

அருள் நீ புரிவாயோ?


அமிர்த வர்ஷிணியில் அமிர்தமாகாவே வர்ஷிக்கிறது, கீதாம்மாவின் குரல்! மிக்க நன்றி கீதாம்மா, சுப்பு தாத்தா!



அருள் நீ புரிவாயோ?

வரம் நீ தருவாயோ?

(அருள்)



ஒரு முறை உனை நினைந்து உள்ளம் உருகிடவும்

கதி நீ என உணர்ந்து கண்ணீர் பெருகிடவும்

(அருள்)



கருவறையில் பிறந்து, விதி வலையில் விழுந்து,

மதியிழந்து உழன்று,  வழி மாறி,

சுகம் எதென அலைந்து, உனை மறந்து தொலைந்து,

அகம் கலங்கி மலங்கித்,  தடுமாறும் எனக்கு

(அருள்)


--கவிநயா 


Monday, August 1, 2016

உதவி செய்வாய்!

கீதாம்மாவின் மனதை உருக்கும் இனிய குரலில்...

https://soundcloud.com/meenasury/wndnlnmsww8g


உன்னடி பணிந்தேத்த
உதவி செய்வாய்
(உன்னடி)

ஊழ் வினையை மாற்றி
உனதருளைக் காட்டி
(உன்னடி)

கண்ணிருந்தும் குருடாய்
செவியிருந்தும் செவிடாய்
அரிதாம் பிறவியிதை வீணாக்கி
உன்னை அறியாமல் நாளைப் பாழாக்கும், எனக்கு
(உன்னடி)




--கவிநயா


Monday, July 25, 2016

காமாக்ஷி தாயே!


கீதா ரங்கன் அம்மா குந்தல வராளி ராகத்தில் இனிமை ததும்பப் பாடியது. மிக்க நன்றி கீதாம்மா, சுப்பு தாத்தா!




காமாக்ஷி தாயே

கருணை செய்வாயே

(காமாக்ஷி)



காஞ்சியிலே வீற்றிருந்து

கண்களினால் ஆட்சி செய்யும்

(காமாக்ஷி)



கஞ்ச மலர்ப் பாதங்கள்

நெஞ்சினிலே ஒளிர்ந்திடவும்

விஞ்சும் அன்பின் காரணத்தால்

விழிநீர் பெருகிடவும்

(காமாக்ஷி)



நாவினிக்க உன் நாமம்

நாளும் நவின்றிடவும்

பாவினிக்க உன்புகழைப்

பண்ணில் வைத்துப் பயின்றிடவும்

(காமாக்ஷி)


--கவிநயா 


Monday, July 18, 2016

சோதனை ஏன்?


அமிர் கல்யாணி ராகத்தில், சுப்பு தாத்தாவின் இசையில், கீதாம்மா அவர்கள் மனமுருகப் பாடியிருப்பது... மிக்க நன்றி, சுப்பு தாத்தா, மற்றும் கீதாம்மா!



உன்னையன்றி ஒருவரையும்

நான் நம்புகிலேன் தாயே

உள்ளம் படுகின்ற வேதனையில்

மனம் வெம்புகிறேன் தாயே



அம்மா என நீ இருக்கையிலும்

சும்மா எனக்கேன் சோதனையோ?

விழிநீர் ஆறாய் வழிகையிலும்

வேடிக்கை பார்ப்பதுன் வாடிக்கையோ?

(உன்னை)



பிள்ளை மனந்தான் பித்தாச்சு, இங்கு

அன்னையுன் மனமோ கல்லாச்சு

உலகின் வழக்கம் மாறியதோ, இல்லை

மனதின் மயக்கம் கூடியதோ?

(உன்னை)


--கவிநயா

Monday, July 11, 2016

தேயாத மதி


வாசலிலே பூத்திருக்கும் வண்ண மலர் உனக்காக
நேசத்திலே பூத்திருக்கும் என்னிதயம் உனக்காக
இதயத்திலே சின்னஞ் சிறு கோயில் வைத்தேன் உனக்காக
உதயமென நீயெழுந்து அதில் உதிப்பாய் அதற்காக

சோலைமலர்த் தேனே, என் சொக்கத் தங்கத் தாயே
பாலையிலே தவித்தாலும், பக்கத் துணை நீயே
வேலை வேலை என்றலையும் வேளையிலும் தாயே
மாலகற்றிக் கால்பிடிக்க அருள வேணும் நீயே

உள்ளமெனும் வானில் வந்து உலவுகின்ற தாயே
ஒரு நொடியும் தேயாத முழு நிலவு நீயே
தேடுகின்ற உண்மை உன்னை உணர்ந்திடவே  தாயே
தேயாத மதி எனக்கு அருள வேணும் நீயே



--கவிநயா