Monday, March 8, 2021

ஆட்கொண்டருள்வாய்

 

ஆட்கொண்டருள்வாய் அம்பிகையே

பூக்கொண் டுனையே பூசித்தேன் உமையே

(ஆட்கொண்டருள்வாய்)

 

நாளும் உன் நாமம் நாவினில் தேனாக

வாழும் வாழ்வெல்லாம் உன்திருப் பணியாக

(ஆட்கொண்டருள்வாய்)

 

நாடும் துன்பங்கள் நொடியினில் தூசாக

தேடும் பொருள் யாவும் தேவியுன் பதமாக

பாடும் பண்ணெல்லாம் உன் திருப்புகழாக

வாடும் என்னிதயம் நீ தங்கும் வீடாக

(ஆட்கொண்டருள்வாய்)



--கவிநயா


Monday, March 1, 2021

என் தங்கம்!

 

தங்கமே வைரமே

தத்தி வரும் அன்னமே

காணாமல் வாடுகின்றேன் சுவர்ணமே, உன்னைக்

கண்டு விட்டால் இங்கு வரும் சுவர்க்கமே

(தங்கமே)

 

ஓடி வரும் ஆற்றைப் போல

ஓடுகின்ற இந்த வாழ்வு

உன்னை நோக்கி ஓட வேண்டும் சுவர்ணமே, உன்னைக்

கண்டு விட்டால் இங்கு வரும் சுவர்க்கமே

(தங்கமே)

 

தாளாத துயர் கூட

தக்ஷணத்தில் ஓடி விடும்

கேளாத இன்ப மெல்லாம்

தேடி வந்து கூடி விடும்

உன்னை மட்டும் கண்டு கொண்டால் சுவர்ணமே, உன்னைக்

கண்டு விட்டால் இங்கு வரும் சுவர்க்கமே

(தங்கமே)


--கவிநயா



Monday, February 22, 2021

பக்தி வேண்டும்

 


பக்தியைத் தருவாய் பார்வதியே

சித்த மலம் அறுப்பாய், சிந்தையிலே இருப்பாய்

(பக்தி)

 

அன்றாடம் உன்பாதம் தொழுதிடவும்

மன்றாடி உன் நிழலை நாடிடவும்

(பக்தி)

 

உடலோடு உயிர் தந்து ஆக்கி வைத்தாய்

பல ஜென்ம கர்ம பலன் கூட்டி வைத்தாய்

சதி செய்யும் விதி தன்னை ஓட்டிடுவாய்

மதியினில் உன் மதிமுகத்தை நாட்டிடுவாய்

(பக்தி)



--கவிநயா



Monday, February 15, 2021

அருள் வேண்டி...


அருள் வேண்டி அருள் வேண்டி அம்மா நான் தவமிருந்தேன்

இருள் நீங்க மருள் நீங்க அருள்வாய் அம்மா

 

மலை போலத் துன்பங்கள் வழியெங்கும் காண்கின்றேன்

பனியாக அவற்றை நீ பணிப்பாயம்மா

 

அலை போல ஆசைகளில் அலைபாயும் என் மனதில்

நிலையாக நீ வந்து நிற்பாயம்மா

 

உலையிட்ட சோறாகக் கொதிக்கின்ற வாழ்வினிலே

நிலை பெற்ற நிலவாகிக் குளிர்வாயம்மா

 

சிலையாக நின்றாலும் உயிராகி ஒளிர்ந்தாலும்

கலையாத அன்பை நீ தருவாயம்மா

 

விலகாமல் உன் பாதம் விரும்பிநிதம் தொழ வேண்டும்

அகலாமல் என்னோடு இருப்பாயம்மா

 

தாயில்லாக் கன்றைப் போல் தவிக்கின்ற குரல் கேட்டு

வா என்று சொல்லும் முன் வருவாயம்மா

 

பிழையென்ன செய்தாலும் பிள்ளையுன் பிள்ளை தான்

மழையென்ன உன்னன்பைப் பொழிவாயம்மா


--கவிநயா


Monday, February 8, 2021

அன்னையும் நீ, பிள்ளையும் நீ

 

அன்னையென உனை அழைத்தேன் அஞ்சுகமே

பிள்ளையென உனை அணைத்தேன், கொஞ்சிக் கொஞ்சி தினமே

 

தாயெனத் தாலாட்டி

தளிரெனச் சீராட்டி

வாஞ்சையுடன் அள்ளி உன்னை

வாரி மடி இருத்தி

 

கூந்தல் பின்னி முடித்து

கூட்டமாகப் பூக்கள் தைத்து

கன்னங்கரு விழியிரண்டில்

கயலைப் போல் மையெழுதி

 

செக்கச் சிவந்த வானைத்

தொட்டெடுத்துப் பொட்டு வைத்து

கன்னந் தொட்டு முறித்து

மை வழித்துத் திருஷ்டி வைத்து

 

பட்டுப் பாவாடை கட்டி

பளபளக்கும் அணிகள் பூட்டி

நீ நடந்து வரும் அழகை

கண்கள் கொட்டாமல் பார்த்து

 

வான் நிலவை வரவழைத்து

வாயினிக்கச் சோறூட்டி

வானவில்லில் தொட்டில் கட்டி

வண்ணத் தமிழ் பாட்டுப் பாடி

 

அன்னையென உனை அழைத்தேன் அஞ்சுகமே

பிள்ளையென உனை அணைத்தேன், கொஞ்சிக் கொஞ்சி தினமே



--கவிநயா