Tuesday, July 17, 2007

லலிதா நவரத்தின மாலை 2

{தொடர்ச்சி}



4. பவளம்



அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிபாரோர்
தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ
எந்தை யிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிருந்தாள்
மந்திர வேத மயப் பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

அந்தி வானம் அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை. சிந்தை நிரம்பும்படி, மகிழும் படி வளம் பொழிந்து இந்த உலகத்தை (பாரை) ஒரு தேன் காடாக இங்கே செய்தவள் யாரோ? அன்னையே! என் தந்தையாம் இறைவரின் இடப்பாகத்திலும் அவர் தம் மனத்திலும் / என் மனத்திலும் இருப்பாள். அவளை எப்போதும் எண்ணுபவர்க்களுக்கு என்றும் அருளும் எண்ணம் மிகுதியாகக் கொண்டாள். மந்திரங்கள், வேதங்கள் இவற்றின் உட்பொருளாவாள். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!




பாட்டை கேட்க இங்கே சொடுக்கவும்



5. மாணிக்கம்


காணக் கிடையா கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித்திரு நாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

எளிதில் காணக்கிடைக்காத நற்கதியானவளே! எண்ணத்தில் எளிதில் கருத முடியாத கலை வடிவானவளே! அணிவதற்கு அரிதான அழகு அணியானவளே! கற்பனைக்கும் எட்டாத புதுமையானவளே! இவற்றை எல்லாம் செய்ய முயன்று முடியாமல் தம் குறைப்பாட்டை எண்ணி நாணி உன் திருநாமங்களையும் உன் துதிகளையும் யார் நவிலவில்லையோ அவர்களை நாடாதவளே! மாணிக்கத்தின் ஒளிக்கதிரானவளே! வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

6. மரகதம்



மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதிலயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பச்சை மரகத உருவையுடையவளே சரணம் சரணம். தேன் பொழியும் திருவடிகளை உடையவளே சரணம் சரணம். தேவர் தலைவன் உன் பாதங்களைப் பணிய திகழ்ந்திருப்பாய் சரணம் சரணம். சுதி, ஜதி, லயம் போன்ற இசை உறுப்புகளாய் இசைவடிவானவளே சரணம். ஹர ஹர சிவ என்று அடியவர் பாடிக் கொண்டு குழும அவர்கள் இறைவரின் அருள் பெறும் படி அருள் புரியும் அமுதமானவளே சரணம். ஒன்பது வித செல்வங்களானவளே சரணம் சரணம். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

{தொடரும்}

1 comment:

  1. மாயமாய் காணாமல் போன இடுகையை மீண்டும் (மீட்டு?) கொண்டுவந்ததற்கு நன்றி அன்புத்தோழி. இந்த மூன்று பாடல்களுக்கும் பொருள் எழுதிவிட்டேன்.

    ReplyDelete