Tuesday, April 7, 2020

ஓம் சக்தி - 2


(போன வாரத்தின் தொடர்ச்சி என்று கொள்ளலாம். அதே சந்தத்தில்...)
தன்ன னன்ன தன்ன னன்ன தன்ன னன்ன தனனன

தன்ன னன்ன தன்ன னன்ன தன்ன னன்ன தனனன

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி

காடு போன்ற வாழ்வில் வழி காட்டும் ஒளி நீயன்றோ
கண்களினால் கருணை செய்து துயர் துடைக்கும் தாயன்றோ
உன்புகழை நாளும் பாடும் நானும் உன்றன் சேயன்றோ
அன்புடனே அரவணைத்துக் காப்பதுன்றன் கடனன்றோ

தேவர்களும் முனிவர்களும் போற்றுகின்ற அரசியே
வேதங்களின் நாதமாக விளங்குகின்ற அன்னையே
மூவருக்கும் முதலாகி நின்ற ஆதி மூலமே
முன்நின்று காக்க வேணும் ஆதி பராசக்தியே

நாவு நைய உன்றன் நாமம் நாளும் நானும் நவின்றிட
நெஞ்சம் நைய உன்நினைவில் நாளும் ஆழ்ந்து வாழ்ந்திட
மெய் விதிர்த்துப் புளகம் கொண்டு விழியில் நீரும் மல்கிட
கை கொடுத்துக் காக்க வேணும் உயிர் கொடுத்த சக்தியே

மனிதனாகப் பிறப்பெடுக்கும் பேறு தந்த அன்னையே
புனிதனாக்கி உன்நிழலில் வைத்திடுவாய் என்னையே
இனியனாக்கி உன்புகழே பாடச் செய்வாய் அன்னையே
இலையெனாதிவ் வரமளித்துக் காத்திடுவாய் என்னையே

உன்னையன்றி தெய்வம் என்று வேறு ஒன்று இங்கில்லை
அன்னையன்றி அன்பு காட்ட பிள்ளைகட்கு ஆளில்லை
சொல்லி வைத்த தமிழில் ஒரு சொல்லையேனும் கேட்டு வா
அள்ளி வைத்த என்றன் அன்பை ஏற்றுக் கொள்ள விரைவில் வா

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி


--கவிநயா

No comments:

Post a Comment