Monday, November 9, 2020

எங்கும் நீ! எதிலும் நீ!

 

எங்கும் உன்றன் எழில் கண்டேன்

எதிலும் உன்மதி முகம் கண்டேன்

பண்ணில், பரதத்தில், பற்பல கலைகளில்

உன் கைவண்ணம் தான் கண்டேன்

(எங்கும்)

 

மண்ணில் பூத்த மலர்களின் அழகில்

உன்றன் மஞ்சள் முகம் கண்டேன்

விண்ணில் ஒளிரும் கதிரவன் ஒளியில்

உன்றன் விழியின் ஒளி கண்டேன்

 

மேகம் மாற்றும் உடை கண்டேன், அதிலே

உன்றன் நிறம் கண்டேன்

தாகம் தீர்க்கும் மழை கண்டேன், அதிலே

உன்றன் அருள் கண்டேன்

(எங்கும்)

 

இயற்கை யெல்லாம் உன் வடிவே

இயங்குவ தெல்லாம் உன் செயலே

மருளும் மயக்கமும் உன் வயமே

தெளிந்தால் அனைத்தும் சின் மயமே

(எங்கும்)



--கவிநயா



No comments:

Post a Comment