Tuesday, July 10, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 22 [590-610]


"மாரியம்மன் தாலாட்டு" -- 22 [590-610]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள்[590-610]

[இத்தனை பேர் வருந்தியழைக்கிறார்கள்!


வராமல் இருப்பாளா அன்னை!


"கல்லோடி அவள் மனது?"


வருகிறாள்!


ஒவ்வொரு படியாக ஏறி வருகிறாள்!


மனக்கண்ணில் அனுபவித்து உணருங்கள்!


அன்னை நலம் புரிவாள் நிச்சயம்!]




ஓராம் படித்தளமாம் ஓலைப்பூ மண்டபமாம்

ஓலைப்பூ மண்டபத்தில் உகந்து கொலுவிருந்தாள்

இரண்டாம் படித்தளமாம் இரத்தின சிம் மாதனமாம்

இரத்தின சிம்மாதனத்தி லிருந்தரசு தான்புரிவாள்

மூன்றாம் படித்தளமாம் முனைமுகப்புச் சாலைகளாம்

முனைமுகப்புச் சாலைகளில் முந்திக் கொலுவிருந்தாள்

நான்காம் படித்தளமாம் நவரத்ன மண்டபமாம்

நவரத்தின மண்டபத்தில் நாயகியும் வந்தமர்ந்தாள்

ஐந்தாம் படித்தளமாம் அழுந்தியசிம் மாதனமாம்

அழுந்திய சிம்மாதனத்தில் ஆயி கொலுவிருந்தாள்

ஆறாம் படித்தளமாம் அலங்காரச் சாவடியாம் [600]


அலங்காரச் சாவடியில் ஆய்ச்சியரும் வந்திருந்தாள்

ஏழாம் படித்தளமாம் எழுதிய சிம் மாதனமாம்

எழுதிய சிம்மாதனத்தி லீஸ்வரியாள் கொலுவிருந்தாள்

எட்டாம் படித்தளமாம் விஸ்தார மேடைகளாம்

விஸ்தார மேடைகளில் விமலியரும் வந்தமர்ந்தாள்

ஒன்பதாம் படித்தளமாம் ஒருமுகமாய் நின்றசக்தி

ஒருமுகமாய் நின்றசக்தி உத்தமியுங் கொலுவிருந்தாள்

பத்தாம் படித்தளமாம் பளிங்குமா மண்டபமாம்

பளிங்குமா மண்டபத்தில் பத்திரியாள் கொலுவிருந்தாள்

ஆத்தாள் கொலுவிலேதான் ஆரார் கொலுவிருந்தார் [610]



[அதானே! ஆரெல்லாம் ஆத்தாள் வருவதை அறிந்து அங்கே வந்திருக்கிறார்கள்? நாளை அனைவரையும் காணலாம்!]



2 comments:

  1. பளிங்குமா மண்டபத்தில் பத்திரியாள் கொலுவிருந்தாள்

    ஆத்தாள் கொலுவிலேதான் ஆரார் கொலுவிருந்தார் [610]


    [அதானே! ஆரெல்லாம் ஆத்தாள் வருவதை அறிந்து அங்கே வந்திருக்கிறார்கள்? நாளை அனைவரையும் காணலாம்!]

    அனைவரையும் ஊகிக்க முடியவிலலை - இருவரை மட்டும் மனத்திரையில் காணமுடிகிறது!
    மூஷிகவாகனனும், மயில்வாகனும்
    இருந்திருப்பார்கள் - சரிதானே அய்யா?

    ReplyDelete
  2. யாரெல்லாம் என இதோ போடப்போகிறேன் ஐயா!

    நீங்கள் வருவது மனமகிழ்வாய் இருக்கிறது.

    ReplyDelete