Tuesday, December 22, 2020

உமையே நமக்குத் துணையே

 

செக்கர் வானம் போலச் செக்கச் சிவந்திருக்கும் அழகி

கருத்த மேகம் போலக் கூந்தல் அலைந்திருக்கும் அழகி

மன்மதனைச் சுட்டவனைக் கவர்ந்திழுக்கும் அழகி

மாயை என்னும் பேரில் நம்மை மயக்கி வைக்கும் அழகி

 

வேதங்களின் வேர்கள் அவள், கிளை இலைகள் அவளே

வேண்டுவதைத் தந்திடுவாள், இல்லை என்காள் அவளே

வீறு கொண்டு காளி எனச் சீறி நிற்பாள் அவளே

மாறு கொண்ட பகைவர்களைச் சிதறடிப்பாள் அவளே

 

கூறி வரும் அடியவர்க்குக் கொடை வள்ளல் அவளே

பாடி வரும் பக்தருக்குப் பதம் அளிப்பாள் அவளே

அண்டி வந்தால் அன்னையென அரவணைப்பாள் அவளே

வஞ்சியவள் நிழலையன்றி ஏது நமக்குத் துணையே

 

கன்றழுதால் தாளாத தாய்ப் பசுவும் அவளே

கலங்கி நின்றால் கை கொடுத்துக் காப்பவளும் அவளே

விடையேறி எந்தையுடன் பவனி வரும் அவளே

விடையாக வந்து நமது வினையறுப்பாள் உமையே



--கவிநயா



No comments:

Post a Comment