Sunday, October 10, 2010

"ஸ்ரீ லலிதா நவமணி மாலை"


"ஸ்ரீ லலிதா நவமணி மாலை"


காப்பு

எல்லாம் தருவான் எதையும் தருவான்
அல்லாதன வெல்லாம் அகற்றிட வருவான்
நல்லோர் புகழும் லலிதையின் தோத்திரம்
சொல்லா லிசைத்திட கணபதி காப்பான்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
********

நவமணி மாலை.

அன்பின் திருவாய் அகமெலாம் திறந்திட
ஆயிரங்கையுடன் நீயெதிர் வந்தாய்
துன்பம் நீங்கிடத் தயவுட னணைத்தே
தாயென நின்னிரு தாளெனக் கீந்தாய்
நின்பத மொன்றே கதியென வேண்டிடும்
அடியவர் நெஞ்சினில் அமைந்துநீ இருப்பாய்
மன்புகழ் வயிரப் படைவாள் கொண்டயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

கோலம் இட்டுனைக் கூடத்துள் அழைத்தேன்
கோணம் நடுவினில் நீவந் தமர்ந்தாய்
மாலைகள் சூட்டியே பாக்களும் படித்தேன்
மங்கலமாய் நின் திருமுகம் கண்டேன்
சோலைத் தருவே சுந்தர வடிவே
சோகம் அகற்றியென் வாழ்வினில் மலர்வாய்
நீலக் கடலனை நித்தில மேயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

தத்தும் மழலையின் தளிர்நடை கண்டே
தாயவள் மகிழும் பாங்கினை யொத்தாய்
கத்துங் கிளியின் கவினுறு வெழிலாய்
பாயும் ஒளியாய்ப் பரவசம் தந்தாய்
வித்தகியே நவ ராத்ரியின் நாயகி
தோயும் அன்பினைத் தினந்தினம் தருவாய்
முத்தே ரனையமென் முறுவலைப் பூக்குமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

முந்தையென் வினைகள் யாவும் நீங்கிட
எந்தாய் நினையே சரண மடைந்தேன்
சிந்தையில் நினைந்தே தினம்நான் துதித்தேன்
வாராதிரு ந்திட மனமோ அம்மா
தந்திடும் வரங்கள் சொல்லிடத் தகுமோ
தாயே எனக்குநின் பதமலர் தருவாய்
வந்தே நிரம்ப வளம்நீ தருவாயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

காணி நிலமும் கழஞ்சும் வேண்டேன்
கருதும் எதுவும் இனியான் வேண்டேன்
ஆணிப் பொன்னும் ஐஸ்வர்யம் வேண்டேன்
விரும்பும் எவையும் எனக்கென வேண்டேன்
நாணிக் கோணி நீநகர்ந்து செல்லாதுன்
தாளிணை சுகமே எனக்கினி வேண்டும்
மாணிக்கப் பரல் தண்டைகள் குலுங்குமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

வரமிதை அளிப்பாய் வாழ்வுடைத் தாயே
வந்தென் தாபத்தைத் தீர்த்தெனை யணைப்பாய்
பரகதி தந்தென் வாழ்வினை நிறைப்பாய்
பிறவியிலாதொரு நிலையினைத் தருவாய்
சுரமிசை பாடியென் உள்ளத்து ளழைத்தேன்
சுவைதரும் படையலும் உனக்கென வைத்தேன்
மரகதப் பதக்கம் மின்னிடும் தேவியென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

மாமேரு வினில்நடு நாயகி நீயே
துர்கா லக்ஷ்மி சரஸ்வதி நீயே
பாமேல் வந்திடும் பாலகி நீயே
பணிபவர் நெஞ்சினுள் உறைபவள் நீயே
பூமே லமர்ந்திடும் தாயவள் நீயே
புனித நவராத்ரி நாயகி நீயே
கோமே தகமே குணவதியே யென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

உதித்திடு முச்சித் திலகமும் நீயே
உண்மையின் வடிவமாம் உமையவள் நீயே
துதித்திடு மன்பரின் துணைநலன் நீயே
தொல்லைகள் நீக்கிடும் துர்க்கையும் நீயே
மதியொளி மகுடம் தாங்கிடும் தேவியே
கதியென வுன்னிரு பதமலர் அருளே
பதும ராகமணி மாலைகள் புனையுமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

தடுத்தெனை யாண்டிடத் தாயே வருவாய்
தயவுகள் புரிந்துன் சேயெனைக் காப்பாய்
அடுத்திடும் கவலைகள் அணுகிடா வண்ணம்
அன்புருவே யெனை அனுதினம் காப்பாய்
கொடுத்திடும் குருவாய்க் குழந்தையாய் வந்தென்
வினைத்துய ரகற்றியே முத்தியைத் தருவாய்
வைடூரிய நவ மாலை யணியுமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
********
நவநா யகியரின் தாயினைப் போற்றும்
நவமணிமாலையில் வாழ்ந்திடும் தேவி
நவநவ பாக்கியம் அனைத்தையும் தந்தே
நலமுடன் காப்பாள் தாயே சரணம்!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
******************************************

"அன்னையருள் அருகிருக்கும்!"
"அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!"

11 comments:

 1. நிரம்ப வளம் - பவளம் மிக அருமை.
  நவராத்திரி சமயத்தில் அன்னைக்கு அருமையான நவமணி மாலை.

  ReplyDelete
 2. அருமை அண்ணா!

  ReplyDelete
 3. அன்னையருள் எப்போதும் எல்லாருக்கும் அருகிருக்க வேண்டுகிறேன் கைலாஷி சார், கவிநயா!

  ReplyDelete
 4. //காணி நிலமும் கழஞ்சும் வேண்டேன்
  கருதும் எதுவும் இனியான் வேண்டேன்
  ஆணிப் பொன்னும் ஐஸ்வர்யம் வேண்டேன்
  விரும்பும் எவையும் எனக்கென வேண்டேன்//

  இதில் ஒரு சுவையான நகையும் நகைச்சுவை ஆக இருக்கிறது.
  வ்யங்க்ய ரஸம் என்று சொல்வார்கள்.

  வேண்டேன் என்று சொன்னால் என்னை நம்பி இருக்கும் மனைவி, மக்கள் கதி !!!
  ஏது ! என் மனைவி, மக்கள், மச்சான் ஆனவர்
  கோபிப்பாரோ என ஐயம் கொண்டு,
  " எனக்கென " வேண்டேன் என்று சொல்கிறீர்களோ !!

  ஸேஃப் சைடு Always better.
  ஆல் த பெஸ்ட் நவராத்ரி வாழ்த்துக்கள்.
  ஃபார் யூ அன்ட் யுவர் ஃபாமிலி .

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 5. விரும்புகின்ற எதையுமே எனக்கு வேண்டுமென வேண்டமாட்டேன் எனவும் கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்டிருக்கிற மாதிரியும் கொள்ளலாம் ஐயா! எழுதிய உடனேயே லேசாக ஒரு சிரிப்பு வந்தது. மாற்ற வேண்டாமே என அப்படியே இட்டுவிட்டேன்!

  தங்களுக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள் ஐயா!

  ReplyDelete
 6. சூப்பரோ சூப்பர்!
  சூரி சார் சூப்பர்! :)

  SK ஐயா "எனக்கென வேண்டேன்"-ன்னு இந்தப் பதிவில் சொல்லி இருக்காரு!

  அடுத்த பதிவில், அம்மன் பாட்டு அன்பர்களுக்காக, இதையெல்லாம் வேண்டுகிறேன், விரைவில் தருவாய்-ன்னு சொல்வார் பாருங்க! :))

  ReplyDelete
 7. மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
  மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

  பின்னூட்டங்கள் மிகவும் ரசிக்கும்படி இருக்கின்றன. :-)
  *****
  வேண்டத் தக்க தறிவோய்நீ
  வேண்ட முழுதுந் தருவோய்நீ
  வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
  வேண்டி என்னைப் பணிகொண்டாய்
  வேண்டி நீயா தருள்செய்தாய்
  யானும் அதுவே வேண்டின் அல்லால்
  வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
  அதுவும் உன்றன் விருப்பன்றே.
  -- திருவாசகம்

  ReplyDelete
 8. //அடுத்த பதிவில், அம்மன் பாட்டு அன்பர்களுக்காக, இதையெல்லாம் வேண்டுகிறேன், விரைவில் தருவாய்-ன்னு சொல்வார் பாருங்க! :))//

  அன்னையருள் அருகிருக்க வேறென்ன வேண்டும் ரவி!:)))))))

  ReplyDelete
 9. //பின்னூட்டங்கள் மிகவும் ரசிக்கும்படி இருக்கின்றன. :-)
  *****//

  அப்பிடீன்னா, பாட்டு?:))))))))

  ReplyDelete
 10. அடுத்த பதிவிலென்ன ரவி? இதுலியே கைலாஷி சாருக்கு பதிலா அதைத்தானே சொல்லியிருக்கேன்!:))))))))

  //அன்னையருள் எப்போதும் எல்லாருக்கும் அருகிருக்க வேண்டுகிறேன் கைலாஷி சார்,//

  ReplyDelete
 11. // அப்பிடீன்னா, பாட்டு?:)))))))) //

  :-))))
  தவறாகக் கொள்ள வேண்டாம். அம்மன் பாட்டில் பாடல்கள் எப்பொழுதும் அருமையாக (பக்தியை வளர்க்கும் விதமாக) தான் இருக்கும். :-)
  "எனக்கென வேண்டேன்" என்பதை படித்தவுடன் சிரித்து விட்டேன். என்னைப் போலவே ஒருவர் இருக்கிறாரே என்று. :-)
  சுப்பு தாத்தா, "ஸேஃப் சைடு Always better." என்று சொல்லி மேலும் சிரிக்க வைத்து விட்டார். :-)

  ReplyDelete