Wednesday, September 23, 2009

நவசக்தி நங்கையளே! நாதமுடி வானவளே!

நவசக்தி நங்கையளே! நாதமுடி வானவளே!


கலையாத கனவுகளின் நினைவான நிலவொளியே

அலையாடும் நெஞ்சிற்கு ஆறுதலாய் வருபவளே

மலையரசி பெற்றெடுத்த மாதவத்தின் பெரும்பயனே

குலையாத பேரெழிலின் அழியாத நித்தியமே

வலையாடும் வேல்விழியால் வண்ணத்தை இறைப்பவளே

நிலையாக என்நெஞ்சில் நின்றாடும் சுந்தரியே

சிலையாக நின்றென்னைச் சித்தம் குலையச் செய்பவளே

கலையாவும் பயிலவைக்கும் கருத்தான துர்க்கையளே ! 1


உனையெண்ணிப் பாடிவரும் அடியவரின் துயர் தீர்ப்பாய்

உனையன்றி வேறில்லை என்பவரை உயர்த்திடுவாய்

உன்னருளால் இயங்குகிறேன் உலகாளும் தூயவளே

உன்பெருமை பாடுகிறேன் உத்தமியே சுந்தரியே

உன்கண்ணின் ஒளியாலே என்வாழ்வு சிறக்குதம்மா

உன்கைகள் அணைப்பாலே என்மேனி சிலிர்க்குதம்மா

உன்னைப்போல் ஓர்தெய்வம் உலகினில்நான் கண்டதில்லை

உண்மையிது சொல்லிவைத்தேன் உண்மையே நீதானம்மா! 2


ஏனென்று கேளாமல் என்னுள்ளே நீ புகுந்தாய்

தானாக வந்தென்னில் தணியாத சுகம் தந்தாய்

ஊனாடும் உயிரெல்லாம் நிறைந்தங்கே ஒளிசெய்தாய்

மீனாடும் கண்ணாலே மனதினிலே நிறைந்துவிட்டாய்

தேனூறும் சொல்லாலே தித்திக்கும் தமிழ்தந்தாய்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியானாய்

நானாக நானில்லை என்னுமோர் நிலைதந்தாய்

பூணாரம் பூண்டவளே பொன்மகளே துர்க்கையம்மா! 3


மலையமான் மகளாகி மறையோனுக்காய்த் தவமிருந்தாய்

கலையாத பக்தியுடன் ஊசிமுனைத் தவமிருந்தாய்

தலையாடும் கிழவனாகச் சிவன்வரவே நீசிரித்தாய்

பிழையான மொழிபேசும் விருத்தனையே நீசினந்தாய்

பிறழாத பணிவுடனே பணிவிடைநீ செய்திருந்தாய்

அழகான தன் தோற்றம் சிவன்காட்ட நீமகிழ்ந்தாய்

மனங்கொண்ட மணவாளன் மனம்மகிழ மணமுடித்தாய்

எனையாளும் தாய்நீயே என்றென்றும் எனைக்காப்பாய்! 4


பாற்கடலில் நீயுதித்துப் பரந்தாமன் மனையானாய்

ஆர்ப்பரிக்கும் அலைகடலில் அழகே நீ நிதியானாய்

மாலவனின் மார்பினிலே குடியிருக்கும் மங்கையானாய்

சூலம் ஏந்தியேநீ மஹிஷசுர மர்த்தினியானாய்

விஷ்ணு மாயையாய்நீ மாலினைத் துயிலெழுப்பினாய்

மதுகைடப வதம்செய்த மனோஹரியும் நீயம்மா

வணங்கிவரும் அடியவரின் மனதுறையும் பொருள் நீயே

நனியனேன் என்னையும் காப்பதுவுன் கடனம்மா! 5


சொல்விளக்கும்பொருளானாய் சொல்விளக்கமே நீயானாய்

பல்லோரும் போற்றிடவே பார்புகழும் உருவானாய்

கல்லார்க்கும் கற்றார்க்கும் காட்டு மறைப்பொருளானாய்

எல்லாமும் நீயாகி மஹா ஸரஸ்வதியாய்த் திகழ்ந்தாய்

பல்வினைக்கும் சொந்தமானக் கொடியவரை வதம் செய்தாய்

வல்வினையால் வருந்துவோரின் துன்பமெல்லாம் நீ துடைத்தாய்

கல்விக்கே அதிபதியாய் கலைமகளெனும் பேர்பெற்றாய்

சொல்லாலே துதிக்கின்றேன் தூயவளே காத்திடம்மா! 6


ஏழுலகும் போற்றுகின்ற எங்கள்குல நாயகியே

ஏழ்கடலும் வற்றச்செய்யும் ஹூங்காரம் கொண்டவளே

ஏழுதலை நாகமுன்றன் முடிமேலே ஆடுதம்மா

ஏழுசுரம் பாடிவரும் இன்னிசையின் நாயகியே

ஏழ்முனிவர் கைதொழுதுன் அடிபோற்றி வந்தாரம்மா

ஏழேழு பிறவிக்கும் என்றன் துணையானவளே

ஏழ்நிலையில் வீற்றிருந்து யோகியர்க்கு அருள்பவளே

ஏழையெனைக் காத்திடவே எழுந்தோடி வாருமம்மா! 7


எட்டுத்திக்கும் புகழ்மணக்கும் ஏகாம்பரி நாரணியே

எட்டாக்கனியாக எங்கிருந்தோ அருள்பவளே

எட்டியுன்னைக் கண்டிடவோ எனக்குள்ளே தெரிபவளே

எட்டிரண்டு கைகள் கொண்ட எனையாளும் துர்க்கையளே

எட்டிவரும் துன்பங்கள் எனைவருத்தச் செய்யாதே

எட்டாத இன்பங்கள் எனக்கிங்கே இனிவேண்டாம்

எட்டியுன்றன் கால்பிடித்தேன் எனையேற்றுக் கொள்ளம்மா

தட்டாதிப் பாலகனைப் பரிந்தேற்றுக் கொள்ளம்மா! 8


நவமணியே! நவநிதியே! நல்லோரின் துணை நீயே!

நவாவரண நாயகியே! நினைத்தபோது வந்திடுவாய்!

நவயோக சுந்தரியே! நாடுமன்பர் நலம்சேர்ப்பாய்!

நவகோண நாயகியே! நாளுமின்பம் கூட்டிடுவாய்!

நவநவமாய்ப் பொலிபவளே! நெஞ்சினிலே நீயிருப்பாய்!

நவதுர்கை நாயகியே! நோய்பிறப்பு தீர்த்திடுவாய்!

நவசக்தி நங்கையளே! நாதமுடி வானவளே!

நவராத்ரியில் நினைப்பணிந்தேன்! நல்வரம்நீ தருவாயம்மா! 9

*************************************


4 comments:

 1. இப் பாடலை நீராரும் கடலுடுத்த நிலமடந்தை ராகத்தில் சிறிது விருத்தமாக பாடி பார்தால் /? கலையாமல் ..நிலையாக ..வருவாள் .தூர்கை யம்மா ./சித்ரம்

  ReplyDelete
 2. இன்ன வரியென்று சொல்ல முடியாமல் அனைத்துமே வெகு இனிமை. மிக்க நன்றி அண்ணா.

  ReplyDelete
 3. arputhamana paadal.
  youtube le satru nerathil ketkalaam.
  puthiya raagam alla. miha miha pazhamayana raagam.
  a mixture of bhairavi mukhari and husaini.
  subbu rathinam.
  http://menakasury.blogspot.com

  ReplyDelete
 4. அடடே ! இரண்டாவது கமென்ட்ஸ் படித்தபின் தான் கவனிக்கிறேன். இது கவி நயா மேடம்
  எழுதவில்லை போலிருக்கிறதே !!

  குன்றத்தில் அமர்ந்திருக்கும் குமரனோ ? இல்லை ..
  அன்றவன் தந்த உபதேசத்தில்
  அகமகன்ற நாயகனோ ?
  சுந்திர புருசனோ ? சோதியே உருவாயமர்ந்தனவோ ? பிறைச்
  சந்திரனை நெற்றியிலே கொண்டவனோ ? உருவிலா
  இறையோ ? அருவாய் நின்று அருள்பவனோ ?
  மெளனமாய் நின்றவனோ ! மெளலியென
  ஆசிபெற்றழைக்கப்பட்டவரோ !

  யாராயிருப்பினும், அவர்பெயர் நான்
  பாராயிருப்பினும்
  அவன், அவள் எல்லாமே
  அவனியில் அவன் மாயை என உணர்வேன்.
  புவனமதில் எல்லாமே அவன் தானே !!

  சுப்பு ரத்தினம்.
  http://menakasury.blogspot.com

  ReplyDelete