சுப்பு தாத்தா மதுவந்தியில் பாடி நம்மை மயங்க வைத்திருப்பது இங்கே.... மிக்க நன்றி தாத்தா!
அவனோடு அவளாக, சிவனோடு சிவையாக
அவனோடு அவளாக, சிவனோடு சிவையாக
சரிபாதி நீயாக ஆனாய் அம்மா!
புவனமொடு ககனமாய் ககனமொடு வானமாய்
பதியோடு பாதியாய் ஆனாய் அம்மா!
வலப்பாகம் தந்தாய்;
இடப்பாகம் கொண்டாய்
ஒருபோதும் பிரியாமல் ஒன்றாய்
அம்மா!
இருளை நீ ஏற்றாய்;
ஒளிஅவனுக் கீந்தாய்
ஒன்றாகிப் பிரியாமல் நின்றாய்
அம்மா!
நெற்றிக் கண்ணும் உன்னால்
குளிர்ந்ததோ அம்மா?
நீள் நிலமும் உனதருளால் நனைந்ததோ
அம்மா?
பற்றிக் கொண்டேன் உன்றன்
பாதங்கள் அம்மா
வற்றாத பேரன்பைத் தருவாய் அம்மா!
அப்பனோ டம்மையாய்
ஆன என் அம்மா
எப்போதும் எந்தையொடு அருள்வாய்
அம்மா!
சித்தரும் சீவர்களும்
சீராட்டும் அம்மா
பக்தியுடன் பாராட்டிப் பணிகின்றேன்
அம்மா!
--கவிநயா




