Sunday, July 8, 2007

"மாரியம்மன் தாலாட்டு" 20 [511-550]


"மாரியம்மன் தாலாட்டு" 20 [511-550]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள் 511-550]

[முத்தெல்லாம் இறக்கிய தாய் இன்று முதல் ஊர்கோலம் கிளம்புகின்றாள்! எப்படி அழைக்கின்றார்கள், பாருங்கள்! வாருங்கள்! நாமும் அம்மனுடன் செல்வோம்!]



பெருமாளுடன் பிறந்து பேருலகை யாண்டவளே

ஆயனுடன் பிறந்து அம்மைமுத்தாய் நின்றவளே

திருகோணத் துள்ளிருக்கும் திரிபுர சவுந்தரியே

ஆறாதா ரப்பொருளே அபிஷேகப் பத்தினியே

மூலாதா ரப்பொருளே முன் பிறந்த தேவதையே

தாயே துரந்தரியே சர்வலோ கேஸ்வரியே

பத்திரியால் தான்தடவி பாரமுத்தைத் தானிறக்கும்

வேப்பிலையால் தான்தடவி மெல்லியரே தானிறக்கும்

மேனியெல்லாந் தானிறக்க மெல்லியரே தானிறக்கும்

இறக்கிறக்குந் தாயாரே எங்களைக்காப் பாற்றுமம்மா [520]


முத்திலு முத்து முகத்திலிடு மாணிமுத்து

எங்கும் நிறைந்த எல்லார்க்கும் மாரிமுத்து

பெண்ணாய்ப் பிறந்து பேருலகை யாளவந்தாய்

பேருலகை யாளவந்தாய் பெண்ணரசி மாரிமுத்தே

நித்தம் பராமரிக்க நிஷ்ட்டூரி நீ பிறந்தாய்

தேசம் பராமரிக்க தெய்வகன்னி நீ பிறந்தாய்

கிளியேந்தும் நாயகியே கிளிமொழியே தாயாரே

நித்தியக் கல்யாணி நீலி பரஞ்சோதி

அம்மணியே பார்வதியே ஆணிமுத்துத் தாயாரே

லோகமெல்லாம் முத்தளக்கும் லோகபர மேஸ்வரியே [530]



வெற்றிக்கொடி பறக்க விருதுபம்பை தான்முழங்க

எக்காள மூதிவர எங்கும் கிடுகிடென்ன

பஞ்சவர்ண டால்விருது பக்கமெல்லம் சூழ்ந்துவர

நாதசுர மேளம் நாட்டியங்க ளாடிவர

தப்பட்டை மேளம் தவில்முரசு தான்முழங்க

தாளங்கள் ஊதிவர கவிவாணர் எச்சரிக்க

சின்னங்கள் ஊதிவர சிறப்பாய்க் கொடிபிடிக்க

ஜண்டா சிலர்பிடிக்க தனிமுரசு தானடிக்க

கொடிகள் சிலர்பிடிக்க கொக்கரிப்பார் வீரமக்கள்

சாமரைகள் தான்வீசி சந்திப்பார் வீரமக்கள் [540]


தாரை பூரி சின்னம் ஆரவர மாய்முழங்க

தக்க வுடுக்கைகளும் தவிலோடு பம்பைகளும்

மிக்க கவுண்டைகளும் மிருதங்கந் தான்முழங்க

நன்மகுடி யுஞ்சுதியும் நன்றாக ஊதிவர

தம்புரு வீணை தக்கபடி தான் வாசிக்க

பம்பை யடித்துப் பறமேளந் தானதிர

கெண்செட்டு வாத்தியமும் கிளர்நெட்டு வாத்தியமும்

கொடுவாத்தி யம்புதிதாய் கொண்டுவந்தர் உன்மக்கள்

இத்தனை வாத்தியங்கள் இசைக்கின்றார் பாருமம்மா
[550]


[வாத்தியங்கள் இசைத்திட அம்மன் வருவாள்!]



No comments:

Post a Comment