Monday, December 7, 2015

வட்டத் திருமுகம்

 
சுப்பு தாத்தா அனுபவித்துப்  பாடித் தந்தது... அவருக்கு மிகவும்ம் பிடித்து விட்டதாம். மிக்க நன்றி தாத்தா!



வட்டத் திருமுகம் கண்களில் பட்டதும்
நெஞ்சில் ஒட்டிக் கொள்ளுமே, அவள்
வட்டக் கருவிழி பட்டு விட்டால் இனி
மற்றதெல்லாம் சுகமே!
(வட்டத்)

மீன்தன் குஞ்சுகளைக் காப்பது போல் அவள்
நம்மையும் காத்திடுவாள், அவள்
நான்மாடக் கூடலில் மீனாட்சி என்றதோர்
பேர் கொண்டு வாழுகின்றாள்!

காமனை எரித்த காதல் கணவனைக்
கண்களால் கட்டி வைத்தாள், அவள்
காஞ்சி மாநகரில் காமாக்ஷி என்றதோர்
பேர் கொண்டு வாழுகின்றாள்!

நீலக் கடல் போல நீண்ட விழிகளால்
நீள் நிலம் ஆளுகின்றாள், அவள்
காசி நகரில் விசாலாகஷி என்றதோர்
பேர் கொண்டு வாழுகின்றாள்!
(வட்டத்)

அவள் கண்களைக் கண்டு விட்டால்
கண்ட காட்சியெல்லாம் மறக்கும்,
அவள் செவ்விதழ் புன்னகையில்
நம் சிந்தையெல்லாம் கிறங்கும்,
அவள் சின்னத் திருவடியைப்
பாடச் செந்தமிழ் ஓடி வரும்,
அவள் வண்ணங்களைச் சொல்ல
அந்த வானவில் ஆடி வரும்!
(வட்டத்)


--கவிநயா

No comments:

Post a Comment