Thursday, July 26, 2007

"திருந்தாத பேயோட்ட நீயிங்கு வாடி!"

"திருந்தாத பேயோட்ட நீயிங்கு வாடி!"

இன்று இரண்டாம் ஆடிவெள்ளி!

இதோ எனக்குப் பிடித்த ஒரு அருமையான பாடல்!

இதைப் படிக்கும் போது, கூடவே ஒலி இணைப்பையும் இயக்கி கூடவே பாடிப் பாருங்கள்!

அற்புதமாய் இருக்கும்!

மறக்காமல் கூழ் ஊற்றுங்கள்.... இல்லை....போய்க் குடியுங்கள்!

அன்னை அருள் புரிவாள்!!.......நிச்சயமாய்!

http://raretfm.mayyam.com/stream//tvserial/Raja_rajeswari-end_credits.rm


"மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி

உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி

கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி

மாயவரம் அபயாம்பிகா.



மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி

காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி

சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா

திருவாரூர் கமலாம்பிகா



நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா

பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா

சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி

ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி

அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி

பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி

ஆரல்வாய் இசக்கி அம்மா,

வாடீ! ஆரணி படவேட்டம்மா!

திருவாங்கூர் மேகவல்லி, தாயி!

திருக்கூடல் மதுரவல்லி!



புதுக்கோட்டை புவனேஸ்வரி

நங்கநல்லூர் ராஜேஸ்வரி

மண்ணடியில் மல்லீஸ்வரி

மாதேஸ்வரம் மாதேஸ்வரி

அலங்காரக் கல்யாணி

நாமக்கல் அரசாணி

அங்காளி, செங்காளி

சந்தோஷி மாதா.



மயிலாப்பூர் கற்பகமே

மலைக்கோட்டை செண்பகமே

செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா !



கஞ்சனூர் வனதுர்கா

மாவூரு ஸ்ரீகாளி

கைலாசப் பார்வதி

மைசூரு சாமுண்டி

வலங்கைமான் திருமாரி

வழி காட்டும் திருப்பாச்சி

உமையாம்பா, தேனாம்பா

மலையம்மா, வேலம்மா

திருவத்தூர் வடிவுடையாள்

காளாஸ்தி ஞானாம்பா

மகராசியே! எங்கள் பாளையத்தம்மா !



விராலிமலை வேக்கண்ணாள்

முக்கூடல் பாவாயி

காரைக்குடியம்மா

பொற்கூடையம்மா !



ஸ்ரீசக்தி ஜய சக்தி

சிவசக்தி நவசக்தி

பாஞ்சாலி, ராக்காயி

பைரவி, சாம்பவி

திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி

திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி



ஓம் சக்தி, ஓம் சக்தி

மருவத்தூர் ஓம் சக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி

உலகாளும் ஓம் சக்தி

வா சக்தி வா சக்தி

வா சக்தி வா சக்தி

உயிர் காக்க வா சக்தி !"

Friday, July 20, 2007

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்


வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள் (வெள்ளை)

உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் (வெள்ளை)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள் (வெள்ளை)


இயற்றியவர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
பாடியவர்: நித்யச்ரி
இராகம்: பிம்ப்ளாஸ்
பாடலைக் கேட்க

இந்தப் பாடலில் மேலும் சில செய்யுள்கள் பாரதியார் பாடியுள்ளார். அவற்றுடன் முழுப் பாடலுக்கும் பொருள் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவில் விரைவில் எழுதுகிறேன்.

ஆடி வெள்ளி - மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா!

K வீரமணி - LR ஈஸ்வரி....நாடி நரம்பு எல்லாம் புடைக்க...அப்படியே உதறல் எடுக்க...கண்கள் கசிய...ரோட்டின் ஒரம் உள்ள எளிமையான மனிதனைக் கூட ஒரு நிமிடம் திகைக்க வைக்கும் குரலுக்குச் சொந்தக்காரர்கள்!

இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அம்மனின் பேர்களையும், ஊர்களின் பேர்களையும், ஒவ்வொன்றாய் பட்டியல் இடும் பாட்டை, நீங்கள் எல்லோரும் கேட்டு மயங்கி இருப்பீர்கள்! - அதை இன்று, இந்தப் பதிவில், எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் கேட்டு இன்புறுங்கள்!

இன்று ஆடி வெள்ளி, முதல் வெள்ளி!
கிராமம்-நகரம் என்று பட்சம் இல்லாது எங்கும் நிறைந்திருக்கும் ஆத்தா மகமாயி...ஏழை எளியோரின் தெய்வம்!
பார்ப்பதற்கு மூடத்தனம் என்று சில பேருக்குத் தோன்றும்! ஆனால் பொங்கலும், கூழும், குலவையும், வேப்பிலையும், தீமிதியும்...
தமிழகத்தின் ஒட்டுமொத்த எளிய மக்கள் வாழ்வைக் காட்டும் கண்ணாடி. அவர்கள் வாழ்விலும், குடும்பங்களிலும் உள்ள ஒரே பற்றுதல்!

கண்ணன் கீதையில் சொன்ன வழி - ஒரு சிறு இலையாவது முழு மனத்துடன் அர்ப்பணிப்பவரைக் காத்து ரட்சிப்பேன் என்பது!
அவன் தங்கை மாயி மகமாயி மணி மந்திர சேகரிக்கும் அஃதே - அதுவே வேப்பிலை!

இலை கூட உனக்குக் கிடைக்க வில்லையா? சரி...தண்ணீர் கிடைக்குமே!
தண்ணீர் கிடைக்க வில்லை என்று....யாரும், எங்கும், எப்போதும் சொல்லவே முடியாதே என்று கண்ணன் உறுதியாகச் சொல்கிறான்! ஏன்?
உன் கண்களில் ரெண்டு சொட்டாவது இருக்குமே தண்ணீர்! அதை அர்ப்பணி!
இதோ அர்ப்பணிக்கிறார் K. வீரமணி!

பாடலைக் கேட்டு பரவசமாக வேண்டுமா? இதோ சுட்டி!
(Currently playing என்று சொன்னாலும்..அந்த "நெறஞ்சு மனசு" சுட்டியைச் சுட்டுங்கள்...It opens the player with an advt first and then the song!)

நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி - உன்னை
நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி
மறைகளும் இதைச் சொல்லுமடி மகமாயி
கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி
நமை ஆளும் நாயகியாம் நல் மகமாயி - கண்
இமை போல காத்திடுவாள் மகமாயி
உமையவள் அவளே இமவான் மகளே
சமயத்தில் வருபவள் அவளே - எங்கள் சமயபுரத்தாள் அவளே!

இசைக் கலையாவும் தந்தருள வேண்டும் என் குலதெய்வமே மகமாயி
தஞ்சமென்று உன்னைச் சரணடைந்தேன் தஞ்சை முத்துமாரி
முந்தை வினைகளைக் களைந்தெறிவாள் தாய் மயிலையிலே, முண்டகக்கன்னி - கோலவிழி பத்திரகாளி
வேண்டும் வரம் தருவாள் என் தாய்....வேற்காட்டுக் கருமாரி



ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்
பாத்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
காத்தாயி மகமாயி கருணை தெய்வம் மாகாளி
நார்த்தமலை வாழும் எங்கள் நாயகியாம் திரிசூலி

நெஞ்சினிலே நிறைஞ்சிருப்பா நிம்மதியைத் தந்திடுவா
வஞ்சகரின் வாழ்வறுப்பா வந்தவினை தீர்த்திடுவா
மஞ்சளிலே குளிச்சி நிப்பா சிங்காரமாச் சிரிச்சு நிப்பா
தஞ்சம் என்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா

மல்லிகைச் சரம் தொடுத்து மாலை இட்டோம் - அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் இட்டோம் - அம்மா
துள்ளியே எந்தன் முன்னே வாரும் அம்மா - அம்மா
தூயவளே எந்தன் தாயீ மாரியம்மா!


பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் - உனக்குப்
பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்
பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் - உனக்குப்
பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்


உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே!
எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் - மற்ற அந்நியரை இவன் கெஞ்சிடுதல் முறையோ அம்மா?கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா! காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!


இந்தச் சின்னவனின் குரல்கேட்டு முகம் திருப்பு - அம்மா
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு! - அம்மா
கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும் - அம்மா
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்

பண்ணமைக்கும் நாவுனையே பாட வேண்டும் - அம்மா
எல்லோரும் பக்தியுடன் கையெடுத்து உன்னையே கும்பிட வேண்டும்
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையது ஆக வேண்டும்





திருவேற்காடு


சமயபுரம்

மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா
மண்ணளக்கும் தாயே குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா
மா மதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா


விருதுநகரிலே முத்துமாரியம்மா
சிவகாசியிலே பத்திரகாளியம்மா
வீரபாண்டியிலே கெளமாரியம்மா
தாயமங்கலத்திலே முத்துமாரியம்மா
இருக்கன்குடியிலே மாரியம்மா
செந்தூரிலே சந்தன மாரியம்மா
ஆரல்வாய்மொழியிலே முப்பந்தலிலே இசக்கி மாரியம்மா
பெருங்கரையிலே சதுரங்கநாயகியம்மா

சிவகங்கையிலே வெட்டுடையார் காளியம்மா
திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா
மணப்பாறையிலே முத்துமாரியம்மா
திருச்சியிலே சமயபுரத்தம்மா வெக்காளியம்மா
சிறுவாச்சூர் மதுரகாளியம்மா

மண்ணளக்கும் தாயே....
தஞ்சையிலே புன்னை நல்லூர் மாரியம்மா
குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா
வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா


தஞ்சை


வேளாங்கண்ணி

நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா
வேளாங்கண்ணியிலே வேளங்கண்ணியம்மா
திருத்துறைப்பூண்டியிலே முள்ளாச்சியம்மா
எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா

ஆரூரிலே சீதளாதேவி எல்லம்மா
பட்டுக்கோட்டையிலே நாடியம்மா
அறந்தாங்கியிலே வீரமா காளியம்மா
திருவப்பூர் மாரியம்மா
கொண்ணையூர் மாரியம்மா
காரைக்குடியிலே கொப்புடைய நாயகியம்மா
கண்கொடுக்கும் தெய்வமே - நாட்டரசன்கோட்டை வாழும் என் கண்ணாத்தா!

மண்ணளக்கும் தாயே....
படவேட்டிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மா
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியம்மா
வெட்டுவானம் எல்லையம்மா
செங்கையிலே மனப்பாக்கம் கன்னியம்மா
செங்கையிலே நாகாத்தம்மா

மண்ணளக்கும் தாயே....
சென்னையிலே மயிலையிலே அருள்மிகு தேவி முண்டகக் கண்ணியம்மா
கோலவிழி பத்ரகாளியம்மா
அல்லிக்கேணியிலே எல்லம்மா
புரசையிலே பாதாள பொன்னியம்மா
மாம்பலத்திலே முப்பாத்தம்மா
வடசென்னையிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா

மண்ணளக்கும் தாயே....
சேலத்திலே அன்னதான மாரியம்மா
ஈரோட்டிலே சின்ன மாரி பெரிய மாரியம்மா
கோவையிலே தண்டுமாரியம்மா கோணியம்மா
சத்யமங்கலத்திலே பண்ணாரி மாரியம்மா

மண்ணளக்கும் தாயே....
வடநாட்டிலே காசி விசாலாக்ஷியம்மா
வங்காளத்திலே காளியம்மா
விஜயவாடாவிலே கனக துர்க்கையம்மா
கர்நாடக மாநிலத்திலே அன்னை சாமுண்டீஸ்வரி சாரதாம்பி்கே மூகாம்பிகையம்மா
தங்கவயலிலே கங்கையம்மா

மண்ணளக்கும் தாயே....
கேரளத்திலே சோட்டாணிக்கரை பகவதியம்மே
கொடுங்கல்லூர் பகவதியம்மே

மண்ணளக்கும் தாயே....
மலேசிய நாட்டிலே மகா மாரியம்மா
சிங்கப்பூரிலே வீரமா காளியம்மா


மலேசியா-ஜோஹர் பாரு


சிங்கப்பூர்

இவையனைத்தும் ஒன்று சேர்ந்த சக்தி சொரூபமே -
அம்மா திருவேற்காட்டில் வாழ்.....
கனவிலும் நினைவிலும் இவன் தொழும்
என் சத்திய தெய்வமே....கருமாரியம்மா.....கருமாரியம்மா.....
இந்த மகனுடைய குறைகளையும் கவலைகளையும் தீரடியம்மா
அம்மா அம்மா அம்மா....அம்மா

அம்மா...
கற்பூர நாயகியே கனகவல்லி, காளி மகமாயி கருமாரியம்மா.....
..
..
..
என்று வேறு மாதிரி இப்போது தொடரும்! பெரீய்ய்ய்ய்ய்ய பாடல்!
அன்புத்தோழி, அப்படித் தொடரும் பாட்டை முந்தைய பதிவுகளில் போட்டாங்க. இதோ சுட்டிகள்! 1 2 3

இன்னமும் தொடரும்...
திருவேற்காட்டில் அன்னைக்கு மந்திரம் முழங்க, குலவை ஒலிக்க, பாடல் தொடர்கிறது...
முடிந்தால் அதை அடுத்த வெள்ளிக்கிழமை இடுகிறேன்!
மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா!
எங்கள் குலதெய்வமே, பாதாள பொன்னியம்மா! - நின் தாள் சரண்!

Wednesday, July 18, 2007

லலிதா நவரத்தின மாலை 3


இப்பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்
{தொடர்ச்சி}


7. கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மரமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே



பூமியில் பிறந்த நான் புரியும் எல்லா செயல்களும் எந்த வித குறைகளும் இல்லாமல் எல்லா பயன்களும் குறைவின்றி கிடைக்கும் வரமும், தியிலிட்டுப் பொசுக்கினாலும் 'ஜெய சக்தி' என்று உன் அருளில் உறுதி கொண்டு அடியேன் சொல்லும் வீரமும், தாயே நீ வந்து தருவாய். மோமேதகமே! குளிர் வான் நிலவே! குழலைப் போல் இனிய வாய்மொழியைக் கொண்டவளே! மாமேரு மலையில் வாழும் கிளியே! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

8. பது மராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராகவிகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே



இன்பம் அருள்பவளே! இன்ப வடிவே! அழகிய கண்கள் உடையவளே! பதுமராகத்தின் ஒளியில் நிறைந்தவளே! அம்மா! நிலையில்லா மன நோய்களை நீக்குபவளே! அனைத்துக் கலைகளையும் அறிந்தவளே! சம்புவின் சக்தியே! நிலவை அணிந்தவளே! தலைவியே! கருநிறத் திருமேனியைக் கொண்டவளே! எல்லா வித அணிகலன்களும் அணிந்திருப்பவளே! மரணமிலா பெருவாழ்வின் உருவே! என்றும் மங்கலகரமானவளே! அழகிய மேருமலை சிகரத்தில் நிலைத்து வசிப்பவளே! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

9. வைடூர்யம்

வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையாரொலி யொத்த விதால்
நிலையற் றெளியேன் முடியத்தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற் றசைவற் றநுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே



நான் செய்த முன்வினைப்பயன்களோ வலையை ஒத்தது. என் மனமோ மானைப் போன்றது. அந்த மான் மருளும் படி அறையும் பறை போன்றவை உலக இன்ப துன்பங்கள். இப்படி வினை வயப்பட்டு இன்ப துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டு மானைப் போல் என் மனம் நிலையற்று எளியேன் அழிந்துப் போகலாமோ? இது தகுமோ? இவையெல்லாம் தூளாகப் போகும் படி வரம் தருவாய். அலைவற்று அசைவற்று இறை அனுபவம் பெறும் அடியார்களின் திருமுடியில் வாழும் வைடூரியமே! மலையத்துவச பாண்டியன் மகளே! மீனாட்சியே! வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

பயன்

எவர் எத்தினமும் இசையாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வா ரவரே (மாதா)


{முற்றும்}

Tuesday, July 17, 2007

லலிதா நவரத்தின மாலை 2

{தொடர்ச்சி}



4. பவளம்



அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிபாரோர்
தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ
எந்தை யிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிருந்தாள்
மந்திர வேத மயப் பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

அந்தி வானம் அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை. சிந்தை நிரம்பும்படி, மகிழும் படி வளம் பொழிந்து இந்த உலகத்தை (பாரை) ஒரு தேன் காடாக இங்கே செய்தவள் யாரோ? அன்னையே! என் தந்தையாம் இறைவரின் இடப்பாகத்திலும் அவர் தம் மனத்திலும் / என் மனத்திலும் இருப்பாள். அவளை எப்போதும் எண்ணுபவர்க்களுக்கு என்றும் அருளும் எண்ணம் மிகுதியாகக் கொண்டாள். மந்திரங்கள், வேதங்கள் இவற்றின் உட்பொருளாவாள். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!




பாட்டை கேட்க இங்கே சொடுக்கவும்



5. மாணிக்கம்


காணக் கிடையா கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித்திரு நாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

எளிதில் காணக்கிடைக்காத நற்கதியானவளே! எண்ணத்தில் எளிதில் கருத முடியாத கலை வடிவானவளே! அணிவதற்கு அரிதான அழகு அணியானவளே! கற்பனைக்கும் எட்டாத புதுமையானவளே! இவற்றை எல்லாம் செய்ய முயன்று முடியாமல் தம் குறைப்பாட்டை எண்ணி நாணி உன் திருநாமங்களையும் உன் துதிகளையும் யார் நவிலவில்லையோ அவர்களை நாடாதவளே! மாணிக்கத்தின் ஒளிக்கதிரானவளே! வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

6. மரகதம்



மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதிலயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பச்சை மரகத உருவையுடையவளே சரணம் சரணம். தேன் பொழியும் திருவடிகளை உடையவளே சரணம் சரணம். தேவர் தலைவன் உன் பாதங்களைப் பணிய திகழ்ந்திருப்பாய் சரணம் சரணம். சுதி, ஜதி, லயம் போன்ற இசை உறுப்புகளாய் இசைவடிவானவளே சரணம். ஹர ஹர சிவ என்று அடியவர் பாடிக் கொண்டு குழும அவர்கள் இறைவரின் அருள் பெறும் படி அருள் புரியும் அமுதமானவளே சரணம். ஒன்பது வித செல்வங்களானவளே சரணம் சரணம். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

{தொடரும்}