Saturday, September 26, 2009

"கண்ட களிப்பா"

"கண்ட களிப்பா"


கண்டவர் பின்னலையாமல் கண்ணெதிரே கண்டுகொண்டேன்
கொண்டவள் இவளென்றே குவலயத்தில் நான்கண்டேன்
வண்டார்குழலி வண்ணக் கண்ணுடையாள் என்னவளைச்
செண்டார் நாயகியை என்னுள்ளே நான் கண்டுகொண்டேன்!1

கண்டேன் கண்ணெதிரே கனகமணி மகுடம்கண்டேன்
கொண்டேன் இருகைசேர்த்தவளை என்னெஞ்சுள் கொண்டேன்
அண்டம் அனைத்துக்கும் ஆதியான அன்னையிவள் கருணையினால்
பண்டைவினையின் பயனெல்லாம் சிறந்திடவே கண்டேன்!2

கண்டமுகச் சிரிப்பினிலே மனம்நிறையக் கண்டேன்
கொண்டமலர்ச்சரவாசம் நெஞ்சினிக்கக் கொண்டேன்
கொண்டைநிறைக் கூந்தலுடைக் கார்மேகக் கண்மணியை
அண்டமெல்லாம் காப்பவளை என்னுள்ளே கண்டுகொண்டேன்!3

கண்டேன் திருமுகத்தின் ஒளிநிறைக்கக் கண்டேன்
கெண்டைமீனின் துள்ளலாடும் கருவிழிகள் கண்டேன்
தண்டையணி சதங்கைகொஞ்சும் பட்டுமலர்ப்பாதம்
கொண்டவளை நாடியென் நெஞ்சினுள்ளே கொண்டேன்!4

கண்டேன் கருத்தினிலே நிறைந்தவளைக் கண்டுகொண்டேன்
அண்டபகி ரண்டமெலாம் அவளடியில் பணியக் கண்டேன்
கண்டமதில் பொலிகின்ற பொற்றாலிமின்னக் கண்டேன்
கண்டவளை வணங்கியே நெஞ்சினிக்கக் கொண்டேன்!5

கண்டதிரு மேனியிலே காஞ்சிப்பட்டு மின்னக்கண்டேன்
கெண்டைக்கால்களிலே பொன்கொலுசு ஒளிரக் கண்டேன்
செண்டுமலர்த் தாங்கிவரும் கார்மேகக் கூந்தல் கண்டேன்
கண்டவளின் தாள்பணிந்து என்னுள்ளே கொண்டேன்!6

கண்டேன் பொன்னாரம் கழுத்தினிலே மின்னக்கண்டேன்
தண்டுவடப் பொன்னாரப் பதக்கம் மின்னக் கண்டேன்
மொண்டார் பொய்கையென அருள்சுரக்கும் விழிகண்டேன்
கண்டவளைக் கைதொழுது கண்ணாரக் கண்டுகொண்டேன்!7

கண்டவளின் கருணையிலே கண்ணீர் மல்கக் கண்டேன்
மண்டலங்கள் மயங்கவைக்கும் மகத்தான எழில் கண்டேன்
விண்டுரைக்க வொண்ணாத அருள்சுரக்கும் அழகு கண்டேன்
எண்டைவினைதீர்க்க வந்தவளை என்னுள்ளேநான் கொண்டேன்!8

கண்டவரும் விண்டிடாத கவினழகைக் கண்ணாரக் கண்டேன்
கண்டதிலே மகிழ்ந்திடவே கருத்தினிலே எந்நாளும் கொண்டேன்
கொண்டதெலாம் உணர்ந்திடவே மனம்கரையக் கண்டேன்
திண்டாடும் துயரெல்லாம் தீயினால் தூசாகக் கண்டேன்! 9

கண்டதிங்கே சொல்லிடவே குருவருளைத் தேடிக் கண்டேன்
கண்டதிலே ஒன்றியவர் கைபிடித்து நடத்தக் கண்டேன்
கொண்டதெலாம் சிறந்திடவே அமைதியகம் மிகக்கண்டேன்
கண்ட களிப்பாவிற்குக் காரணியாய்த் தாயைக் கொண்டேன்! [10]

****************************

7 comments:

  1. அமுதுண்ட களிப்பாய் ஆனதே மனம் இனிதாய்.

    ReplyDelete
  2. 'அது'கண்டு ஆனதே என்மனம் களிப்பாய்!
    நன்றி!

    ReplyDelete
  3. கண்டேன் கண்டேன்-என அவள்
    கண் தேன் களிப்பாலே

    விண்டேன் விண்டேன்-என அவளை
    விண்டிய வீ.எஸ்.கே

    களிப்பால் களிப் பாவும்-அவள்
    அளிப்பால் அளிப் பாவும்-அவள்
    விளிப்பால் விளிப் பாவும்-அவள்
    நனிப்பால் நல்குவையே!

    வாழி நவராத்திரிப் பதிவுகள்!

    ReplyDelete
  4. //கண்டேன் கண்டேன்-என அவள்
    கண் தேன் களிப்பாலே

    விண்டேன் விண்டேன்-என அவளை
    விண்டிய வீ.எஸ்.கே

    களிப்பால் களிப் பாவும்-அவள்
    அளிப்பால் அளிப் பாவும்-அவள்
    விளிப்பால் விளிப் பாவும்-அவள்
    நனிப்பால் நல்குவையே!

    வாழி நவராத்திரிப் பதிவுகள்!//

    மிக்க நன்றி ரவி. அவள்பால் நோக்கு வைப்பால் முப்பால் அளிப்பாள்!

    ReplyDelete
  5. கண்ட களிப்பினை கண்டதிலேயே களிப்பு மிகுந்தது. நன்றி அண்ணா.

    ReplyDelete
  6. //கண்ட களிப்பினை கண்டதிலேயே களிப்பு மிகுந்தது. நன்றி அண்ணா.//

    இறையவன் உண்டு கண்டவர் சொன்னார்
    மறைநூல் பொருளின் சாரம் இதுவே
    நம்பிடும் நல்லவர் சொல்லிய சொல்லால்
    நானும் நம்பினேன் நீ வருவாயென
    இன்றையப் பொழுதின் செயல்கள் யாவிலும்
    நின்னருள் ஓங்கி நித்தமும் துலங்க
    இறையவா நீயே என்னுடன் இருக்கும்
    ஒருவரம் கேட்பேன் உடனே அருள்வாய்!

    எனச் சொல்வதும் இதுபோல கண்ட களிப்பாவைக் கேட்டே களிப்படைவதுதான் கவிநயா! நன்றி!
    அனைவருக்கும் இனிய விஜய தசமி வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. //இறையவன் உண்டு கண்டவர் சொன்னார்
    மறைநூல் பொருளின் சாரம் இதுவே
    நம்பிடும் நல்லவர் சொல்லிய சொல்லால்
    நானும் நம்பினேன் நீ வருவாயென
    இன்றையப் பொழுதின் செயல்கள் யாவிலும்
    நின்னருள் ஓங்கி நித்தமும் துலங்க
    இறையவா நீயே என்னுடன் இருக்கும்
    ஒருவரம் கேட்பேன் உடனே அருள்வாய்!//

    ஆஹா, நன்கு சொன்னீர்கள்! நன்று; நன்றி!

    ReplyDelete